போடி- -போடி அருகே பங்காருசாமி நாயக்கர் கண்மாய் பகுதியில் ஷட்டர்கள் பழுதால் கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீர் வீணாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
போடி - தேனி மெயின் ரோட்டில் 107 ஏக்கரில் அமைந்துள்ளது பங்காருசாமி நாயக்கர் கண்மாய். குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பெய்யும் மழை நீர் அணைப்பிள்ளையார் அணை ஆறு வழியாக இக்கண்மாய்க்கு நீர் வருகிறது.
நீர் நிரம்பியதும் அருகே உள்ள மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய்க்கு நீர் சென்றடையும். இக்கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் 1300 ஏக்கர் நேரடியாகவும், 400 ஏக்கர் மறைமுகமாகவும் பாசனவசதி பெறுகின்றன. கண்மாய் முழுவதும் முட்செடிகளின் ஆக்கிரமிப்பால் கொட்டகுடி ஆற்றில் இருந்து வரும் மழை நீரை முழுவதும் கண்மாயில் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கண்மாய் தெற்கு, வடக்கு, மையபகுதி ஷட்டர்கள் முழுவதும் சேதமடைந்து பல ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்காததால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.
சேதமடைந்த ஷட்டர்கள்
ஆர்.வாசுகன், விவசாயி அணைக்கரைப்பட்டி: கண்மாயில் நீர் தேங்குவதன் மூலம் அணைக்கரைப்பட்டி, மீனாவிலக்கு, தோப்புப்பட்டி, பொட்டல்களம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, ஆயிரம் ஏக்கர் பாசனவசதி பெறும். கண்மாயில் தெற்கு மடைக்கான ஷட்டரின் அடிப்பகுதி முழுவதும் சேதம் அடைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இதனால் கண்மாய்க்கு வரும் மழை நீரில் 40 சதவீதம் வீணாக வெளியேறுகிறது. இதனால் வெயில் காலத்தில் நீரின் அளவு குறைந்து விடுகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு தெற்குமடை ஷட்டரை சீரமைக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் செய்யாமல் வேறு பணிகளுக்கு நிதி பயன்படுத்தப்பட்டன.
வடக்கு பகுதி ஷட்டர் சேதம் அடைந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் கண்மாயில் மழை நீரை முழுவதும் தேக்க முடியாமல் வீணாக வெளியேறி வருகிறது.
தெற்கு பகுதி ஷட்டர் பழுதாகி உள்ளதால் வெளியேறும் நீர் மேல்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வரத்து வாய்க்கால் தூர்வருவதன் மூலம் கீழ் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகளில் நீர் தேங்கி பயன்பெறும்.
தண்ணீர் வீணாவதை தடுக்க சேதமடைந்த தெற்கு ஷட்டர் பகுதியில் தற்காலிக மணல் மூடைகளை அடுக்கி ஓரளவிற்கு நீரை தேக்குகின்றனர். நிரந்தர தீர்வாக சேதமடைந்த ஷட்டர்கள் தரமாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரையை பலப்படுத்த வேண்டும்
எல்.வெங்கடேஷ், விவசாயி, அணைக்கரைப்பட்டி: கண்மாய்க்கு நீர் வரத்து பாதையான கொட்டகுடி ஆறு, ராஜவாய்க்கால் ஆற்றின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் பாதை குறுகலாக உள்ளது. இதனால் நீர் வரத்து குறைந்து நீரை முழுவதும் சேமிக்க முடிவதில்லை.
வரத்து கால்வாய், கண்மாயில் வளர்ந்துள்ள முட்செடிகள் மரங்களாகி அதன் வேர்கள் ஷட்டர், தடுப்பு பகுதிகளை சேதப்படுத்துகின்றன. முட்செடிகள், ஆகாயதாமரைகளை அகற்ற வேண்டும்.
விவசாயிகள் இடுபொருட்கள், விளை பொருட்களை கொண்டு வரும் வகையில் கரையை அகலப்படுத்தி,பலப்படுத்த வேண்டும்.
கண்மாயை தூர்வாரி சேதமடைந்த இரு ஷட்டர்களை சீரமைத்து மழைநீர் முழுவதும் கண்மாயில் தேக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!