தமிழக நிகழ்வுகள்
பா.ஜ., நிர்வாகி படுகொலை: 7 பேர் கோர்ட்டில் சரண்
வில்லியனுார் : முன் விரோதத்தால் பா.ஜ., பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இவ் வழக்கு தொடர்பாக 7 பேர் நேற்று திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் செந்தில்குமரன்,45; மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர்.இவர், நேற்று முன்தினம் இரவு 9:40 மணி அளவில், வில்லியனுார்-விழுப்புரம் சாலை கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிஅருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது, மூன்று பைக்கில் முகத்தில் 'மாஸ்க்' அணிந்து வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் செந்தில்குமரன் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. மயங்கி விழுந்த செந்தில்குமரன் கழுத்து மற்றும் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல் தப்பி சென்றது.
கடையடைப்பு
செந்தில்குமரன் படுகொலையை கண்டித்து நேற்று வில்லியனுார் பகுதியில் வியாபாரிகள்கடைகளை அடைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மறியல்
குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று காலை 9:30 மணியளவில் வில்லியனுார் புறவழிச்சாலை எம்.ஜி.ஆர்., சிலை அருகில் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் எஸ்.பி., ரவிக்குமார், நான்கு பேரை கைது செய்துள்ளதாக கூறினார். அதனைத் தொடர்ந்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.மதியம் 12:45 மணிக்கு பிரேத பரிசோதனை முடிந்து உடல் ஆம்புலன்சில் வில்லியனுாருக்கு கொண்டு வந்தபோது எம்.ஜி.ஆர்., சிலை அருகில் நிறுத்தி மீண்டும் மறியல் போராட்டம் நடந்தது.
பின்னர், உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருச்சியில் சரண்
செந்தில்குமரன் படுகொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான திருக்காஞ்சியை சேர்ந்த நித்தியானந்தம், 43; கொம்பாக்கம் சிவசங்கர்,23; கோர்க்காடு ராஜா,23; கார்த்திகேயன், 23; தனத்துமேடு வெங்கடேஷ், 25; திருக்காஞ்சி அடுத்த தமிழக பகுதியான கிளிஞ்சிகுப்பத்தை சேர்ந்த பிரதாப், 24; மற்றும் அரியாங்குப்பம் விக்னேஷ்,26; ஆகிய 7 பேர் நேற்று திருச்சி கோர்ட்டில் சரணடைந்தனர்.
காப்பாற்றியவர் கொலை
நித்தியானந்தம் மீது, 4 கொலை, 4 கொலைமுயற்சி, இரு கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளது. ரவுடியான நித்தியானந்தம் கடந்த 2018 வரை மூன்று முறை 'குண்டாஸ்' சட்டத்தில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
அதன் பிறகு செந்தில்குமரனுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது, கஞ்சா வழக்கில் நித்தியானந்தம் மீது குண்டாஸ் சட்டம் போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது காங்., ஆட்சியில் தனது செல்வாக்கை பயன்படுத்தி குண்டாஸ் வழக்கில் இருந்து நித்தியானந்தத்தை, செந்தில்குமரன் காப்பாற்றினார். அதனால், இருவருக்கும் இடையே நட்பு அதிகரித்தது.
பஞ்சாயத்தால் பகை
நித்யானந்தத்தின் பூர்வீக சொத்து வழக்கில் இருந்தது. செந்தில்குமரன் முயற்சியால் வழக்கு முடிவுக்கு வந்ததால், இடம் விற்கப்பட்டது. அப்போது, நித்யானந்தம் தனது குடும்பத்தாரிடம் அதிக பங்கு கேட்டு பிரச்னை செய்தார்.
இந்த பஞ்சாயத்திற்கு செந்தில்குமரன், திருக்காஞ்சியை சேர்ந்த ஒருவரை பஞ்சாயத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அந்த நபரைக் கண்டு ஆத்திரமடைந்த நித்யானந்தன், அவரை சரமாரியாக தாக்கினார்.
அப்போது, செந்தில்குமரன் என்னுடன் வந்தவரை எப்படி தாக்கலாம் எனக் கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்று முதல் இருவரும் பகையாளி ஆகினர்.
போலீசாரால் அதிகரித்த பகை
இதற்கிடையே ஆரியப்பாளையம் பகுதியில் பிரதாப் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நித்யானந்தம் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என செந்தில்குமரன் நெருக்கடி கொடுப்பதாக, போலீஸ் தரப்பில் இருந்து நித்யானந்தனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் நித்யானந்தத்திற்கு, செந்தில்குமரன் மீதான கோபம் அதிகரித்தது.இதனால் தனக்கு தொல்லை கொடுத்து வரும் செந்தில் குமரனை, கூட்டாளிகளுடன் சேர்ந்து நித்தியானந்தம் படுகொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், திருச்சி கோர்ட்டில் சரணடைந்துள்ள, 7 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தால் கொலைக்காக காரணம்வெளிவரும்.
பெண்ணை தாக்கிய இருவர் மீது வழக்கு
விருத்தாசலம் : பெண்ணை தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி மனைவி உஷா, 37; இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி, 38; ஜெயலட்சுமி, 23, ஆகியோர் உஷாவை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் லட்சுமி, ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
\
ஊராட்சி துணைத் தலைவியின் மகன் கொலை வழக்கில் 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : கூத்தக்குடியில் ஊராட்சி துணைத் தலைவியின் மகன் கொலை வழக்கில் 2 பேர் மீது வழக்கு
சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகன் ஜெகன்ஸ்ரீ,19; மாணவர். இவரது தாய் செந்தமிழ்ச்செல்வி ஊராட்சி துணைத் தலைவியாக உள்ளார். கடந்த 24ம் தேதி ஜெகன்ஸ்ரீ திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக, வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து, ஜெகன்ஸ்ரீயை தேடினர். இந்நிலையில், கூத்தக்குடி வனப்பகுதியில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த 25ம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ரமேஷ், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தாசில்தார் சத்தியநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஜெகன்ஸ்ரீயின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
போலீசாரின் விசாரணையில் கூத்தக்குடியை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன்,31; ரவிச்சந்திரன் மகன் அபிலரசன்,27; மணிகண்டன் மகன் ஆகாஷ்,20; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் ஜெகன்ஸ்ரீயை கொலை செய்து வனப்பகுதியில் புதைத்தது தெரிந்தது.
விசாரணையில், கார்த்திகை தீபத்தன்று அய்யப்பன், ஜெகன்ஸ்ரீ ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதை மறைத்து அய்யப்பன் நண்பராக ஜெகன்ஸ்ரீயிடம் பேசி பழகியுள்ளார்.
கடந்த 24ம் தேதி மாலை அய்யப்பன், அபிலரசன், ஆகாஷ், 17 வயது சிறுவன் மற்றும் ஜெகன்ஸ்ரீ ஆகியோர் கூத்தக்குடி வனப்பகுதியில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது, முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மதுபாட்டில் மற்றும் கத்தில் குத்தி கொலை செய்தனர்.
பின்னர் அங்கிருந்த மரத்திற்கு அடியில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டனர்.
இதனையடுத்து அய்யப்பன், அபிலரசன், ஆகாஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கடலுார் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்
மது விற்பனை: இருவர் கைது
புவனகிரி : புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் தலைமையில் போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெருமாத்துார் ஓ.என்.ஜி.சி., அருகில் டாஸ்மாக் பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்த, பெருமாத்துார் ஆதிவராகநத்தம் மெயின்ரோடு ராபர்ட், 42; என்பவரிடம் இருந்து 4 குவாட்டர் பாட்டில்களும், புவனகிரி பங்களா அருகில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் சி.முட்லுார் புதுரோடு பூபதி, 28; என்பவரிடம் இருந்து 5 குவாட்டர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கு: விழுப்புரம் கோர்ட்டில் 3 பேர் சரண்
விழுப்புரம் : சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் 3 பேர், விழுப்புரம் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். வழக்கறிஞர்கள் அவர்களைத் தாக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.
சென்னை, பெருங்குடி ராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், 33; சைதாப்பேட்டை கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார்.
இவர், கடந்த 25ம் தேதி, வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் ஜெய்கணேஷை சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
துரைப்பாக்கம் போலீசார், வழக்குப் பதிந்து 2 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், கொலை வழக்கில், சென்னை, நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் கண்ணன் மகன் முருகன், 26; அதே பகுதி தெற்கு மாட வீதியைச் சேர்ந்த வேலுமகன் பிரவீன், 23; சென்னை, மண்ணுார்பேட்டை பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த சின்னராசு மகன் ஸ்ரீதர், 27; ஆகியோர், நேற்று மதியம் 12:00 மணியளவில் விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தனர்.
அப்போது, அங்கு வந்த விழுப்புரம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சரணடைந்த 3 பேரையும் தாக்க முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய 3 பேரின் சரண்டர் மனுவுக்காக, யாரும் ஆஜராகக் கூடாது என கூறிய வழக்கறிஞர்கள், சரண்டர் மனுவையும் ஏற்க கூடாது என நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
வழக்கு குறித்து விசாரித்த நீதிபதி ராதிகா, சரணடைந்த 3 பேரையும் ஏப்ரல் 5ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பிறகும் கோர்ட் வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் கோஷமிட்டனர்.
விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார், சரணடைந்த 3 பேரையும் மதியம் 2:00 மணியளவில் பாதுகாப்பாக விழுப்புரம் அடுத்த வேடம்பட்டு சிறைக்கு அழைத்து சென்றனர்.
'போதை'யில் வாகனம் ஓட்டி இருவர் பலி; பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை
விழுப்புரம் : மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி, 2 பேர் இறப்புக்கு காரணமான தனியார் பஸ் டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் அடுத்த பொம்பூரைச் சேர்ந்தவர் ராமு, 46; தனியார் பஸ் டிரைவர். இவர், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி, விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக முண்டியம்பாக்கத்தில் சாலையோரம் நின்றிருந்த வேன் மீது பஸ் மோதியது.
இதில், வேனில் இருந்த திருச்செந்துாரைச் சேர்ந்த சிவமுருகன், 46; மற்றும் சிவசேகர், 51; ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இது குறித்து ராமு மற்றும் பண்ருட்டியை சேர்ந்த கண்டக்டர் தட்சணாமூர்த்தி, 60; ஆகியோரை விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், ராமு குடிபோதையில் பஸ் ஓட்டியது தெரிய வந்தது.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் நீதிபதி சுந்தரபாண்டியன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
குடிபோதையில் பஸ் ஓட்டி, 2 பேர் இறப்புக்கு காரணமான ராமுவிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதித்தும், கண்டக்டர் தட்சணாமூர்த்தியை வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி கல்லுாரி மாணவியை காதலிப்பதாக கூறி பாலியல் உறவு கொண்டு அதை அலைபேசியில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதுடன் திருமணம் செய்ய மறுத்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இவ்வழக்கில் துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் விக்னேஸ்வரனுக்கு 23, சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விக்னேஸ்வரன் பி.இ., இரண்டாமாண்டு படித்த போது 2020ல் அலைபேசி மூலம் சிவகாசியை சேர்ந்த 17 வயது முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருவருடன் பழகினார். 2021 பிப்.,ல் டூவீலரில் சிவகாசிக்கு வந்து அந்த மாணவியுடன் பாலியல் உறவு கொண்டார். மாணவிக்கு தெரியாமல் அதை வீடியோ எடுத்தார்.
இந்நிலையில் திருமணம் செய்யும்படி மாணவி வலியுறுத்திய நிலையில் மறுத்த விக்னேஸ்வரன் பாலியல் உறவு கொண்ட வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறினார். வேதனையடைந்த மாணவி 2021 பிப்., 5 வீட்டின் மாடியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விக்னேஸ்வரனை சிவகாசி போலீசார் கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார். விக்னேஸ்வரனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார்.
கத்தியால் குத்தி தந்தை கொலை: 'பாசக்கார' மகன் கைது
அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே, குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த ஈயகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 65; விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் சுப்ரமணி, 40; வேலைக்குச் செல்லாமல் குடி போதைக்கு அடிமையாகியிருந்தார்.
தினமும் குடித்து விட்டு வரும் சுப்ரமணி, தந்தை பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்வது வழக்கம்.
நேற்று காலை 8:00 மணியளவில் சுப்ரமணி, குடிபோதையில் தந்தையிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
இருவருக்குமிடையே தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுப்ரமணி, வீட்டிலிருந்த கத்தியால், பாலகிருஷ்ணனின் வயிறு மற்றும் மார்பில் சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிந்து சுப்ரமணியை கைது செய்தனர்.
இந்திய நிகழ்வுகள்
கான்ஸ்டபிள் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் தப்பி ஓட்டம்
இடாநகர்-அருணாச்சல பிரதேசத்தின் கோன்சா சிறைச்சாலையில் கான்ஸ்டபிளை கொலை செய்துவிட்டு, இரு பயங்கரவாதிகள் தப்பியோடினர்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் கோன்சா சிறைச்சாலை உள்ளது.
கப்லாங் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ரோக்ஷன் ஹோம்சா லோவாங் விசாரணை கைதியாகவும், கொலை வழக்கில் கைதான திப்டு கிட்னயா, துாக்கு தண்டனை கைதியாகவும் இங்கு அடைக்கப்பட்டு இருந்தனர்.
நேற்று முன்தினம் மாலை, சிறை வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் போசாயை இவர்கள் இருவரும் தாக்கி, அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்து சுட்டுக்கொலை செய்துவிட்டு தப்பிஓடினர்.
இந்த இரு பயங்கரவாதிகளையும் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
லஞ்ச வழக்கில் முன்ஜாமின் ரத்து கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., கைது
பெங்களூரு-லஞ்ச வழக்கில் முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டதால், கர்நாடக பா.ஜ., - எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, நேற்று கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தாவணகெரே மாவட்டம், சென்னகிரி பா.ஜ., - எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா, 70. கர்நாடக அரசின் சோப் மற்றும் டிடர்ஜென்ட் நிறுவன தலைவராக இருந்தார்.
இந்த நிறுவனத்திற்கு ரசாயனம் வழங்கும் டெண்டர் கொடுப்பதற்கு ஸ்ரேயாஸ் என்பவரிடம், மாடாலின் மகனும், பெங் களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைமை கணக்கு அதிகாரியுமான பிரசாந்த், 40 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினார்.
அவரை லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர். மாடாலின் வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனையில், 8.23 கோடி ரூபாய் சிக்கியது. அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம், மார்ச் 7ல் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியது.
முன்ஜாமினை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், சுதன்ஷி சுலியா அடங்கிய அமர்வு, லோக் ஆயுக்தா மனுவுக்கு பதிலளிக்க, மாடால் விருபாக் ஷப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், நேற்று மதியம் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், மாடால் விருபாக் ஷப்பாவின் வழக்கு, நீதிபதி நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
லோக் ஆயுக்தா வக்கீல்கள், 'மாடால் விருபாக் ஷப்பா விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை. கேள்விக்கு மழுப்பலாக பதில் கூறுகிறார். மாடாலை காவலில் வைத்து விசாரிக்க வேண்டி உள்ளது. இதனால், அவரது முன்ஜாமினை ரத்து செய்ய வேண்டும்' என வாதிட்டனர்.
இதன்படி, மாடாலுக்கு வழங்கிய முன்ஜாமினை ரத்து செய்து நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து, பெங்களூரு நோக்கி காரில் வந்து கொண்டிருந்த மாடாலை, துமகூரு கியாதசந்திரா சுங்கச்சாவடி அருகே, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!