சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்: வருவாய் பற்றாக்குறை ரூ.334 கோடியாக குறைப்பு

சென்னை மாநகராட்சியின் 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட், மேயர் பிரியா தலைமையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 83 புதிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட்டு உள்ளார். அவற்றின் விபரம்:
* மாநகராட்சி பள்ளி கட்டடங்களை சீரமைப்பதற்கு மற்றும் புதிதாக மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 139 பள்ளிகளை சீரமைப்பதற்கும், 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
* மாநகராட்சி பள்ளிகளில் மாலை வகுப்புகளின் போது, சுண்டல் பயிறு வகைகள் வழங்க, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* மாநகராட்சி பள்ளிகளில் படித்து, தேசிய கல்வி நிறுவனங்களில் சேருவோர்க்கு, முதலாம் ஆண்டு கல்வி கட்டணத்தை மாநகராட்சி ஏற்கும்
* பிளஸ் 2 பொதுத் தேர்வில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு, 1,000 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்
* பள்ளிகளில் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட ஒவ்வொரு தளத்திலும், 'பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்ஸ்' திட்டம், 35 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்
* மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து மண்டலங்களிலும், 30 லட்சம் ரூபாய் செலவில் ஆலோசகர்கள் பணியமர்த்தப்படுவர்
* செய்முறை வகுப்பை மேம்படுத்த, 10 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்
* 'நமக்கு நாமே' திட்டத்தின் வாயிலாக பொதுமக்களின் பங்களிப்புடன், ஒவ்வொரு பள்ளியிலும் 2 லட்சம் ரூபாய் மதிப்பில், 'ஸ்மார்ட் வகுப்பு'கள் அமைக்கப்படும்

* 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்தும் பள்ளி ஆசிரியர்களை, ஐ.ஐ.டி., மெட்ராஸ், ஐ.ஐ.எம்., பெங்களூரு, டில்லி பல்கலைகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது
* பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும், 10 நிமிடம் மகிழ்ச்சியான வகுப்புகள் நடத்தப்படும்
* சென்னை மாநகராட்சி பள்ளிக்கான 'லோகோ' எனப்படும் லட்சினை அமைக்கப்படும். 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பச்சை, மஞ்சள், ஊதா, அரக்கு ஆகிய வண்ணங்களில், 28 ஆயிரத்து 200 மாணவர்களுக்கு, 85 லட்சம் மதிப்பில் டி-சர்ட் வழங்கப்படும்
* ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்திலும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இணையதளத்தில் புகழ்பெற்ற ஆசிரியர்கள் வாயிலாகவும், கற்றல் பயிற்சி அளிக்கப்படும்
* அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில், 6.26 கோடி ரூபாய் மதிப்பில், மாதிரி பள்ளி கட்டடம் கட்டும் பணி நடைபெற உள்ளது.
சாலையோர வாகன நிறுத்தங்கள்
சென்னையில் வாகனங்களை நிறுத்த நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீர்க்க, தலைமை பொறியாளர் தலைமையில், பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி மற்றும் தனியார் பங்களிப்புடன், 5,000 வாகனங்கள் மேலாண்மை செய்யப்படுகின்றன.
வாகன நிறுத்தங்களின் வாயிலாக மேலும் வருவாய் ஈட்டும் வகையில், மீதமுள்ள பகுதிகளிலும் வாகன நிறுத்தம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது கடந்த ஆண்டு பட்ஜெட்டில், 64 திட்டங்கள் அறிவித்து, 35 திட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.
28 திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன சென்னை மாநகராட்சியில் உள்ள மருத்துவமனைகளில், புறநோயாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து, மருத்துவ கல்லுாரிகளில் செல்வோரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, மாநகராட்சி மருத்துவமனைகளில் 2021- - 22ம் ஆண்டில், 81.53 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 36 ஆயிரம் பேர், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதுவே, 2022- - 23ம் ஆண்டில், 1.19 கோடி பேர் புறநோயாளியாகவும், 2.18 லட்சம் பேர் உள்நோயாளியாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர் தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலங்களில், மூன்று லட்சம் வீடுகளில் கணக்கெடுக்கப்பட்டது. இதில், 54 ஆயிரம் பேர் வேலை தேடுபவர்களாக கண்டறிந்து, 47 ஆயிரம் பேருக்கு வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதில், 48 ஆயிரம் பேருக்கு வடிகால் துார் வாரும் பணி வழங்கப்பட்டது சென்னையில், தெருவோரங்களில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்த 103 ஆண்கள், 63 பெண்களை, போலீஸ் அனுமதியுடன் மீட்டெடுத்து, ஐந்து தனியார் காப்பகங்கள் வழியாக பராமரிக்கப்படுகின்றனர் கடந்த ஆண்டில் மக்கும் குப்பையில் இருந்து தயாரிக்கப்பட்ட 32.50 லட்சம் கிலோ இயற்கை உரம், விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
இதன்வாயிலாக, 97.50 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.பெருங்குடி குப்பை கிடங்கில், 11 லட்சம் கன மீட்டர் அளவு குப்பை, அகழ்ந்தெடுக்கப்படும் என அறிவித்து, 11.40 லட்சம் கன மீட்டர் அளவு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
'மக்களை தேடி மேயர்'
மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு, ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மேயர், நேரடியாக மனுக்களை பெறும் வகையில், 'மக்களைத் தேடி மேயர்' திட்டம் செயல்படுத்தப்படும் கவுன்சிலர்கள் உயிரிழந்தால், அவர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி, 1 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
மாநகராட்சி கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி, 35 லட்சம் ரூபாயில் இருந்து 40 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது மாநகராட்சி கவுன்சில் கூட்ட வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கு அமைப்பு 'அனலாக்' முறையில் இருந்து 'டிஜிட்டல்' முறைக்கு, 3.50 கோடி ரூபாயில் மாற்றியமைக்கப்படும்
மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள அலுவலர்கள், பணியாளர்களின் குழந்தைகளை பராமரிக்கும் வகையில், பகல் நேர காப்பகங்கள், தரமான உணவகம், தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், உடற்பயிற்சி கூடம் 31 லட்சம் ரூபாய் மதிப்பிலும் சீரமைக்கப்படும்.
வரி மையங்களில் புதிய வசதிகள்
சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் சான்று பதிவிறக்கம் செய்ய, இணையவழி வசதி அறிமுகப்படுத்தப்படும். பொதுமக்கள் நலன் கருதி, சொத்துவரி மேல்முறையீட்டை இணையதளம் வழி நடைமுறைப்படுத்தப்படும் முதியோர் சொத்துவரியை செலுத்த, மாநகராட்சியின் இணையதளம், நம்ம சென்னை செயலி மற்றும் 1913 என்ற வாயிலாக முன்பதிவு செய்தால், வரி வசூலிப்பாளர்கள் வீட்டிற்குச் சென்று வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்
சமூக நலக்கூடங்கள், வணிக வளாகங்களை பயன்படுத்த இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வாயிலாக, 1913, 'முகநுால், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இணையதளம், நம்ம சென்னை செயலி' போன்றவை ஒரே தளத்தில் இயங்குவதற்கு பொதுமக்கள் ஈடுபாடு தளம் அறிமுகப்படுத்தப்படும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரகத்தில் இருந்து மாநகராட்சிக்கு சொந்தமான, 5,786 நிலங்களின் விபரங்கள் பெறப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நிலங்களை அளவீடு செய்து, வடக்கு வட்டார மண்டலங்களில் தடுப்பு வேலிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
நாய், மாடு பிடிக்க வாகனங்கள்
மாநகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்கு, 60 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு புதிய வாகனங்கள் வாங்கப்படும். மாடுகளை பிடிக்க, 1.35 கோடி ரூபாய் மதிப்பில், ஐந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும் கடற்கரை மணற்பரப்பில் உள்ள குப்பை, பிளாஸ்டிக், உடைந்த கண்ணாடி துண்டுகளை அகற்ற, இரண்டு 'டிராக்டர்' வாயிலாக இயக்கப்படும்
மணலை சலித்து சுத்தப்படுத்தும் இயந்திரங்கள், 1.88 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும் சாலையோரங்களில் உள்ள கட்டட கழிவுகளை அகற்ற, 1.20 கோடி ரூபாய் மதிப்பில் மண்டலத்திற்கு ஒரு வாகனம் கொள்முதல் செய்யப்படும் 'ஹைட்ராலிக்' வாயிலாக மரம் அறுக்கும் மூன்று இயந்திரங்கள், 88.50 லட்சம் ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்படும்
\
மக்களுக்கு ஏற்படும் நோய் நிலையை மதிப்பிடுவதற்காக, தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் கண்காணிப்பு பிரிவு ஏற்படுத்தப்படும் ஷெனாய் நகர் மற்றும் ஆலந்துாரில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு 'டயாலிசிஸ்' மையங்கள், முதற்கட்டமாக 10 இயந்திரங்களுடன் நிறுவப்படும் சுகாதாரத்துறையின் கீழ் பணியாற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, மழைக்கவச உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், 18.75 லட்சம் ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் மாநகரை துாய்மையாக பராமரிக்க, வார்டுகளுக்கு தரவரிசை கட்டமைப்பை உருவாக்கி, சிறந்த மூன்று வார்டுகளுக்கு ஆண்டுதோறும் வெகுமதி வழங்கப்படும்.
கட்டமைப்பு துறையில் கூடுதல் கவனம்
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 452 பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் 78.01 கி.மீ., நீளத்திற்கு 55.61 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 149.55 கோடி ரூபாயில் 251.11 கி.மீ.,ரில் 1,335 பேருந்து மற்றும் உட்புற சாலைகள் மேம்படுத்தப்படும்
பேருந்து மற்றும் உட்புற சாலைகளில் உள்ள 10 ஆயிரத்து 939 தெரு பெயர் பலகைகள் மறுசீரமைக்கப்படும் உலக வங்கி நிதியுதவி வாயிலாக 1,000 கோடி ரூபாய் மதிப்பில், கொசஸ்தலை ஆறு வடிநில ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்கப்படும். கோவளம் வடிநில பகுதிகளில் 360 கி.மீ., நீளத்திற்கு ஜெர்மன் நாட்டு வங்கி நிதி உதவியுடன், 1,714 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த வடிகால் அமைக்கப்படுகிறது. எம்1, எம்2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணி நடந்து வருகிறது.
இதில், எம்1 பகுதியில் பணிகள் நடந்து வரும் நிலையில், எம்2 பகுதியில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் 232 கோடி ரூபாயில் மழை நீர் வடிகால் அமைக்கப்படும். மழை நீர் வடிகால்களை 55 கோடி ரூபாயில் துார் வாரும் பணி நடைபெறும்
எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 'இன்குபேட்டரில்' பராமரிக்கப்படும் குழந்தைகளின் தாய்மார்களை தங்க வைத்து உணவு கொடுப்பதற்காக, 100 படுக்கைகளுடன் கூடிய கட்டடம் 5.89 கோடி ரூபாயில் கட்டப்படும் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பண்ணை அமைக்கப்படுவதுடன், 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் 25 விளையாட்டு திடல்களில், 5 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்
அண்ணாநகர் வேலங்காடு மயான பூமியில், 1 கோடி ரூபாய் மதிப்பில் உயிரிழந்தோர் உடல்களை பாதுகாக்கும் அறை அமைக்கப்படும் பெரம்பூர் - புளியந்தோப்பு பகுதியில் உள்ள இறைச்சிக்கூடம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் புதிய கட்டடங்களில் 11 மாநகர் ஆரம்ப சுகாதார மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் மெரினா கடற்கரை, அண்ணாநகர் டவர் பூங்கா, கூவம் ஆற்றுப்படுகை, அடையாறு ஆற்றுப்படுகை உள்ளிட்ட இடங்களில் 2.20 கோடி ரூபாய் மதிப்பில் 'சிசிடிவி கேமரா'க்கள் அமைக்கப்படும்.
தாம்பரம் மாநகராட்சி முதல் 'பட்ஜெட்'
தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று காலை நடந்தது. துணை மேயர் காமராஜ், கமிஷனர் அழகுமீனா மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும், மாநகராட்சிக்கான முதல் 'பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட்டது.இதில், 2023- - 24ம் ஆண்டிற்கான வருவாயாக 702.23 கோடி ரூபாய், செலவு 671.53 கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி குற்றம்சாட்டினர். இதுகுறித்து கவுன்சிலர்கள் கூறியதாவது:மாநகராட்சி பகுதிகளில், வயதானவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே இறந்தால், அரசு மருத்துவர்கள் வந்து பார்த்து சான்றிதழ் தர தயங்குகின்றனர்.அவர்கள் தரும் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, இறப்பு சான்றிதழ் கிடைக்கும் என்பதால், 2,500, 3,000 ரூபாய் கொடுத்து, தனியார் மருத்துவர்களிடம் சான்றிதழ் வாங்கும் சூழல் உள்ளது.
இப்பிரச்னைக்கு, சுகாதார ஆய்வாளர்களே நேரடியாக சென்று, அரசு மருத்துவர் மூலம் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. ஒப்பந்த நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி முறைப்படுத்த வேண்டும்.மாநகராட்சி பகுதிகளில் எந்த வேலையும் நடக்கவில்லை என, 'தினமலர்' நாளிதழில் செய்தி வந்துள்ளது. கோடை காலம் துவங்கிவிட்டதால், பொதுமக்களின் வசதிக்காக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வருவாய் பற்றாக்குறை ரூ.334 கோடி
சென்னை மாநகராட்சி கூட்டத்தில், வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் சர்பஜெயா தாஸ், 2023 - 24ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.இந்த அறிக்கையில், 2023 - 24ம் நிதியாண்டில் வரி, கட்டணம், மானியம் உள்ளிட்ட வருவாய் வரவு, 4,131.70 கோடி ரூபாய்; வருவாய் செலவினம் 4,466.29 கோடி ரூபாயாக இருக்கும். 334 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022 - 23ம் பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை, 517 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பாண்டில், மாநகராட்சியின் புதிய கடன், சொத்துகளின் மூலதன வரவு 3,554.50 கோடி ரூபாய்; மூலதன செலவு 3,560.16 கோடி ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
கோபாலபுர வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி
கொசு வழங்கும் திட்டத்துக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
ஆக.. கடந்த பட்ஜெட்டில் இருந்த 517 கோடி நிதி பற்றாக்குறையை சமாளிக்க 5000 கோடி கடன் வாங்கி ஏப்பம்விட்டோம், தற்பொழுது உள்ள 334 கோடியை சமாளிக்க மீண்டும் 3000 கோடி கடன் வாங்குவோம் என்பதை தெரியாமல் தெரியப்படுத்துவோம்..
பசிப்பிணி போக்கும் அம்மா உணவகம் இருக்குமா
சொத்து வரிக்கொள்ளை தான் குறைத்துள்ளது. வேறு ஒன்றும் இல்லை.