ADVERTISEMENT
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள் மற்றும்வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களில் இருந்தும் வெளியேறும் கழிவு நீரும் நீர் நிலைகளில் கலக்கும்படி உள்ளது. இதனால் பரமக்குடி மற்றும் வைகை ஆற்றின் மறுகரையில் உள்ள எமனேஸ்வரம் பகுதியில் வெளியேறும் கழிவு நீர் வலது, இடது பிரதான கால்வாய்களில் கலக்கிறது.
இதே போல் பரமக்குடி வைகை ஆற்றின் சர்வீஸ் ரோட்டில் இரு கரைகளிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. இதனால் தரைப்பாலம் அருகில் காக்கா தோப்பு வரையிலும் மற்றும் மஞ்சள் பட்டணம், காட்டு பரமக்குடி, ஆற்று பாலம் பகுதியில் மிகப் பெரிய கழிவுநீர் குட்டைகள் உருவாகியுள்ளன.
தொடர்ந்து நீர் நிலைகளில் கழிவு நீர் கலப்பதால் ஊற்று நீர் மாசுபட்டு வருகிறது. மேலும் கால்வாய்களில் இருந்து செல்லும் கழிவு நீர் கலந்த நீரால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வரும் நாட்களில் பரமக்குடியில் பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி திருவிழாக்கள் நடக்க உள்ளது. அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் கூடி விழாவை கொண்டாடுவது வழக்கம்.
இது போன்ற நேரங்களில் வைகை ஆற்றில் உள்ள கழிவு நீரால் பொது மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!