Load Image
Advertisement

மிரட்டலால் கான்ட்ராக்டர்கள் உதறல்... பெட்டி ஆபீசர்களால் டிரைவர்கள் கதறல்!

Contractors flee due to intimidation... Drivers are yelled at by petty officers!    மிரட்டலால் கான்ட்ராக்டர்கள் உதறல்... பெட்டி ஆபீசர்களால் டிரைவர்கள் கதறல்!
ADVERTISEMENT
வெளியில் புறப்படலாம் என்று மித்ராவை அழைப்பதற்காக, அலைபேசியை சித்ரா எடுத்த நொடியில், மித்ராவிடமிருந்தே அழைப்பு வர, ''என்ன மித்து...டெலிபதியா...நீ நேர்ல வருவேன்னு நினைச்சு, உன்னைக் கூப்பிட போனை எடுக்கிறேன்...நீ கூப்பிடுற...!'' என்று ஆச்சரியமாய்க் கேட்டாள் சித்ரா.

''இல்லைக்கா...நேத்துல இருந்து கொஞ்சம் சளி, காய்ச்சல், லேசா உடம்பு வலி...இப்போ வெளியில வர்றது மாதிரி இல்லை. அதனாலதான் போன்ல கூப்பிட்டேன்...என்னக்கா விசேஷம்?'' என்று சித்ராவிடமே செய்தி கேட்டாள் மித்ரா.

அதற்கு, ''நீ வர முடியலைன்னு சொல்றதுக்காக போன் பண்ற...மாநகராட்சியில, கான்ட்ராக்டர்களைப் பட்டியல் போட்டு, 'கண்டிப்பா நேர்ல வந்து பார்க்கணும்'னு, அந்தம்மா போன் பண்றாங்களாம்!'' என்றாள் சித்ரா.

இருமிக்கொண்டே குறுக்கிட்ட மித்ரா, ''என்னக்கா சொல்றீங்க...அவுங்களே பேசுறாங்களா?'' என்று அதிர்ச்சியோடு கேட்க, அதற்கு விளக்கமளித்தாள் சித்ரா...

''இல்லை மித்து...ஆள் வச்சுத்தான் பேசுறாங்க...ஒவ்வொரு கான்ட்ராக்டரையும் ஆர்.எஸ்.புரம்வீட்டுக்கு வரச் சொல்றாங்களாம். வீட்டுக்குள்ள நுழையுறதுக்கு முன்னாடியே, போனை வாங்கி வச்சிர்றாங்களாம். அதுக்கு அப்புறம் உள்ளே நடக்குறதெல்லாம், ஒரே மிரட்டல் சீன்தான்கிறாங்க!''

''நிஜமாவாக்கா...?''

''ஆமா...ஒவ்வொரு கான்ட்ராக்டர்ட்டயும், 'நீ என்ன வேலை பாக்குறே...கார்ப்பரேஷன்ல இருந்து உனக்கு எவ்வளவு அமவுன்ட் வருதுன்னு எனக்குத் தெரியும்...என்னை கவனிக்கலைன்னா, ஊரை விட்டே உன்னைத் தொலைச்சுருவேன்...என் 'பவர்' தெரியுமா...போன் நம்பரை மாத்துனா உன்னைப் பிடிக்க முடியாதான்னும், டைரக்டா மெரட்டுறாங்களாம்!''

''உண்மையிலேயே இவுங்களுக்கு, அவ்வளவு 'பவர்' கொடுத்திருக்காங்களா?''

''அப்பிடியெல்லாம் ஒண்ணுமில்லை...கட்சி மேலிட உத்தரவுப்படி, இவுங்களுக்கு மாசாமாசம் செலவுக்கு, திருச்சியிலயிருந்து ஒரு பெரிய அமவுன்ட் மாமூலாகொடுக்குறாங்களாம். ஆனா அதையும் தாண்டி, பேராசையில எல்லாரையும் மெரட்டுறாங்களாம். சின்னச்சின்ன கான்ட்ராக்டர்ஸ் எல்லாம், கண்ணீர் விடாத குறையா கதறுறாங்க!''

''இதே சீட்ல, இதை விட 'பவர்புல்'லா இருந்தவுங்க, அதுவும் மக்களே நேரடியாத் தேர்ந்தெடுத்தவுங்களே, அந்த நாற்காலியில முழுசா அஞ்சு வருஷம் இருக்க முடியலை.

இவுங்க நிலைமை அப்பிடியில்லை...கட்சித் தலைமை நினைச்சா, நாளைக்கே ஆளை மாத்திரலாம். அது தெரியாம ஏன் இப்பிடி ஆடித்தீர்க்கிறாங்கன்னு, கட்சிக்காரங்களே கண்டபடி பேசுறாங்க!''

சற்று இடைவெளி விட்டு, மித்ராவே தொடர்ந்தாள்...

''கார்ப்பரேஷன் கான்ட்ராக்ட்டைப் பத்தி நீங்க சொன்னதும், எனக்கு கார்ப்பரேஷன் கான்ட்ராக்ட் லேபர்ஸ் பத்தி ஞாபகம் வந்துச்சு...உண்மையிலேயே அவுங்க நிலைமை பரிதாபம்க்கா...கலெக்டர் 'பிக்ஸ்' பண்ணுன சம்பளத்தைக் கொடுக்கச் சொல்லி ஸ்டிரைக் பண்ணாங்க. ஆனா லேபர் ஆபீஸ்ல நடந்த முத்தரப்பு மீட்டிங்ல, யூனியன்காரங்க பேசுனதைப் பார்த்து நொந்து போயிருக்காங்க!''

''அப்பிடி என்ன பேசுனாங்களாம்?''

''கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ்சே இல்லாம, ஸ்டிரைக்கை முடிச்சுக்கிறது மாதிரியே பேசிருக்காங்க... ஆபீசர்கள்ட்ட 'வீட்டுல என்ன சாப்பாடு'ன்னு ஜாலியாப் பேசி, கையெழுத்துப் போட்ருக்காங்க. மத்த யூனியன்காரங்க போட்டதும், பாரதிய மஸ்தூர் சங்கத்துக்காரங்களும் கையெழுத்துப் போட்டாங்களாம்!''

மித்ரா சொன்ன தகவலைக் கேட்டு, சித்ரா சீரியஸ் ஆக அடுத்த கேள்வியைக் கேட்டாள்...

''மித்து! அதான் கார்ப்பரேஷன்ல வீடுகள்ல குப்பை கலெக்ட் பண்ற வேலையை, 170 கோடி ரூபாய்க்கு மொத்தமா பிரைவேட்டுக்குக் கொடுக்கப் போறாங்களே...அப்போ இவுங்க வேலை என்னாகும்?''

''இப்போ வேலை செய்யற ஒப்பந்த பணியாளர்களுக்கு, வேலை பறிபோகாதுன்னு உறுதி சொல்லி இருக்காங்களாம். கலெக்டர் 'பிக்ஸ்' பண்ணுன தினக்கூலி 721 ரூபாயை, புதுசா கான்ட்ராக்ட் எடுக்குற கம்பெனியும் கொடுக்குறதுக்கு, நடவடிக்கை எடுப்போம்னு திட்டவட்டமாச் சொல்லிருக்காங்களாம்!''

சித்ரா முடிக்கும்முன் குறுக்கிட்ட மித்ரா, ''என்னக்கா...திடீர்னு கார்ப்பரேஷன்ல பிளாஸ்டிக் கவர்களைக் கட்டுப்படுத்த, அதிரடியா தனிப்படை இறங்கிருக்காங்களாம்...ராத்திரி 10 மணிக்குக் கூட, கடை மூடுற நேரத்துல போய், திடீர் ஆய்வு பண்ணி 'பைன்' போடுறாங்களாமே!'' என்று கேட்டாள்.

அதற்கு, கோபத்தோடு பதில் சொல்ல ஆரம்பித்தாள் சித்ரா...

''இதுக்கு எதுக்கு ராத்திரி 10 மணிக்கு கடைகளுக்குப் போகணும். பகல்ல ரோட்டுல பூ விக்கிறவுங்ககிட்டப் போனாலே, கிலோக்கணக்குல 'கேரிபேக்' அள்ளலாம். வியாபாரிகள்ட்ட ரெய்டு பண்ணி என்ன பிரயோஜனம்... இந்த பைகளை தயார் பண்ற கம்பெனிகள் மேல நடவடிக்கை எடுக்கணும்ல...அதுக்குதான்வணிகர் சங்கத்துக்காரங்க போராட்டம் நடத்தப்போறாங்களாம்!''

''அது சரி! சமீரன் கலெக்டரா இருக்குற வரைக்கும், விவசாயிகள் குறை கேட்புக் கூட்டத்துக்கு வர மாட்டோம்னு, ஸ்டிரைக் பண்ணுன விவசாயிகள், இந்த கலெக்டர்ட்ட ஒத்துப்போறாங்களா?''

''அந்த விஷயத்துல, இந்த கலெக்டர் ரொம்பவே உஷாரா இருக்காரு மித்து! விவசாயிகளை நல்லாவே 'ஹேண்டில்' பண்றாரு...யாரையும் வளவளன்னு பேசவிடலை...ஆனா எல்லா விவசாயிக்கும் பேச வாய்ப்பு கொடுத்தாரு. அதிகபட்சம் அஞ்சு நிமிஷம் வரைக்கும் பேச விட்டு, அதுக்கு மேல பேசுனா...அக்ரி ஆபீசர் ஒருத்தரு பெல் அடிச்சிட்டே இருந்தாரு!''

''நானும் கேள்விப்பட்டேன்க்கா...வழக்கமா கேள்வியாக் கேட்டு, விவசாயிகள் குடைச்சல் கொடுப்பாங்கன்னு, இந்தக் கூட்டத்துக்கு வரவே ஆபீசர்கள் யோசிப்பாங்க. இந்த பிரச்னையைப் புரிஞ்சுக்கிட்ட கலெக்டர், 'வீணா ஆர்க்யூ பண்றதால யாருக்கும் யூஸ் இல்லை. என்ன குறைன்னு மட்டும் சொல்லுங்க...அடுத்த கூட்டத்துக்குள்ள தீர்வு கிடைக்கும்'னு சொல்லி, மோதலுக்கு முற்றுப்புள்ளி வச்சிட்டாரு!''

''அப்பிடியே இந்த யானைப் பிரச்னைக்கும் நிரந்தரமா தீர்வு கண்டார்னா, நிம்மதியாஇருக்கும். நம்ம ஊர்லதான் யானைங்க அநியாயத்துக்குசெத்துட்டு இருக்கு...இந்த கவர்மென்ட் அதைப் பத்திக் கண்டுக்கிறதே இல்லை!''

''இது மாதிரி, இந்த கவர்மென்ட் கண்டுக்காத விஷயங்கள் நிறையா இருக்குக்கா...நம்ம ஊரு சப் ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்கள்ல நடக்குற முறைகேடு, மோசடி, லஞ்சம் ஒரு அளவு இல்லாமப் போயிட்டு இருக்குன்னு, பல தரப்புலயும் புலம்புறாங்க.

இதுக்காக வாங்குறது எல்லாமே 'மெகா அமவுன்ட்'டாதான் இருக்குன்னு சொல்றாங்க. இந்த விஜிலென்ஸ்க்கு, இதெல்லாம் கண்ணுலயே படாது போலிருக்கு!''

சிறிது இடைவெளிக்குப் பின் சித்ராவே தொடர்ந்தாள்...

''பெரியநாயக்கன்பாளையம் சப் ரிஜிஸ்டிரார் ஆபீஸ்ல, காலையில பத்து மணிக்கு தொடங்க வேண்டிய வேலைகள், பத்தே முக்காலுக்குதான் தொடங்குதாம். தட்கல் சிஸ்டத்துல 10 மணிக்கு டைம் வாங்குனாலும், மணிக்கணக்கா காத்துக்கிடக்க வேண்டியிருக்காம். சாயங்காலம் ஆறு மணிக்கு மேலயும் ரிஜிஸ்ட்ரேஷன் நடக்குதாம். சிசிடிவி இருக்குன்னுதான் பேரு...பெரிய ஆபீசர்கள் பாக்குறதே இல்லை போலிருக்கு!''

''அக்கா! எல்லா இடத்துலயும் இந்த ஊழல் ஆபீசர்கள் எல்லாம் கூட்டணி போட்டுக்கிறாங்க...கோவை ஆவின்ல ஒரே வருஷத்துல, 80 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் குறைஞ்சிருக்கு.

பாலுக்கு நல்ல விலை கொடுக்குறதில்லை; நல்ல பாலுக்கு விலையை உயர்த்தியும் தர்றதில்லையாம். ஆவின் பெரிய ஆபீசரோட, கீழ இருக்குற ரெண்டு பேரு சேர்ந்த ஊழல் கூட்டணிதான், இந்த நிலைமைக்குக் காரணம்கிறாங்க!''

''அந்த கூட்டணி மேல பாலியல் புகார்களும் நிறையா இருக்கு மித்து! ஆனா தொடர்ந்து தப்பிச்சிட்டே இருக்காங்க!''

''இப்பிடித்தான் நரசீபுரத்துல, லாட்டரி விக்கிற ஆளுங்க தப்பிச்சிட்டு இருக்குறாங்க...ஆளும்கட்சி ஒன்றியச் செயலாளர் ஒருத்தரு, அவுங்களைப் பிடிச்சு, கேஸ் போடச் சொல்லிருக்காரு.

ரெண்டு பேரையும் போலீஸ் பிடிச்சதும், ஆலாந்துறையில இருக்குற முக்கியமான போலீஸ் ஆபீசர், 'அவுங்களை ஏன் பிடிச்சீங்க; விடுங்க'ன்னு சொல்லீட்டாராம். இப்போ மினிஸ்டர், ஐ.ஜி., வரைக்கும் புகார் போயிருக்காம்!''

''இதுவும் ஆலாந்துறை போலீஸ் மேட்டர்தான்...பூலுவபட்டியில ஒரு கடையோட சுவத்தை உடைச்சு, கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயற்சி பண்ணிட்டு இருக்குறப்போ, அதுல ஒருத்தரைப் போலீஸ் பிடிச்சிருக்காங்க.

அதுக்கு ஒரு எஸ்.ஐ.,க்கும், எஸ்.எஸ்.ஐ.,க்கும் எஸ்.பி., ரிவார்டு கொடுத்திருக்காரு. ஆனா உண்மையா பிடிச்ச எஸ்.ஐ.,மோகன், ஹெட்கான்ஸ்டபிள் நவநீதகிருஷ்ணனுக்கும் கொடுக்கலையாம்!''

'''அதுலயும் பெரிய ஆபீசர்கள் ஏதாவது பாலிடிக்ஸ் பண்ணிருப்பாங்க...நம்ம ஊர்ல அதுக்குதான் பஞ்சமே கிடையாதே...!'' என்ற மித்ரா, தனியார் பள்ளிகள் லைசென்ஸ் ரினிவல் பண்றதுக்கு நடந்த ஜமாபந்திக்குப் பின், பள்ளிக்கல்வித்துறையில் நடக்கும் அரசியலை விளக்கினாள்...''அந்த ஜமாபந்தியில, மெட்ரிக் பள்ளிகளுக்கான மீட்டிங்ல, பள்ளிக் கல்வித்துறைக்கு சுத்தமா சம்பந்தமே இல்லாத மூணுபேர்தான், டாக்குமென்ட்களை சரி பாத்திருக்காங்க.

அவுங்க, ஒரு லைசென்ஸ் ரினிவல் பண்ண 10 ஆயிரம் ரூபா கேக்குறாங்களாம். இதைப்பத்தி சி.இ.ஓ.,கிட்ட சொன்னா, தனியார் பள்ளிகளுக்கு பிரத்தியேக இயக்குனரகம் இருக்குன்னு சொல்லி, எந்த நடவடிக்கையும் எடுக்குறது இல்லியாம்!''

''இதுக்கு ஜமாபந்தியே நடத்தாம இருக்கலாமே!''

''அதைத்தான் பிரைவேட் ஸ்கூல் பிரின்சிகளும் சொல்றாங்க...!''

மறுபடியும் இருமிக்கொண்டே பேசினாள் மித்ரா...

''அக்கா! நம்ம அவினாசி ரோடு பாலத்துக்காக, வடகோவையில ஒரு ஸ்பெஷல் விங் ஆபீஸ் போட்ருக்காங்க தெரியுமா?''

''ஓ தெரியுமே...ஒரு சூபரின்டெண்ட் இன்ஜினியர், ரெண்டு ஏ.டி., நாலு ஏ.இ., அங்க வேலை பாக்குறாங்களே... அதுக்கு என்னாச்சு?''

''அந்த ஆபீசுக்கு புராஜெக்ட் காசுலயே, 'ஒர்க் சார்ஜ்'ன்னு நாலு வண்டியும் வாங்கிக்க நிதி ஒதுக்கிருக்காங்க. ஆனா மூணு பொலிரோதான் வாங்கிருக்காங்க. ஏற்கனவே ஆபீஸ்லயும் சில வண்டிங்க இருக்கு.

டிபார்ட்மென்ட் டிரைவர்களும் இருக்காங்க. இவுங்க யாரையுமே எந்த ஆபீசரும் எங்கேயும் கூப்பிட்டுப் போறதில்லையாம்...என்.எம்.ஆர்., டிரைவர்களைத்தான் கூப்பிட்டுப் போறாங்களாம்!''

''ரீசன்?''

''ஒரே ரீசன்தான்...அவுங்களுக்கு இது அறுவடை சீசன்...எங்கெங்கேயோ போயி, பெட்டி, துட்டு எல்லாம் வாங்குறாங்க. அதுல பங்கு கொடுக்கணும்னு நினைக்கிறாங்களோ என்னவோ, டிபார்ட்மென்ட் டிரைவர்களைகூப்பிட்டுப் போறதில்லையாம்!''

''வண்டிக்கு, ஆளுங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்போ யாரு பதில் சொல்வாங்களாம்...!''

சித்ரா பேசப்பேச, மித்ராவின் இருமல் சத்தம் அதிகமாகவே, 'மித்து! நீ ரெஸ்ட் எடு...நான் அப்புறம் கூப்பிடுறேன்' என்று, அலைபேசியைத் துண்டித்தாள் சித்ரா.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement