ADVERTISEMENT
ஜெருசலேம், மக்களின் போராட்டம் தீவிரமடைந்து உள்ளதால், நீதித்துறை மாற்றங்களை கைவிடும்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு, அந்த நாட்டின் அதிபர் ஐசக் ஹர்சாக் வலியுறுத்திஉள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலில், நீதித் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டு உள்ளார்.
உயர் நீதிமன்றங்களுக்கான அதிகாரங்களை குறைப்பது, நீதிபதிகள் நியமனத்தில் அரசுக்கும் பங்கு இருப்பது உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு, ராணுவ அமைச்சர் யோயாவ் காலண்ட் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, அவரை பதவியில் இருந்து நீக்கி நெதன்யாகு நடவடிக்கை எடுத்தார்.
இதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. நேற்று முன்தினம் இரவில், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சாலைகளில் குவிந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்னை தொடர்பாக, அந்த நாட்டின் அதிபர் ஐசக் ஹர்சாக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
எந்த ஒரு நடவடிக்கையாக இருந்தாலும், அதில் மக்களின் நலனுக்கே முக்கியத்துவம் தர வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துக் கட்சிகளும் செயல்பட வேண்டும்.
நீதித்துறை மாற்றங் களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன. இது நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதனால், இந்த நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!