ADVERTISEMENT
வில்லியனுார் : வில்லியனுாரில் வெடிகுண்டு வீசி பா.ஜ., பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, வில்லியனுார், கணுவாப்பேட்டை முதல் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ஆசிரியர் ரங்கசாமி. இவரது மகன் செந்தில்குமரன், 45. இவருக்குபுனிதா என்ற மனைவியும், கனிஷ்கா,17, என்ற மகள், கிஷன்குமார்,16, என்ற மகன் உள்ளனர்.
பாரம்பரியமான காங்., குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமரன், முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் தீவிர விசுவாசியாக இருந்தார்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் நெருங்கிய உறவினரான இவர், கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்., கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது மங்கலம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளராக இருந்து வந்த இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் செந்தில்குமரன் நேற்று இரவு 9:40 மணி அளவில், வில்லியனுார் - விழுப்புரம் சாலை, கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஹரிகரன் பேக்கரியில் நின்று, பா.ஜ., விவசாய அணி நிர்வாகியிடம் பேசியபடி, டீ குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது மூன்று பைக்குகளில் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்த, ஏழு பேர் கொண்ட கும்பல், திடீரென செந்தில்குமரன் மீது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசியது.
குண்டுகள் வெடித்ததில், நிலை தடுமாறி புகை மண்டலத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த செந்தில்குமரனின் தலையில் கத்தியால் சரமாரியாக வெட்டிய அக்கும்பல் முகத்தை சிதைத்தது. செந்தில்குமரன் இறந்ததை உறுதி செய்த பின், கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
தகவலறிந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் ஏ.டி.ஜி.பி., ஆனந்தமோகன், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி.,க்கள் ரவிக்குமார், பக்தவச்சலம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இன்ஸ்பெக்டர் வேலையன், சப் இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் செந்தில்குமரன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கொலை நடந்த பகுதியில் குண்டு வெடித்ததில் சிதறிக்கிடந்த ஆணி, கூழாங்கற்கள், வெடி மருந்து துகள்களை போலீசார் சேகரித்தனர். தடயவியல் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்பநாய் கோட்டைமேடு வரை சென்று திரும்பி வந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த செந்தில்குமரன் தாய் சரோஜினி, மனைவி புனிதா, மகள் கனிஷ்கா, மகன் கிஷன்குமார் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வில்லியனுார் பைபாஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து, கலைந்து போகச் செய்தனர். மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.
கொலையாளிகளை அடையாளம் காண, பேக்கரியில் உள்ள சி.சி.டி.வி., வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். கொலைக்கு காரணம் முன்விரோதமா, தொழில் போட்டியா அல்லது வேறு காரணமா என, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு எஸ்.பி., (பொ) ரவிக்குமார் தலைமையில் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பா.ஜ., பொறுப்பாளர் செந்தில்குமரன் படுகொலை சம்பவத்தால் வில்லியனுாரில் பதற்றமான சூழல் நிலவுவதால், துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!