முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்யும் போது, அவை அளிக்கும் பலன்களை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், இடர் தன்மை அம்சத்தையும் பரிசீலிக்க வேண்டும். தனிநபர்களின் முதலீடு தொகுப்பு, பலவிதமான இடர் தன்மை கொண்ட முதலீடு சாதனங்களை கொண்டிருக்க வேண்டும்.
நிரந்தர வருமானம் அளிக்கும் முதலீடுகள், சம பங்கு முதலீடுகள் உள்ளிட்டவற்றின் சரியான கலவையில் முதலீடு தொகுப்பு அமைந்திருக்கும் போது, இடர் தன்மை குறைந்து, பலன்கள் அதிகரிக்கும். நீண்ட கால நோக்கில் இது நல்ல பலன் அளிக்கும்.
பத்திர முதலீடு
தற்போதைய வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழலில், பொருத்தமான முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்வது அவசியம் ஆகிறது. ஒப்பீட்டளவில் பங்கு முதலீட்டை விட, நிரந்தர வருமானம் அளிக்கும் முதலீடு வாய்ப்புகள் அதிக பலனை அளிக்கும் நிலை உள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தொடர்ந்து வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. வைப்பு நிதி வட்டி விகிதம் மேலும் உயரும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
பெரும்பாலான முதலீட்டாளர்கள், வைப்பு நிதி அல்லது கடன்சார் முதலீடு வாய்ப்புகளை தேர்வு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவை தவிர, அஞ்சலகம் வழங்கும் சிறு சேமிப்பு திட்டங்களின் கீழ், தேசிய சேமிப்பு சான்றிதழ், மாதாந்திர வருமானம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முதலீடு வாய்ப்புகள் உள்ளன.
இவை அனைத்துமே பாதுகாப்பான முதலீடாக அமைவதோடு, அதிக பலனை அளிப்பவையாகவும் அமைகின்றன. இந்த வரிசையில், அதிகம் அறியப்படாத முதலீடு வாய்ப்பாக ரிசர்வ் வங்கியின் மாறும் வட்டி விகித பத்திரங்கள் அமைகின்றன.
வட்டி விகிதம்
மாறும் வட்டி விகித சேமிப்பு பத்திரங்கள், ரிசர்வ் வங்கியால் சில்லரை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
சந்தையில் நிலவும் வட்டி விகிதத்திற்கு ஏற்ற பலனை அளிக்கும் வகையில் இந்த பத்திரங்கள் அமைகின்றன. தேசிய சேமிப்பு சான்றிதழ் பலனை விட, 0.35 சதவீதம் கூடுதல் பலன் அளிக்கின்றன.
இதன் அடிப்படையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இவற்றின் வட்டி விகித பலன் மாற்றி அமைக்கப்படுகிறது. பத்திரங்கள் மீது, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி அளிக்கப்படுகிறது. வட்டியை மொத்தமாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை.
இந்த பத்திரங்களில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயில் இருந்து முதலீடு செய்யலாம். முதலீட்டிற்கு அதிகபட்ச வரம்பு இல்லை. தனிநபர்கள் மற்றும் ஹிந்து கூட்டு குடும்பம் முதலீடு செய்யலாம். வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்ய முடியாது.
பத்திரங்கள் முதலீடு வருமான வரி விதிப்புக்கு உரியவை. வருமான வரிச்சலுகை கோர இந்த பத்திரங்களை பயன்படுத்த முடியாது. இவற்றின் முதிர்வு காலம் ஏழு ஆண்டுகள்.
எனினும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஐந்தாண்டுகளுக்கு பின் இவற்றை விலக்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்களை காகித வடிவில் அல்லது 'டிமெட்' வடிவில் வைத்திருக்கலாம்.
இவற்றை அடமானம் வைத்து கடன் பெறலாம். முதலீடு தொகுப்பின் தன்மைக்கேற்ப இவற்றில் முதலீடு செய்வதை தேர்வு செய்யலாம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!