Load Image
Advertisement

கோமாளி என்று என்னை சொன்னாலும் சிரிக்க வைப்பேன்! - ப்ராப்பர்ட்டி நாயகன் மதுரை முத்து!

Calling me a clown makes me laugh! - Property hero Madurai Muthu!   கோமாளி என்று என்னை சொன்னாலும் சிரிக்க வைப்பேன்! - ப்ராப்பர்ட்டி நாயகன் மதுரை முத்து!
ADVERTISEMENT
வெள்ளித்திரையில் சிரிப்பு ஜாம்பவான் மதுரை வடிவேலு என்றால் சின்னத்திரை சிரிப்பு நாயகன் மதுரை முத்து என்று சின்ன குழந்தைகள் கூட சொல்லிவிடும். முகபாவனைகளில் நான்ஸ்டாப் காமெடிகளில் டைமிங் ஜோக்குகளில் சிரிக்க வைக்கும் மதுரை முத்து, பத்தாண்டுகளில் 85 நாடுகளுக்கு ஜோக்குகளுக்காகவே சென்று வந்துள்ளார். இவரது சமீபத்திய 'ப்ராப்பர்ட்டி' ஜோக்குகளுக்கு சிறுகுழந்தைகளும் ரசிகர்களாக மாறியுள்ளனர். மதுரை நிகழ்ச்சிக்கு வந்த மதுரைமுத்து… கேள்விகளுக்கு யதார்த்தமாக சிரிக்க சிரிக்க தன் வாழ்க்கை அனுபவங்களை விவரித்தார்.

அதென்ன 'ப்ராபர்ட்டி' காமெடி… ரூம் போட்டு யோசிப்பீங்களா…



ரூம் போடாம யோசிச்சது தான். ஸ்டாண்ட் அப் காமெடியில் ஆரம்பிச்சு பட்டிமன்ற பேச்சாளர், பட்டிமன்ற நடுவர் என காமெடி டிராக் பாதையை மாற்றிக் கொண்டே வருகிறேன். 'போதும்டா சாமி' னு வாழ்க்கையில் சலிப்பாகுற நேரம், காமெடியில் இருந்து கொஞ்சம் வெளிய வந்தேன். டாக்டரிடம் செக்கப் போனபோது, அவரு என்னை பார்த்து ேஹப்பி ஆயிட்டாரு. 'யுடியூப்பில் உங்க காமெடியை பார்த்து சிரிப்பேன்'னு சொல்லி சந்தோஷப்பட்டார். அந்த எனர்ஜி… மறுபடியும் என்னை காமெடி பண்ண வைச்சது. அதுக்கப்புறம் தான் 'ப்ராப்பர்ட்டி' காமெடி ஆரம்பிச்சேன்.

உங்க காமெடிக்கு எல்லோரும் ஈஸியா சிரிக்குறாங்களா…



ஈஸியா அழ வைச்சுரலாம். ஆனால் சிரிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். அழுது நொந்து நுாடுல்ஸ் ஆனா தான் நம்ம ஆளுங்க சிரிக்கவே செய்வாங்க.

'ப்ராபர்ட்டி' காமெடிக்கு ரசிகர்கள் யார்…



'ப்ராபர்ட்டி' காமெடியை ஒரு டிவி ஷோவில் அறிமுகப்படுத்திய போது குழந்தைகளிடம் வரவேற்பை பெற்றது. காரக்குழம்புனு சொல்லி குழம்புக்குள்ள குட்டி பிளாஸ்டிக் காரை வச்சு எடுப்பேன். மது ஒழிப்பு பண்றோம்னு சொல்லி வேட்டிக்குள்ள மது பாட்டிலை ஒளிச்சு வச்சோம். ஸ்கூல் கெட்டப் போட்டபோது… 'மேலே ஏன் உட்கார்ந்து படிக்கிறேனு தெரியுமா.. எங்க அப்பா தான் மேலே படிக்கச் சொன்னாரு' சொன்னேன். பள்ளத்தில் படிக்கறதுக்கு ஆழமா படிக்கிறேன் என்றும் படிமேல உட்கார்ந்து படிச்சால்… 'என்ட்ரன்ஸ் எக்ஸாம்' படிக்கிறேனு சொன்னேன். இது தான் 'ப்ராபர்ட்டி' காமெடி. மதுரைக்காரய்ங்கனாலே காமெடி, நையாண்டி இருக்கும். அந்த ஸ்டைலோட பேசும் போது யாரா இருந்தாலும் தன்னை மறந்து சிரிச்சுருவாங்க.

வெளியில் ஷோ நடத்தும் போது என்ன செய்வீர்கள்….



அங்கே அந்தந்த நேரத்துக்கு கண்ணில் என்ன பார்க்கிறேனோ அதை வைத்தே காமெடி பண்ணுகிறேன். உதாரணமாக கையில் அலைபேசி இருக்கும். அதை மேல்நோக்கி டார்ச் அடித்தால் 'ஷோ ஹைலைட்' பண்றேன்னு சொல்வேன். அலைபேசியை 2 முறை புரட்டினால் 'செலிபிரிட்டி' என்று சொல்லி சிரிக்க வைப்பேன்.

காமெடியில் எந்த டிராக் உங்களுக்கு ஈஸி…



ஸ்டாண்ட் அப் பேசும் போது நானே எனர்ஜி முழுவதையும் கொண்டு வரணும். ஆடியன்ஸ் அனைவரையும் இழுத்து பிடிச்சு கவனம் சிதறவிடாம காமெடி பண்ணணும். ஒருடைம் நல்லா தான் இருந்துச்சு. பட்டிமன்ற வேலை கொஞ்சம் ஈஸி. மத்தவங்க பேசுறதை வச்சு பட்டிமன்றம் முழுக்க கவுண்டர் பண்ணினப்போ மக்கள் விரும்பினாங்க.

நீங்களே நினைச்சு நினைச்சு சிரிச்ச ஜோக் எது.



சில்லுனு ஒரு காதல்… பட காமெடிக்கு காதல் பட சிடியை பிரிட்ஜில் வச்சு வெளியில் காண்பிச்சேன். ஆடியன்ஸ் எதிர்பார்க்கலை. மான் பொம்மைக்கு செயின் அணிவித்து கவரிமான், விபூதி பூசி பக்திமான் என்றேன். அடுத்து கொஞ்சம் துாரமாக வைத்ததும் ஆடியன்ஸ் 'அந்தமான்' என்று சொல்லிவிட்டனர். அடுத்து நான் ஏதாவது செய்யணுமே என்று மானை வேகமாக துாக்கி வீசிட்டு என்னன்னு கேட்டேன். யாருக்கும் தெரியல. இது தான் சல்மான்னு சொன்னதும் எல்லோரும் சிரிச்சாங்க.

வீட்ல உங்க ஜோக்கை கேட்டு காதை பொத்துறது யார் மனைவியா, பிள்ளைகளா…



மனைவியும் மகளும் சிலநேரம் காமெடி சொன்னால் உஷ்…னு சொல்வாங்க. சிலநேரம் சிரிப்பாங்க. மகனுக்கு 6 வயசாகுது. அவனுக்கு காமெடி ஜோக் சொன்னா புரியாது. 'சவுண்ட் எபெக்ட்ல' காமெடி பண்ணி கீழே விழுற மாதிரி சிரிக்க வைப்பேன். அந்த 'பாடி லாங்வேஜ்' பார்த்து பையனும், பொண்ணும் ரசிச்சு ரசிச்சு சிரிப்பாங்க. மொழியில்லாமல் கீழே விழுந்து உடலை வளைத்து சிரிக்க வைக்குறது ஒரு கலை.

நீ என்ன வேணாலும் பேசு… நாங்க சிரிக்க மாட்டோம்னு ரசிகர்கள் நடந்துகிட்ட சம்பவம் இருக்கா…



பெரிய டாக்டர்கள் மீட்டிங்கில் ஜோக் சொல்றது கஷ்டம். இவங்களுக்கு என்ன சொன்னா பிடிக்கும்னு டிரெண்டை மாத்திகிட்டேன். நம்மை கோமாளி என்று சொன்னாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் மத்தவங்களை சிரிக்க வைக்கணும்னு நினைக்கிறேன்.
பெரிய கிராமத்தில் பட்டிமன்ற மக்களும் சிரிப்பாங்க. மறுநாள் அதிகாரிகள் மீட்டிங்லயும் பேசுவேன். எல்லா இடத்துலயும் ஒரே மாதிரி பேசக்கூடாது. அதனால் தான் பொழைப்பு இவ்வளவு நாள் ஓடுது

இப்படி காமெடியன் ஆவீர்கள் என நினைத்தீர்களா



எம்.காம்., படித்திருக்கிறேன். ஆசிரியராகவோ, நாட்டாமையாகவோ நான் வேலை பார்க்கணும்னு அப்பா நினைச்சார். அப்பா ராமசாமி, ஊர் நாட்டாமை, அம்மா முத்துஇருளாயி. கலைக்கும் எங்கள் கிராமத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அப்பா சினிமா பார்த்தது கிடையாது. சவுண்ட் பிடிக்காது. எல்லோரும் வண்டி கட்டிட்டு போறாங்கனு கரகாட்டக்காரன் படமும், நாட்டாமை ங்கற பேருக்காக நாட்டாமை படமும் பார்த்திருக்கார். கிராமத்துல நம்மை கூத்தாடினு சொல்றதால அவருக்கு இந்த துறை பிடிக்காது. ஆர்வம் காட்ட மாட்டாரு.



வாசகர் கருத்து (1)

  • krishsrk - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்

    மதுரை முத்துவின் சிரிப்பலைகள் கலக்க போவது யாரு நிகழ்ச்சிதான் உச்சம். கவலையை மறக்க வைக்கும் மருந்து. வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement