Load Image
Advertisement

ஒரு ஆன்மீகவாதிக்கும், உலகாயதவாதிக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது?

What is the difference between a spiritualist and a secularist?   ஒரு ஆன்மீகவாதிக்கும், உலகாயதவாதிக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது?
ADVERTISEMENT
சத்குரு: இன்று உலகின் பெரும்பாலான மக்கள், அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர், ஆன்மீகம் என்றாலே ஒருவிதமான ஒவ்வாமையை வளர்த்துக் கொண்டுள்ளனர். ஏன் இவ்வாறு நிகழ்ந்துள்ளது என்றால், ஆன்மீகம் அவ்வளவு அசிங்கமான முறையில் வழங்கப்பட்டுள்ளது. ஆன்மீகம் என்றாலே சரியாகச் சாப்பிடாமல், சாலையோரமாக அமர்ந்து பிச்சையெடுப்பது என்ற வகையில் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகம் என்றால் உங்களை சித்திரவதை செய்துகொண்டு ஒரு மோசமான வாழ்க்கையை வாழ்வது என்றும், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கைக்கு எதிர்முறையாக இருந்து - வாழ்க்கையை எந்த விதத்திலும் அனுபவிக்காமல், கூடுமானவரை ஒவ்வொரு வழியிலும் துன்பப்பட வேண்டும் என்றும் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆன்மீகத் தன்மையில் இருப்பது என்பது, உங்கள் வெளிச் சூழ்நிலையுடன் எந்த விதத்திலும் தொடர்பில்லாதது. நீங்கள் ஒரு குடிசையில் வாழ்ந்தாலும், அரண்மனையில் வாழ்ந்தாலும் நீங்கள் ஆன்மீகத் தன்மையில் இருக்க முடியும். குடிசையோ, கோபுரமோ - நீங்கள் எங்கே வாழ்கிறீர்கள் என்பது உங்கள் தேர்வாக இருக்கலாம் அல்லது சமூக மற்றும் பொருளாதார நிர்ப்பந்தங்களால் இருக்கலாம். உங்களது ஆன்மீகத்துடன் இது தொடர்பற்றது.

ஆன்மீகத் தன்மையில் இருப்பது என்றால், "என் ஆனந்தத்திற்கு மூலம் நானே" என்பதை அனுபவபூர்வமாக அறிந்துகொள்வது. தற்போது உங்கள் ஆனந்தத்திற்கு வேறு எதுவோ அல்லது வேறு யாரோ மூலக் காரணமாக இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். உங்கள் ஆனந்தத்தின் மூலம் நீங்கள்தான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்து அறிந்துகொண்டால், அதன்பிறகு நீங்கள் எப்போதுமே ஆனந்தமாகத்தானே இருப்பீர்கள்? அது ஒரு தேர்வுநிலைகூட இல்லை. இந்த உயிரே ஆனந்தமாக இருப்பதைத்தான் தேடுகிறது. உங்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்தால் - நீங்கள் கல்வி பயில்கிறீர்கள், உங்களுக்குப் பணம், வீடு, குடும்பம், குழந்தைகள் வேண்டும் - இவை எல்லாவற்றையும் நீங்கள் வேண்டுவது ஏனென்றால், ஒருநாள் இவை எல்லாம் உங்களுக்கு ஆனந்தத்தைக் கொண்டுவரும் என்ற ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் இப்போது, அதிகமான விஷயங்களின் குவியலாக இருக்கும் உங்களுக்கு, ஆனந்தம் என்ற ஒரு விஷயம்தான் மறக்கப்பட்டதாக இருக்கிறது.

மக்கள் துயரமானவர்களாக மாறக் காரணம், அவர்கள் வாழ்க்கை என்பது என்ன என்பதைப் பற்றிய ஆழமானதொரு தவறான புரிதலைக் கொண்டிருக்கின்றனர். "இல்லையில்லை, என் கணவர், என் மனைவி, என் மாமியார் …." ஆமாம், அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் துயரமாக இருக்கக் காரணம், துயரங்களில் நீங்கள் முதலீடுகள் செய்திருக்கிறீர்கள். துயரமாக இருந்தால் ஏதாவது கிடைக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். உதாரணத்திற்கு, உங்கள் குடும்பத்தில் யாரோ ஒருவர் உங்களுக்கு பிடிக்காத ஒன்றை செய்யத் துவங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களை நீங்களே துயரத்தில் மூழ்கடித்துக் கொண்டு சோகமான முகத்துடன் வளைய வருவீர்கள் - இதனால் தீர்வு வந்துவிடும் என்ற நம்பிக்கையுடன். ஏதோ ஒன்று கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்திற்காக உங்களுக்கு நீங்களே துயரத்தை ஏற்படுத்திக்கொள்ள விருப்பமாக இருக்கிறீர்கள். நீங்கள் துயரமாகிவிட்டால், அதன் பிறகு சொர்க்கமே உங்கள் கையில் வந்து விழுந்தாலும் அதனால் என்ன பயன் இருக்கப்போகிறது? ஆனால், நீங்கள் ஆனந்தமான மனிதராக இருந்தால், உங்கள் கையில் எதுவும் இல்லையென்றாலும், அதனால் என்ன? உண்மையிலேயே நீங்கள் ஆனந்தமாக இருந்தால், உங்களிடம் என்ன இருக்கிறது அல்லது என்ன இல்லை என்பதோ, யார் உங்களோடு இருக்கிறார்கள் அல்லது இல்லை என்பதோ ஒரு பொருட்டாக இருக்குமா? தயவுசெய்து இதைப் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் அக்கறையாக, அன்பாக இருப்பது, இது தேவை, இது வேண்டும் என்று பொருள் சேர்ப்பது என எல்லாமே அது உங்களுக்கு ஆனந்தம் கொண்டுவரும் என்ற ஒரே நம்பிக்கையில்தான்.

ஒரு ஆன்மீகவாதிக்கும், உலகாயதவாதிக்கும் இடையில் என்ன வேறுபாடு இருக்கிறது? என்ற இந்தக் கேள்வியை மக்கள் எப்போதும் என்னிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் நான் இப்படி வேடிக்கையாக சொல்வதுண்டு, பொருள் தேடும் ஒரு நபர், தனக்கான உணவை மட்டும் சம்பாதித்துக் கொள்கிறார். மற்ற அனைத்திற்கும் - அன்புக்கு, ஆனந்தத்துக்கு, அமைதிக்கு - அவர் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. ஆன்மீகத் தன்மையுடைய ஒரு நபர், தன் அன்பு, ஆனந்தம், அமைதி என்று எல்லாவற்றையும் தானே சம்பாதித்துக் கொள்கிறார். அவர் தனக்கான உணவுக்கு மட்டும் பிச்சை எடுக்கிறார். அவர் விரும்பினால், அதையும்கூட அவரால் சம்பாதித்துக்கொள்ள முடியும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement