ADVERTISEMENT
அதிர்ஷ்டம் இருந்தாதான் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என சொல்லிக்கொண்டு சுற்றுபவர்கள் மத்தியில் திறமையிருந்தால் எந்த உயரத்திற்கும் போகலாம் என்பதை அவ்வப்போது சாதனையாளர்களும் நிரூபிக்கின்றனர். குத்துச்சண்டைன்னா அண்டர் டேக்கர், கிரேட் காளி போன்று வெயிட்டான அடியால் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார், திண்டுக்கல் ஓடைப்பட்டியை சேர்ந்த கல்லுாரி மாணவி ஸ்டிக்கா ஜாஸ்மின்.
பல போட்டிகளில் தங்கத்தை வென்று தங்க மங்கையாக வலம் வரும் இவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனம்திறந்ததாவது:
சிறு வயதில் இருந்தே குத்துச்சண்டை மீது எனக்கு ஆர்வம். இதனை விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட அப்பாவிடம் கூற, 16 வயதில் திண்டுக்கல் குத்துச்சண்டை அசோசியேஷனில் சேர்த்து விட்டார். அங்கு பயிற்சி எடுத்த 2 மாதத்திலே பெண்களுக்கான மாநில குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி கோப்பை வென்றேன். உறவினர்கள், நண்பர்கள் இந்த விளையாட்டு வேண்டாம் எனக் கூறினர். எதையும் கவனிக்காமல் குதிரைக்கு கடிவாளம் கட்டியது போல் என் பயணமும் இலக்கை நோக்கி தொடர்ந்தது.
2021ல் சென்னையில் நடந்த மாநில போட்டி, 2022ல் கிருஷ்ணகிரியில் நடந்த போட்டியில் தங்கம் வென்றேன். தற்போது கோவையில் தென் மண்டல போட்டியிலும் தங்கம் வென்றேன். இதுவரை 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக்கங்களை வென்றுள்ளேன். 2021ல் முதல்வர் கோப்பை போட்டியில் ரூ.50 ஆயிரம் பரிசு பெற்றேன்.
என் போட்டியை பார்ப்பவர்கள் எதிரியை தாக்கும் போது என் அடி பலமாக இருக்கும் என தெரிவிப்பார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். பெண்களால் சாதிக்க முடியாததது எதுவும் இல்லை. என் இலக்கே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே. இதை நோக்கிதான் ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் படிப்பிலும் முதல் இடம் தான், என்றார்.
இவரை வாழ்த்த 70108 43085
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!