காங்கிரஸ் எம்.பி., ராகுல், 2019 ஏப்., 13ல் கர்நாடக மாநிலம் கோலாரில் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 'ஏன் அனைத்து திருடர்களின் பெயர்களும் மோடி என முடிகிறது' என, அவர் பேசினார்.
அவதுாறு வழக்கு
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, வெளிநாடு தப்பிய வைர வியாபாரி நிரவ் மோடி, ஐ.பி.எல்., எனப்படும் கிரிக்கெட் போட்டியில் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் லலித் மோடி ஆகியோருடன், பிரதமர் நரேந்திர மோடியின் பெயரையும் ஒப்பிட்டு அவர், இவ்வாறு பேசியதாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ராகுல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த சூரத் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா, இந்த வழக்கில் ராகுலை குற்றவாளி என்று அறிவித்தார். இந்த குற்றத்துக்காக, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
பின், ராகுலுக்கு ஜாமின் வழங்கிய நீதிபதி, மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக, 30 நாட்களுக்கு இந்த தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 2018ல், நாட்டின் காவல்காரன் என்று கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி ஒரு திருடன் என பொருள்படும் வகையில், 'சவுகிதார் சோர் ஹை' என, ராகுல் பேசினார். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தன் பேச்சுகளில் ராகுல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.
உச்ச நீதிமன்றம் எச்சரித்தும், இவருடைய நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை. இவர் ஒரு எம்.பி.,யாக உள்ளார். ஒரு எம்.பி., பொது நிகழ்ச்சியில் பேசுவது, எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் உணரவில்லை.
இவருக்கு குறைந்த தண்டனை அளித்தால், அது மக்களிடையே தவறான உதாரணமாகிவிடும். மேலும், அவதுாறு வழக்குக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். யார் வேண்டுமானாலும், யாரைப் பற்றியும் அவதுாறாகப் பேசலாம் என்பதற்கு வழி வகுத்துவிடும்.
அதனால், இந்திய தண்டனை சட்டம், 499 மற்றும் 500வது பிரிவுகளின்படி, ராகுல் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். அவருக்கு, இரண்டு ஆண்டு தண்டனை விதிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தகுதி இழப்பு
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., அல்லது எம்.எல்.ஏ., அந்தப் பதவியில் தொடரும் தகுதியை இழக்கின்றனர். மேலும் தண்டனை முடிந்த பின், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது.
இது குறித்து, மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி கூறியதாவது:
தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து,இந்த தகுதி நீக்கம் நடைமுறைக்கு வரும். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தண்டனை அறிவிக்கப்பட்டதில் இருந்து, மூன்று மாதங்களுக்குப் பிறகே, அதை செயல்படுத்த முடியும்.இதற்கிடையே மேல்முறையீடு செய்து, அதில் குற்றம், தண்டனை அல்லது இரண்டுக்கும் தடை விதிக்கப்பட்டால், தகுதி இழப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராகுல் சார்பில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளதாவது:சட்டம் தன் கடமையை செய்யும். ஒருவரை ஜாதியின் பெயரால் இழிவாக குறிப்பிடுவது, மிகப் பெரிய அவதுாறாகும். அதற்காகவே, சூரத் நீதிமன்றம் இந்த தண்டனையை அளித்துள்ளது.சூரத் நீதிமன்றத்தில், பல நீதிபதிகளை மாற்றியதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். நீதித் துறை மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையே இது காட்டுகிறது. நீதிமன்றங்கள் தங்களுடைய பாக்கெட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனரா?நீதிமன்ற உத்தரவுக்கு, காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களை இழிவாக பேசுவதற்கு ராகுலுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனரா?இது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அதை மதித்து நடக்கும் நாடு. மற்றவர்களை இழிவாக பேசும் சுதந்திரம் யாருக்கும் கிடையாது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தீர்ப்புக்கு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல், தீர்ப்பு வெளியான பின், சமூக வலைதளத்தில், மஹாத்மா காந்தியின் மேற்கோள்களை குறிப்பிட்டிருந்தார். 'உண்மை மற்றும் அகிம்சை என் மதம். உண்மையே என் கடவுள்; அதை அகிம்சை வழியில் அடைவேன்' என, ராகுல் குறிப்பிட்டுள்ளார்.காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:கோழையான, சர்வாதிகார போக்குடைய பா.ஜ., அரசு, ராகுல் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வன்மத்துடன் செயல்பட்டு வருகிறது.
அதானி விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணைக்கு கோருவதால், இந்த பழிவாங்கும் நடவடிக்கையில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.அரசியல் ரீதியில் எதிர்க்க முடியாத பா.ஜ., அரசு, அமலாக்கத் துறை, போலீஸ், சி.பி.ஐ., போன்றவற்றை ஏவி வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.'பயந்துவிட்ட பா.ஜ., அரசு, ராகுலின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறது. என் சகோதரர், எதற்கும் பயப்பட மாட்டார்; எப்போதும் உண்மையையே அவர் பேசுவார்' என, ராகுலின் சகோதரியும், கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (45)
கோர்ட்டாவது ...... ராவது என்று கோர்ட்டையும் நீதிபதிகளையும் அவமதித்தவரையே மன்னிப்பு கேட்டதும் தண்டனை கொடுக்காமல் மன்னித்து விட்டனர்.அதைவிட இது பெரிய குற்றமா?
அபிமன்யு வதம் சூழ்ச்சி நிறைந்தது.
பார்க்கப் போனால் திருடர்கள் தான் இவர் மேல் அவதூறு வழக்கு போட்டிருக்கணும்.
போகுமிடமெல்லாம் உளறல் , அலட்சிய , அருவெறுப்பு , அநாகரீக பேச்சுக்கள் . இதையெல்லாம் தேர்ந்தெடுத்தாங்களே அவங்களை சொல்லணும்.
இந்தியரின் தரம் இங்குள்ள சில பதிவுகளில் தெளிவு.