ADVERTISEMENT
சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அசோக்பாபு: காலாப்பட்டு, திருக்கனுார், திருபுவனை, பாகூர் ஆகிய கிராம பகுதிகளில் இடத்தை தேர்வு செய்து, அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு பொது மருத்துவமனையை அமைக்கப்படுமா?
அசோக்பாபு: வெறிநாய் கடிக்கு உள்ளாகும் பொதுமக்களுக்கு, அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
முதல்வர் ரங்கசாமி: ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அசோக்பாபு: அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: மருத்துவ வசதிகள் மற்ற பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் கதிர்காமத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையை கொண்டு சென்றுள்ளோம். காலாப்பட்டு, திருக்கனுார், திருபுவனை, பாகூர் ஆகிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சப் சென்டர்கள் உள்ளன. புதிதாக அரசு பொது மருத்துவமனை அமைக்க ரூ. 300 கோடி தேவைப்படுகிறது. இது எப்படி சாத்தியமாகும் என்பதையும் யோசிக்க வேண்டும்.
கல்யாணசுந்தரம்: எனது தொகுதியான காலாப்பட்டு, சஞ்சீவி நகர் ஆகிய பகுதிகள் தமிழக எல்லையையொட்டி உள்ளதால் அரசு மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும்.
முதல்வர்: காலாப்பட்டு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. மிகப்பெரிய தனியார் மருத்துவமனையும் அங்குள்ளது. அதன் சேவைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆலங்குப்பத்தில் தரம் வாய்ந்த ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து கொடுக்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: புதுச்சேரிக்கு அடுத்து வளர்ந்து வரும் பகுதியாக வில்லியனுார் உள்ளது. அனைத்து கிராமங்களையும் இணைக்கும் மைய பகுதியாக உள்ளது. எனவே வில்லியனுார் பகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும்.
நாஜிம்: புதுச்சேரியில் ஏற்கனவே அரசு பொது மருத்துவமனை உள்ளது. ஆனால் காரைக்காலில் சரியான சிகிச்சை வசதி கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
முதல்வர்: காரைக்கால் மக்களுக்கு நல்ல மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜிப்மர் மருத்துவமனை கிளை துவக்கப்பட்டது. விரைவில் அது செயல்பாட்டிற்கு வர உள்ளது. நம்முடைய அரசு பொது மருத்துவமனையும் இதன் மூலம் மேம்பாடு அடைய உள்ளது. அதற்கான நிதியும் தற்போது ஒதுக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் திருநள்ளாரில் புதிய அரசு மருத்துவக் கல்லுாரி துவங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
செந்தில்குமார்: வில்லியனுாரை சுற்றி 3 அமைச்சர்கள் உள்ளனர். அங்கு எல்லாமே இருக்கிறது. ஒரே ஒரு குறை தான் உள்ளது. அங்கு கடற்கரை இல்லை. அதனையும் கொண்டு சென்றுவிட்டால் மகிழ்ச்சி அடைவார்கள். (சபையில் சிரிப்பலை எழுந்தது)
முதல்வர்: அரசு பொது மருத்துவமனை புதிதாக எந்த பகுதியில் ஆரம்பிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேர பணியில் டாக்டர்களை நியமிக்க உள்ளோம்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!