நெம்மேலி கடலில் மிதக்கும் துகளால் சுத்திகரிப்பு நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு
சென்னை: சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக, 15 மண்டலங்களில் தினமும், 100 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த குடிநீர், பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் நீர்நிலைகள் மற்றும் மீஞ்சூர், நெம்மேலி-யில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படுகிறது.
இதில், நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, தினமும் 11 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.
சீரான மின் வினியோகம் கிடைக்காதது, இயந்திரக் கோளாறு காரணமாக தினமும் 5 கோடி லிட்டருக்கும் குறைவாக, குடிநீர் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கண்ணுக்கு புலப்படாத மண் தன்மை உடைய பொருட்கள் கடலில் மிதப்பதாக கூறப்படுகிறது.
இந்த பொருள், சுத்திகரிப்பு நிலைய இயந்திரத்தில் இருந்து கழிவுகளாக வெளியேறாததால், குடிநீர் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக, கடல்நீருடன் வரும் மண், தனி இயந்திரம் வழியாக வெளியேற்றப்படும். பின், சுத்திகரிப்பு இயந்திரம் செல்லும் கடல்நீர், சுத்திகரித்து குடிநீராக்கப்படும்.
ஆனால், மண் தன்மை உடைய மிதவை பொருட்கள் கடல் நீருடன் வருவதால், அவை வெளியேறாமல், இயந்திரத்திற்குள்ளே சுழன்று கொண்டிருப்பதால், சுத்திகரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மணலுடன் வரும் மிதவை பொருட்களால், குடிநீருக்கு எந்த பாதிப்பும் இல்லை. மிதவை பொருட்களை வெளியேற்ற ஆய்வு செய்து வருகிறோம்' என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!