Load Image
Advertisement

15 நாளில் ரேஷன் கார்டு கிடைக்கும் குடிமைப்பொருள் துறையினர் தகவல்

உடுமலை:தகுதியான விண்ணப்பங்களை பரிசீலித்து, மாவட்டத்திலேயே ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி துவங்கிவிட்டது.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள், குறைந்த விலையில் தருவதற்காக, அரசின் சார்பில் ரேஷன்கார்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

ரேஷன்கார்டு இல்லாதவர்கள், குடிமைப்பொருள் துறையினரிடம், உரிய ஆவணங்களுடன் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஜன., மாதத்தில் இருந்து, மாவட்ட தலைநகரிலேயே, புதிய கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, கலெக்டர் ஒப்புதலுடன், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

கடந்த இரண்டு வாரமாக, பிப்., மாதம் வரை நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் அச்சிட்டு, தாலுகா அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் கூறியதாவது:

நான்கு மாதம் நிலுவையில் இருந்த விண்ணப்பங்களை பரிசீலித்து, புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்கும் பணி நடந்து வருகிறது.

காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க, மாவட்டத்திலேயே, கார்டு அச்சிடும் வசதி செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலித்து, ஒவ்வொரு மாதமும், 15 நாட்கள் இடைவெளியில், நிர்வாக ஒப்புதல் பெற்று, புதிய கார்டுகளை அச்சிட்டு வழங்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, நிலுவை விண்ணப்பம் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் துவங்கி, உடனுக்குடன் கார்டு அச்சிடப்படும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

திருமணமாகி ஒரே குடும்பமாக வசிப்பவர்கள், தனியாக ரேஷன் கார்டு பெறக்கூடாது; பழைய கார்டில் பெயர் மட்டும் சேர்த்துக்கொள்ளலாம்.

கூட்டுக்குடும்பமாக வசிப்பவர் கார்டு பெறுவதை தடுக்கவே, புதிய கார்டு கேட்டு விண்ணப்பிக்கும் போது, கட்டாயம் காஸ் இணைப்பு வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர்.

பலகட்ட சரிபார்ப்புக்கு பிறகே, பயனாளிகளாக தேர்வு செய்து, கலெக்டர் ஒப்புதலுடன் கார்டு அச்சிட்டு வழங்குவதாக, குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய ரேஷன்கார்டுகள், தாமதமின்றி விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement