ADVERTISEMENT
பொன்னேரி: சம்பா நெல் அறுவடைக்கு பின், பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் பகுதிகளில் கோடைகால பயிரான தர்ப்பூசணி வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வமாக ஈடுபட்டு உள்ளனர்.
மேற்கண்ட பகுதிகளில், 1,200 ஏக்கர் பரப்பில், தர்ப்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தர்ப்பூசணி பழங்கள் அறுவடைக்கு வரும் நிலையில் தற்போது, சிறிய காய்களுடன் அதன் செடிகள் வளர்ந்து உள்ளன.
இந்நிலையில், மூன்று நாட்களாக திடீர் மழை பொழிவு இருந்து வருகிறது. இதனால் தர்ப்பூசணி பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.
மழை அளவு மேலும் அதிகரித்தால், தர்ப்பூசணி வளர்ச்சி பாதிக்கும் என்பதை எண்ணி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் தெரிவித்ததாவது:
கோடைகால பயிரான இதை வளர்த்து பராமரிப்பது மிகவும் கடினமான பணியாகும். செடிகளுக்கு தேவைக்கு ஏற்ப தண்ணீர் விடப்படுகிறது.
மழை அதிகரித்தால், செடிகள், அதிலுள்ள காய்கள் அழுகிவிடும். ஒரு ஏக்கருக்கு, 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து உள்ளோம்.
இனி மழை பொழிவு இல்லை என்றால் தர்ப்பூசணி செடிகளை காப்பாற்றி விடுவோம். மழை பெய்தால், பெரும் நஷ்டம் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!