பூந்தமல்லி கிராம நத்தம் நிலங்களை மெட்ரோ ரயிலுக்கு எடுத்தது ரத்து
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில், ஆதிதிராவிடருக்கான நத்தம் நிலங்களில், சாக்ரடீஸ் என்பவர் உள்ளிட்ட ஐவர், வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர்.
இந்த நிலங்களில் இருந்து வெளியேறும்படி, நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ், தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார்.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் உள்ளிட்ட ஐந்து பேரும், மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எஸ்.சவுந்தரராஜன், ''இந்த நிலம், ஆதிதிராவிடர் நத்தம் வகையைச் சேர்ந்தது.
நில ஆக்கிரமிப்பு சட்டத்தை பிரயோகிக்க முடியாது. இருந்தாலும், 'மெட்ரோ' ரயில் திட்டத்துக்கு தேவை என்றால், உரிய இழப்பீடு அளிக்கும் பட்சத்தில், அவற்றை ஒப்படைக்க தயார்,'' என்றார்.
மனுவை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
பூந்தமல்லி கிராமத்தில், 456 சதுர மீட்டர் நிலத்தைப் பொறுத்தவரை, ஆதிதிராவிடர் நத்தம் என, நில ஆவண பதிவேட்டில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்கள் குடியிருப்புக்கான நிலம் அது. மனுதாரர்கள், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
கிராம நத்தம் எனப்படும் ஆதிதிராவிடர் நத்தம் நிலங்களை, அரசு நிலமாக கருத முடியாது. எனவே, தாசில்தார் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு தொகையை நிர்ணயம் செய்யலாம். தொகையை பெற்று, நிலங்களை அரசிடம் ஒப்படைக்கலாம்.
இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!