Load Image
Advertisement

ஆமை வேகத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆய்வு  கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்

Councilors are furious at the development project work review meeting which is going on at a snails pace    ஆமை வேகத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆய்வு  கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசம்
ADVERTISEMENT
உடுமலை:நகராட்சியில், நுாற்றாண்டு விழா பணிகள், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் பூங்கா புதுப்பிக்கும் பணி என அனைத்து வளர்ச்சி பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது என கவுன்சிலர்கள் சரமாரியாக குறைகளை கூறினர்.

உடுமலை நகராட்சியில், அனைத்துத்துறைகளில் நடந்து வரும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதில், தலைவர், கவுன்சிலர்கள் பேசியதாவது:

உடுமலை நகராட்சியில், நுாற்றாண்டு விழா பணிகள், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் பூங்கா புதுப்பிக்கும் பணி என அனைத்து வளர்ச்சி பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

மின் வாரியத்திற்கு விண்ணப்பித்தாலும், மின் விளக்கு, மின் கம்பங்கள் அமைத்தல் என எந்த பணிகளும் நடப்பதில்லை.

மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு, சொத்து வரி செலுத்தவில்லை; 80 லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டணம் செலுத்தாததால், பணிகள் செய்ய முடியாது, என மின் வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

திருப்பூர் ரோடு - தாராபுரம் ரோடு இணைக்கும் ரோட்டில், ஒரு சில அடி நிலம் வழங்க மறுக்கின்றனர். உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள, 150 கிராம விவசாயிகள் வந்து செல்லும் சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் இல்லை.

கடைகள் உள்வாடகைக்கு விடப்படுகிறது. எந்த பணிகளையும் விரைந்து முடிப்பது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை.

நிலத்தடி நீர் விற்பனை முறைகேடாக நடக்கிறது; பல லாரிகள் வணிக நோக்கில் நீரை உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது.

ஐஸ்வர்யா நகரில், பல கோடி ரூபாய் மதிப்பிலான, 50 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கு மாற்றாக, 5 கி.மீ., துாரம் தள்ளி, புற நகர் பகுதியில் நிலம் வழங்கி, அதனையும் கடந்த ஆட்சிக்காலத்தில் முறைகேடாக பெற்றுள்ளனர். பூங்கா ஒதுக்கீட்டு இடத்தை மாற்று பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என்ற உயர் நீதிமன்ற விதி மீறப்பட்டுள்ளது.

கடந்த, 2010ம் ஆண்டு, உடுமலையை சுற்றிலும் உள்ள போடிபட்டி, கணக்கம்பாளையம், பெரியகோட்டை, குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, ராகல்பாவி, கணபதிபாளையம், பூலாங்கிணர் உள்ளிட்ட ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைந்து, விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.

இதன் வாயிலாக, தற்போது, 7.41 சதுர கி.மீ., பரப்பளவுள்ள நகராட்சி, 91.17 சதுர கி.மீ., பரப்பளவு உள்ளதாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.

குடிநீர், பாதாள சாக்கடை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சுற்றுப்புற கிராம மக்களுக்கும் கிடைக்கும். வருவாய் பல மடங்கு உயரும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் மையத்தடுப்புகள், தளி ரோடு விரிவாக்கம், தாராபுரம் ரோட்டையும், பழநி ரோட்டையும் இணைக்கும் சுற்றுச்சாலை திட்டம் ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

இரண்டு குடிநீர் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது; பழைய குடிநீர் திட்ட குழாய்களை புதுப்பிக்கவும், கூடுதல் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, பேசினர்.

அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:

வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முதல்வர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். விரைவில் நமது பகுதியில் நடக்கும் என்பதால், அதற்குள் நிலுவை பணிகளை முடிக்க வேண்டும்.

தற்போது வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அருகிலுள்ள ஊராட்சிகளை இணைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் கருத்து கேட்டு, அவர்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே இணைக்க வேண்டும்.

அருகிலுள்ள ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையை, நகராட்சி வசம் பிரித்து ஒப்படைக்கவும், அதனை மறு சுழற்சி செய்யவும் நகராட்சி முன் வர வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து அகற்ற வேண்டும். உழவர் சந்தை பகுதியில், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற,அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அமைச்சர் பேசினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement