Load Image
Advertisement

நீர்வளத்துறை பதவிக்கு 2 சி கொடுத்து புக்கிங்!

Tamil News
ADVERTISEMENT



''விசுவாசத்தை, இடம் மாத்தி காட்டுனா உருப்படுமா பா...'' என்றபடியே, 'பட்டர் பிஸ்கட்'டை கடித்தார் அன்வர்பாய்.

''விபரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க, திருப்பத்துார் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் சமீபத்துல, ஆம்பூர்ல கடை கடையா, 'ரெய்டு' நடத்தினாரு...

''பெரும்பாலான கடைகள் பூட்டி கிடந்துச்சு... எப்படியோ, முன்கூட்டியே விஷயத்தை மோப்பம் பிடிச்ச கடைக்காரங்க, 'எஸ்கேப்' ஆயிட்டாங்க பா...

''சோதனையில, ௧,௦௦௦ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் பிடிபட்டுச்சு... 'கலெக்டர், ரெய்டுக்கு வர்றாரு'ன்னு, கடைக்காரங்களை ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் முன்கூட்டியே, 'அலர்ட்' செஞ்சிட்டாங்க பா...

''இப்ப, தகவல் சொன்னவங்க யார்னு தெரிஞ்சிடுச்சு... சீக்கிரத்துலயே அவங்க மேல நடவடிக்கை இருக்கும்னு சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''போலீஸ் டிபார்ட்மென்டையே அசிங்கப்படுத்துதாரு வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருச்சி சமயபுரத்துல, எஸ்.பி., தனிப்பிரிவு அதிகாரியா இருக்கிறவர், கஞ்சா, லாட்டரி, போலி மது விற்பனை, சூதாட்டம், மணல் கொள்ளைன்னு எல்லாத்துக்கும், 'சப்போர்ட்'டா இருந்து, லட்சம் லட்சமா சம்பாதிக்காரு வே...

''எஸ்.பி., எனக்கு வேண்டியவர்னு சொல்லியே காரியம் சாதிச்சிட்டு இருக்காரு... இதைவிட பெரிய அசிங்கம் என்னன்னா, பொண்ணுங்க சமாச்சாரத்துலயும், 'வீக்'கா இருக்காரு வே...

''கோவில்ல வேலை செய்ற சில பெண்களோட நெருக்கமா இருக்காரு... சமீபத்துல ஒரு பெண்ணுடன் லாட்ஜ்ல இருக்கும் போது சிக்கிட்டாரு... இவரை பத்தி, எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க கோவில் அதிகாரிகள் முடிவு செஞ்சிருக்காவ வே...'' என்ற அண்ணாச்சி, ''அட, ஜெயசீலன் எப்ப வந்தீய... மன்னிக்கணும், நான் கவனிக்கல...'' என, நண்பரிடம் பேச்சு கொடுத்தார்.

''முள்ளங்கி பத்தையாட்டம், '௨ சி' கொடுத்து துண்டு போட்டிருக்கார் ஓய்...'' என கடைசி மேட்டருக்கு மாறினார், குப்பண்ணா.

''புரியும்படியா சொல்லும் வே...'' என்றார், அண்ணாச்சி.

''நீர்வளத் துறையின் பெரிய அதிகாரி, இந்த மாசத்தோட, 'ரிட்டையர்' ஆறார்... அந்த இடத்துல உட்காரமூணு அதிகாரிகள் போட்டா போட்டி போட்டா ஓய்...

''அதுல ஒரு அதிகாரி,2 கோடி ரூபாய் குடுத்து, அந்த இடத்துக்கு துண்டு போட்டுட்டார்... இவர், சென்னை தரமணியில இருக்கற நீராய்வு நிறுவனத்துல இப்ப வேலை பார்த்துட்டு இருக்கார் ஓய்...

''அ.தி.மு.க., ஆட்சியில, விழுப்புரத்துல கட்டின தடுப்பணை உடைஞ்சதோல்லியோ... அதுல இந்த அதிகாரி, 'சஸ்பெண்ட்' ஆனவர் ஓய்...

''அவருக்கு தான் இந்த பெரிய பொறுப்பை குடுக்கப் போறா... விஷயம் வெளிய தெரியாம இருக்க, துறையின் தலைமை புள்ளியின் மகன், 'சூப்பர் ஐடியா' வச்சிருக்கார் ஓய்...

''அதாவது, காலியாகப் போற அந்த இடத்துக்கு, பொறுப்பு அதிகாரியா ஒருத்தரை முதல்ல தற்காலிகமா போடப் போறாளாம்... ஒரு மாசம் கழிச்சு, '௨ சி' அதிகாரியை நிரந்தரமா நியமிக்கப் போறாளாம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, 'அசோகன் அண்ணாச்சி... கதிருட்ட பேசிட்டேன்... உங்ககாரியம் முடிஞ்சிட்டுல்லா...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.


வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    நீர்வளத்துறையின் மேலிதடத்தின் மகன் முதல் MP தேர்தல் நின்னுபோனபோது மாட்டிக்கொண்ட கருப்பு பணம், பட்டுவாடா செய்த பணத்தையெல்லாம் வட்டியும் முதலுமாக தேத்த வேண்டாமா..?

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    திருப்பத்துார் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.. அவங்க Staff இல்லாமல் ரகசியமா போலீஸை வச்சு தீடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பிடிக்கணும் .. செய்வாரா..??

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அப்பாவுக்கோ வயதாகிவிட்டது இவர் ராஜ்ஜியம் தான் இனிமேல் இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் அமைச்சரே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement