முத்ரா கடன் ரூ.5 லட்சம் வழங்குவதாக வியாபாரியிடம் ரூ.1.37 லட்சம் மோசடி
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை சேர்ந்த வியாபாரியிடம் மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் ரூ.5 லட்சம் கடன் வழங்குவதாக கூறி ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 100 மோசடி செய்யப்பட்டது.
அபிராமம் அருகே உடையேந்தபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் 35. இவர் குடிநீர் கேன் ஏஜன்சி நடத்தி வருகிறார். இவரது அலைபேசி எண்ணில் VK-BUSSIC என்ற பெயரில் எஸ்.எம்.எஸ்., வந்தது. அதில் குறிப்பிடப்பட்ட எண்ணில் கண்ணன் பேசிய போது, தனது பெயர் தாமரை எனவும், மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் இருந்து பேசுகிறோம், என்று கூறினார்.
இதனை நம்பிய கண்ணன் தனக்கு தொழில் தொடர்பாக ரூ.5 லட்சம் கடன் வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து வங்கி கணக்கு விபரம், பான் எண், முகவரி ஆவணங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய போது ஆவணங்களுக்குரிய கட்டணத்தை முன்கூட்டி செலுத்த வேண்டும், என கூறியுள்ளனர்.
இதையடுத்த கண்ணன் தனது வங்கி கணக்கில் இருந்து அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு மார்ச் 7 முதல் 14 வரை பலமுறை ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 100 அனுப்பியுள்ளார். ஆனால் பணத்தை பெற்ற பின் கடன் வழங்கவில்லை.
சந்தேகமடைந்த கண்ணன் விசாரித்த போது மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டம் என குமரன் நிதி நிறுவனம் என்ற பெயரில் போலி ஆவணங்களை அவருக்கு அனுப்பி பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!