ரூ.32.48 லட்சத்தை திருப்பித்தர வேண்டும்
சென்னை: குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனம் அதற்காக, வசூலித்த, 32.48 லட்ச ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என 'ரியல் எஸ்டேட்' ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க, புவனா, மோகன் ஆகியோர் இணைந்து, 32.48 லட்ச ரூபாய் செலுத்தி ஒப்பந்தம் செய்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, அந்நிறுவனம், 2016ல் வீட்டை ஒப்படைக்க ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த காலகெடுவுக்குள் வீட்டை ஒப்படைக்கவில்லை.
இதையடுத்து புவனா, மோகன் ஆகியோர் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர். இது குறித்து ஆணைய உறுப்பினர் சுனில்குமார் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
குறிப்பிட்ட கால கெடுவுக்குள் கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிறது. அந்நிறுவனம் தெரிவித்த காரணங்கள் திருப்திகரமாக இல்லை.
எனவே, மனுதாரரிடம் வசூலித்த, 32.48 லட்ச ரூபாயை வட்டியுடன் அந்நிறுவனம் திருப்பித்தர வேண்டும். மேலும், வழக்கு செலவுக்காக, மனுதாரருக்கு, 25 ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி, மனுதாரர், ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலரிடம் முறையிடலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!