ADVERTISEMENT
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த ஊராட்சியைச் சுற்றி, தண்டலம், மொறப்பாக்கம், கோழியாளம், கூடப்பாக்கம், தண்டரை, செம்பூண்டி உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன.
இப்பகுதிகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பெரும்பாக்கம் ஊராட்சியில், அம்மா பூங்கா அருகே மேய்க்கால் புறம்போக்கு பகுதியில், வியாழக்கிழமைதோறும் நடக்கும் வாரச்சந்தையில், தங்களுக்கு தேவையான மளிகை மற்றும் காய்கறி பொருட்களை வாங்கி சென்றனர்.
இந்த சந்தையில், சுற்று வட்டார பகுதி விவசாயிகள், தங்களின் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பாகற்காய், புடலை, சுரைக்காய், தக்காளி, முள்ளங்கி, வெண்டை, கீரை வகைகள், வேர்க்கடலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தனர். இதனால், விவசாயிகள் லாபம் ஈட்டி வந்தனர்.
மழை மற்றும் கோடை காலங்களில் தடங்கல் இன்றி வாரச்சந்தை நடைபெற, புதிதாக அரசு நடுநிலைப்பள்ளி அருகே சந்தை அமைப்பதற்காக 2020 -- 2021ம் ஆண்டு, 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 30 கடைகள் அமைப்பதற்கான பணி துவக்கப்பட்டது.
சந்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் 5 கி.மீ., துாரம் பயணித்து, மதுராந்தகம் டவுன் பகுதிக்கு சென்று, பொருட்களை வாங்கி வர வேண்டிய சூழல் உள்ளது.
எனவே, உரிய துறை சார்ந்த அதிகாரிகள், பெரும்பாக்கத்தில் வாரச்சந்தை அமைக்கும் கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!