ADVERTISEMENT
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலையில், குடியிருப்பு வீடுகள் மட்டுமின்றி வணிக வளாகம், திருமண மண்டபம், உணவகம், பேக்கரி மற்றும் பழமையான சிவன் கோவில்கள் உள்ளது.
பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையத்திற்கு செல்வோர் இந்த சாலை வழியாக சென்று வருகின்றனர்.
மேலும், சுங்குவார்சத்திரம், பூந்தமல்லி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையின் இருபுறமும் மழை நீர் வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது.
மழை நீர் மட்டுமே வெளியேற அமைக்கப்பட்ட இக்கால்வாயில் பலர் முறைகேடாக கழிவு நீரை விட்டுள்ளதால், தற்போது கழிவு நீர் செல்கிறது. கடந்த ஆண்டு கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக கழிவு நீர் சாலையில் வழிந்தோடியது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து, கால்வாயின் மேல்தளத்தை உடைத்து அடைப்பை நீக்கினர்.
பின், உடைக்கப்பட்ட கால்வாய் மீது சிமென்ட், மணல், கருங்கல் ஜல்லி கலவை வாயிலாக 'கான்கிரீட்' மேல்தளம் அமைத்து சீரமைத்தனர். சீரமைப்பின்போது, தரமான கட்டுமானப்பணி மேற்கொள்ளாததால், இறவாஸ்தானம் கோவில் எதிரில் கால்வாயின் மேல்தளத்தின் இரு இடங்களில் இடிந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
நடைபாதையின் மீது நடந்து செல்லும் பக்தர்கள், ரயில் பயணியர் உள்ளிட்ட பாதசாரிகள் உடைப்பு ஏற்பட்ட பகுதியை கவனிக்காமல், பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
மேலும், சாலை தரைமட்டத்திற்கு உள்ள கால்வாய் மீது, டூ - வீலர், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சென்றால், கால்வாய் மேலும் இடிந்து விழும் நிலை உள்ளது.
எனவே, கால்வாயின் மேல்தளத்தில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைப்பதோடு, மீதமுள்ள இடங்களின் உறுதித்தன்மையை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!