மாவட்ட திட்டக்குழு அமைக்க அரசு உத்தரவு காஞ்சியில் எட்டு பேர் இடம் பெறுவர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 ல் அக்டோபர் மாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து, 11 மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர்.
மறைமுக தேர்தல் மூலம், மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க., வைச் சேர்ந்த படப்பை மனோகரன் தேர்வு செய்யப்பட்டார். இவரது தலைமையில், மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.
நடவடிக்கை
கூட்டத்தில், ஊராட்சிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், தேர்தல் நடந்து ஒரு ஆண்டுக்கும் மேலான நிலையில், மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படாமலேயே இருந்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு முன்னதாக தேர்தல் நடைபெற்ற, பிற மாவட்டங்களில் கூட, மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படாமல் இருந்தன.
மாவட்ட திட்டக்குழு என்பது, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடும் வகையில், தொலை நோக்கு பார்வையுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து திட்டமிட வசதியாக இக்குழு அமைக்கப்படும்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், திட்டக் குழுவின் தலைவராக இருப்பார். குழுவின் செயலராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் செயல்படுவார்.
கவுன்சிலர்கள் உறுப்பினர்களாக இருப்பர். மாவட்ட திட்டக்குழு காலாண்டுக்கு ஒரு முறை கூடி, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து, தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகம் வாயிலாக, கருத்துருக்களை அரசுக்கு அனுப்பி வைக்கும்.
ஆனால், ஒரு ஆண்டுக்கும் மேலாக, திட்டக்குழு அமைக்காததால், வளர்ச்சி பணிகளை ஆலோசிக்க முடியாமல், மக்கள் பிரதிநிதிகள் இருந்தனர். இந்நிலையில், மாவட்ட திட்டக்குழு அமைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை செயலர் அமுதா வெளியிட்டுள்ளார்.
அரசுக்கு அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, சட்டப்பிரிவு 241 ன்படி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள், ஊரகப் பகுதி மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைகளுக்கு இடையேயுள்ள விகிதாச்சார அளவிற்கேற்ப திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், மொத்தம் எட்டு திட்டக்குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, ஐந்து உறுப்பினர்களும், மாநகராட்சி, நகராட்சி அமைப்புகளுக்கு இரண்டு திட்டக்குழு உறுப்பினர்களும், பேரூராட்சி அமைப்பு சார்பாக ஒரு திட்டக்குழு உறுப்பினரும் இருப்பார்.
இந்த வளர்ச்சி திட்டம் மூலம், வேளாண்மை, நிலவள மேம்பாடு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், கோழிப்பண்ணை, மீன்வளம், கிராம தொழில்கள் போன்றவை மேம்பாடு அடைய திட்டமிடப்படும்.
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் பதவியேற்ற பின், ஒவ்வொரு காலாண்டிலும் நடக்கும் இக்கூட்டத்தில், அனைத்து துறை சார்ந்த பிரச்னைகள் ஆலோசிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!