Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... நாமக்கல்

ஏகாதசி சிறப்பு பூஜை
ஏகாதசியை முன்னிட்டு, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.

பங்குனி மாத ஏகாதசியையொட்டி, பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் பெருமாளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட, ஒன்பது வகையான அபிஷேகம், ஒன்பது வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


போக்சோவில் வாலிபர் கைது
நாமகிரிப்பேட்டை அடுத்த ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் பிரவீன் குமார், 19; இவர் கடந்த சில நாட்களாக தங்களது வீட்டிற்கு அருகேயுள்ள சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட, 17 வயது சிறுமியின் பெற்றோர், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, நேற்று பிரவீன் குமாரை, போக்சோவில் கைது செய்தனர்.

பகுதி நேர வேலை தருவதாக கூறி
ஆன்லைனில் ரூ.9.88 லட்சம் மோசடி
ப.வேலுார் தாலுகா, பொத்தனுாரை சேர்ந்தவர் நரேந்திரன்; இவரது மனைவி திவ்யா, 28. இன்ஜினீயரிங் முடித்துள்ள இவர், வீட்டிலிருந்தே பணி செய்வது போன்ற பகுதி நேர வேலையை தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது, 'வாட்ஸ் -ஆப்' எண்ணுக்கு, ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், முதலில் பயிற்சி கொடுத்த பின், பகுதி நேர வேலை தருவதாகவும் சில, 'டாஸ்க்' இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதை உண்மை என நம்பி திவ்யா, சிறிய, சிறிய தொகையாக பணம் செலுத்தியுள்ளார்.
அவர்கள் சொன்ன வேலையை முடித்த திவ்யாவுக்கு, அவர்கள் முதலில் பணம் அனுப்பி உள்ளனர். அதன்பின், தொகை அதிகமாக செலுத்த கூறியுள்ளனர். அதையும் செலுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.
இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திவ்யா, நாமக்கல் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதில், ஆன்லைனில், 9 லட்சத்து, 88 ஆயிரத்து, 310 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புகார்படி, சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவர் சடலம் மீட்பு
எருமப்பட்டி அருகே, தேவராயபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 70; மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த, 10 முதல் காணவில்லை என, இவரது அண்ணன் மனைவி பாப்பாத்தி, எருமப்பட்டி போலீசில் புகாரளித்திருந்தார். இந்நிலையில், ராமகிருஷ்ணன் தலமலை அடிவாரத்தில் உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், முதியவரின் சடலத்தை மீட்டு, விசாரிக்கின்றனர்.

ரூ.2.30 லட்சத்துக்கு
தே.பருப்பு ஏலம்
மல்லசமுத்திரத்தில், நேற்று, தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில், நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. இதில் சுற்று வட்டார விவசாயிகள், 70 மூட்டைகளில் தேங்காய் பருப்புகளை கொண்டு வந்தனர். முதல் தரம், 75.85 முதல் 81.75 ரூபாய்; இரண்டாம் தரம், 63.25 முதல் 70.95 ரூபாய் என, 2.30 லட்சம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.

சாலை மேம்பாடு பணி
நெடுஞ்சாலைத்துறை ஆய்வு
நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்குட்பட்ட, திருச்செங்கோடு நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டம், 2022 - -2023ன் கீழ், மல்லசமுத்திரம்--- - வையப்பமலை, வையப்பமலை - வேலகவுண்டம்பட்டி சாலைகளில் பணிகள் நடந்து வருகின்றன. இதில், சாலையை அகலப்படுத்துதல், பழுது பார்த்தல் உள்ளிட்ட நடந்து வரும் பணிகளை, சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் முருகன் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.
நாமக்கல் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாடு உதவி கோட்டப்பொறியாளர் சோமேஸ்வரி, திருச்செங்கோடு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி பொறியாளர் சுதா மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனிருந்தனர்.

திருவிழா தொடக்கம்
மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலை மலைகுன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ள, மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கம்பம் நடுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. 31ல் பொங்கல் வைபவம் நடக்கிறது. அதையொட்டி, ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


திட்டப்பணி: எம்.எல்.ஏ., ஆய்வு
மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது, ஊராட்சி குடிநீர் வினியோகம் குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர்கள், மின்வாரிய துறை சம்பந்தப்பட்ட பணிகள் குறித்து மின்வாரிய உதவி செய்பொறியாளர், உதவி மின் பொறியாளர் ஆகியோருடன் விவாதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, திட்டப்பணிகளை உரிய காலத்திற்குள், தரமாக மேற்கொள்ள, ஒப்பந்ததாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பி.டி.ஓ.,க்கள் ரமேஷ், அருண்குமார், பஞ்., செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


'போக்சோ' சட்டம் குறித்து
போலீசார் விழிப்புணர்வு
போக்சோ சட்டம் குறித்து, பெண் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, பெண் தலைமை காவலர் ஜெயஸ்ரீ, சிவகாமி, கண்மணி உள்ளிட்ட பெண் போலீசார், நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணிகள், உழவர் சந்தை பிரிவு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் பூங்கா சாலை பகுதிகளில், 'போக்சோ' சட்டம் குறித்தும், போலீஸ் செயலி, மகளிர் உதவி எண்களான, '181' மற்றும் '1098' ஆகியவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement