Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்... தர்மபுரி - கிருஷ்ணகிரி

நாகப்பாம்பை
கடித்து கொன்ற வளர்ப்பு நாய்
ஓசூர், சீத்தாராம் நகரில் ரிங்ரோடு அருகே, வைஷ்ணவி சிற்ப கலைக்கூடம் உள்ளது. இங்கு, ஏராளமான தொழிலாளர்கள் நேற்று பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது அங்கு, அருகிலுள்ள மலையிலிருந்து ஊர்ந்து வந்த நான்கடி நீள நாகப்பாம்பு புகுந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது, சிற்ப கலைக்கூடத்தில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு நாய், பாம்பை விரட்டி ஆக்ரோஷத்துடன் கடிக்கத் துவங்கியது. நாய் கடித்து

குதறியதில் நாகப்பாம்பு இறந்தது. அதன் பின் அந்த நாய், சமாதானமாகி சென்றது.

கோவிலில் திருவிளக்கு பூஜை
ஓசூர், பாரதிதாசன் நகரிலுள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில், இந்தாண்டு வருஷாபிஷேக விழா வரும், 27ல் நடக்க உள்ளது. இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், 350க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள், திருவிளக்கேற்றி பூஜை செய்தனர். வேத விற்பனர்கள் மந்திரங்களை உச்சரிக்க, சுமங்கலி பெண்கள் அதை பின்தொடர்ந்து கூறி, குங்குமம், மஞ்சள், மலர்கள் கொண்டு திருவிளக்கிற்கு பூஜை செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய
தகவலையடுத்து, எஸ்.ஐ.,க்கள் மூர்த்தி, கிருஷ்ணவேணி, நேரு மற்றும் போலீசார், காவேரிப்பட்டணம் கோட்டை தெருவை சேர்ந்த ரவி, 55, என்பவரது வீட்டை சோதனையிட்டதில், 50 கிலோ எடை கொண்ட, எட்டு மூட்டைகளில், 400 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து, ரவியை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்.


தக்காளி விலை சரிவு
அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், கம்பைநல்லுார், அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு ஆகிய இடங்களில் உள்ள மண்டிகளுக்கு, தக்காளி வரத்து, கடந்த ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. இதனால், நான்கு நாட்களுக்கு முன், 20 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி, தற்போது, 15 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மண்டிகளுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், அதன் விலை சரிந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


லாரி கவிழ்ந்து பால் பரிசோதகர் பலி
ஓசூர்: பாலக்கோட்டிலுள்ள தனியார் பால் பண்ணையிலிருந்து, சூளகிரி அருகே, கீழ்மொரசுப்பட்டி கிராமத்திற்கு நேற்று காலை பால் டேங்கர் லாரி வந்தது. இப்பகுதியில் பால் ஏற்றி கொண்டு மீண்டும் பாலக்கோடு நோக்கி புறப்பட்டது. போச்சம்பள்ளி அருகே பணந்துாரை சேர்ந்த முத்து, 38, என்பவர் லாரியை ஓட்டினார். பாலக்கோடு அடுத்த வேப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்த பால் பரிசோதகர் சிவபிரகாஷ், 24, உடன் சென்றார். கீழ்மொரசுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி
தாறுமாறாக ஓடியது. அப்போது, லாரியிலிருந்த சிவபிரகாஷ், கீழே குதிக்க நினைத்து தவறி விழுந்து, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி பலியானார். சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.


பா.ம.க., புதிய மா.செ., நியமனம்
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி, பா.ம.க., கிழக்கு மாவட்ட செயலாளராக, மாநில வன்னியர் சங்க செயலாளராக உள்ள கடத்துார் அடுத்த நல்ல குட்லஹள்ளியை சேர்ந்த அரசாங்கம் என்பவரை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார். அரசாங்கம் ஏற்கனவே இருமுறை மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர், பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


பைப் லைன் அமைக்க பூமிபூஜை
அரூர்: அரூர் அடுத்த வேடகட்டமடுவு பஞ்., ஆலம்பாடியில், 4.60 லட்சம் ரூபாய் மதிப்பில், பைப் லைன் மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. இதில், அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர் பசுபதி, கூட்டுறவு சங்கத்
தலைவர் சிவன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
இருவேறு இடங்களில் இருவர் மாயம்
ஓசூர்: ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 31; மேன் பவர் ஏஜென்சி நடத்தி வந்தார்; கடந்த, 13ல் நண்பகல் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை. அவர் மனைவி புகார்படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை அருகே, தடிக்கல் அருகே பெரிய சாத்தனகல் கிராமத்தை சேர்ந்தவர் சிவா, 32, கூலித்தொழிலாளி; கடந்த, 6ல் மதியம் வீட்டிலிருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் திரும்பவில்லை. அவர் மனைவி புகார்படி, கெலமங்கலம் போலீசார் தேடி வருகின்றனர்.


கிணற்றில் விழுந்த
பசுமாடு மீட்பு
பாப்பிரெட்டிப்பட்டி , மார்ச் 19-
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மாரியம்பட்டியை சேர்ந்தவர் சின்னபாப்பா, 50; இவருக்கு சொந்தமாக விவசாய கிணறில், நேற்று முன் தினம் மாலை பசுமாடு தவறி விழுந்தது. தகவலின்படி பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் ரகுபதி தலைமையில் வந்து கிணற்றில் விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

தி.மு.க., பொதுக்கூட்டம்
தர்மபுரி, மார்ச் 19-
தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பிறந்த
நாளையொட்டி தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்டம் சார்பாக, பொதுக்கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி பேசினார். இதில், மாநில வர்த்தக அணி செயலாளர் தர்மச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் தங்கமணி, ரேணுகாதேவி, நகர செயலாளர் நாட்டான் மாது உட்பட, பலர் பங்கேற்றனர். விழாவில் ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது.
சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பை
மக்கள் அகற்ற முயன்றதால் பரபரப்பு
ஓசூர், மார்ச் 19-
சூளகிரி, காமராஜ் நகரில், 250க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி நுழைவு பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து, அதன் மீது வீடு, கடை கட்டியுள்ளனர். இதனால், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடியாமல், கழிவுநீர் தேங்கி வந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி காமராஜ் நகர் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்வதுடன் நிறுத்தி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், காமராஜ் நகரின் சாலையோரம், ஒருபுறம் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் நிலையில், மற்றொருபுறம் கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பில் இருந்ததால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, நேற்று பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர்.
இதற்கு, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சூளகிரி வி.ஏ.ஓ., அகிலன் சென்று, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
கிருஷ்ணகிரி, மார்ச் 19-
கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மாவட்ட கிளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் அருண்பிரகாஷ்ராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை மாநில துணை செயலாளர் தர்மபுரி பழனி தொடங்கி வைத்து, நாடு முழுவதும் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட துணை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒகேனக்கல்லில் நீர்வரத்து சரிவு
ஒகேனக்கல், மார்ச் 19-
தமிழக - கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்து வருகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீரின்றி பாறைகள் தென்படுகின்றன. மேலும், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 1,200 கன அடியாக சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகள் நீரின்றி, பாறைகளாக காட்சியளிக்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement