பா.ம.க.,வை வழி நடத்துவது யார்? ராமதாஸ் - அன்புமணி இடையே உரசல்!..

பா.ம.க., இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி, 2022 மே 28ம் தேதி கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தலைவரானதும் பேசிய அன்புமணி, 'தமிழக அரசியலில் பா.ம.க.,வை அடுத்த நிலைக்கு கொண்டுச் செல்ல, பா.ம.க., - 2.0 என்ற திட்டத்தை செயல்படுத்துவேன்' என்றார். மாவட்ட அளவில் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார்.
குழப்பம்
மகன் தலைவரான பின்னும், ராமதாஸ், வழக்கம்போல திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் இருந்து கட்சியை நடத்தி வருகிறார். ஒன்றிய அளவிலான நிர்வாகிகளை கூட, அவரே நியமனம் செய்கிறார். இது அன்புமணியை அதிருப்தி அடையச் செய்துள்ளதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அன்புமணியிடம் ஆலோசிக்காமலேயே, ஜி.கே.மணியை கவுரவ தலைவராக ராமதாஸ் நியமித்து விட்டார்.
'அன்புமணியிடம் இருந்த இளைஞரணி தலைவர் பதவிக்கு, ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை நியமித்தார். அன்புமணியின் கடும் எதிர்ப்பால், அவர் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது.
'அப்பா -- மகன் இடையே நடக்கும் பனிப்போரால், யார் சொல்வதை கேட்பது என, கட்சி நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்' என்றனர்.
யாதவ சமுதாயத்தையும், முஸ்லிம்களையும் ஒருங்கிணைத்து, பீஹாரில் லாலு பிரசாத் யாதவும், உ.பி.,யில் முலாயம் சிங் யாதவும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தனர்.
அதுபோல, வன்னியர் களையும், சிறுபான்மை யினரையும் ஒருங்கிணைத்து வெற்றி பெறலாம் என, ராமதாஸ் போட்ட கணக்கு, தமிழகத்தில் பொய்த்து விட்டது.
தி.மு.க., - அ.தி.மு.க.,வை மீறி, சிறுபான்மையினரின் ஓட்டுகளை, பா.ம.க.,வால் பெற முடியவில்லை.
வலியுறுத்தல்
இதை ராமதாசிடம் சுட்டிக்காட்டிய அன்புமணி, 'சிறுபான்மையினரும், தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் தி.மு.க.,வுக்கு தான் ஓட்டளிக்கின்றனர். அந்த ஓட்டுகளை நம்மால் பெற முடியாது.
'எனவே, வன்னியர்கள் நிறைந்த வடக்கு, மேற்கு மாவட்டங்களில், கணிசமாக உள்ள அருந்ததியர்கள், கொங்கு வேளாள கவுண்டர்கள், முதலியார் ஆதரவை பெற வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.
'பா.ம.க., பொதுச்செயலராக அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளார்.
இதற்கு பதிலளித்த ராமதாஸ், 'கார்ல் மார்க்ஸ், ஈ.வெ.ரா., அம்பேத்கர் ஆகியோரை கொள்கை வழிகாட்டிகளாக அறிவித்து தான் பா.ம.க.,வை துவங்கினேன். அந்த பாதையில் இருந்து மாறுவது சரியாக இருக்காது.
'கடந்த, 2009 லோக்சபா தேர்தலுக்கு பின், ஆதிதிராவிடர் அல்லாத பிற சமுதாயங்களை ஒருங்கிணைக்க மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை' என கூறியுள்ளார்.
குமுறல்
பா.ம.க.,வுக்கு எந்தெந்த சமுதாயத்தினரின் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளதோ, அதைப் பெறுவதற்கான முயற்சிகளைதான் செய்ய வேண்டும்.
அதற்கு மாறாக, வன்னியர் சங்கம் நடத்தியபடி, கார்ல் மார்க்சை கொள்கை வழிகாட்டி எனக் கூறுவது, 'சூடான ஐஸ்கிரீம்' என்று சொல்வது போல இருப்பதாக, அன்புமணி ஆதரவாளர்கள் குமுறுகின்றனர்.
வாசகர் கருத்து (16)
அருந்ததியர், வன்னியர் அரசியல் கூட்டு சரிவராது. கவுண்டர், முதலியார் வன்னியருக்கு பல்லக்கு தூக்க விரும்ப மாட்டார்கள். பிற பகுதிகளில் குறிப்பாக தென் மாவட்டங்களில் 100 ஓட்டுகள் வாங்க முடியாது. திமுக நம்பாது? அண்ணா திமுக நிலை மோசம். ராமதாஸ் அன்புமணி தவறான வாதம் வன்னியர்களை பிற சாதி, சமூகத்தில் இருந்து பிரித்து வருகிறது. எதிர்காலம் கானல் நீர்?
இவர்மட்டும் என்ன அப்பா பேச்சை கேட்க வேண்டும் என்ற வியாதியா இருக்கிறது? அம்மா பேச்சை கேட்பவனை ராகுல் என்றும், அப்பா பேச்சை கேட்பவனை ஸ்டாலின் என்றும், சித்தி பேச்சை கேட்பவனை தினகரன் என்றும், எவன் பேச்சையும் கேக்காதவனை மோடி என்றும் தான் பேசினதை எவனும் கேக்கலைன்னா அவனுக்கு எடப்பாடின்னும் தான் பேசரது தனக்கே புரியலைன்னா கமல்ன்னும் தான் பேசரது கடவுளுக்கும் புரியலைன்னா ரஜினின்னும் சொல்லராங்க ........
வயசான சும்மா இருக்கமாடீங்களே என்று மகனும், நான் வளர்த்ததை எப்படி பாழ்படுத்துகிறார் என்று தந்தையும் புலம்பல்.
ஹிஹி... இவரு சாதியை ஒழிக்கப்போகிறாரா...???சாதியை நன்றாக தூபம் போட்டு வளர்ப்பார் ....
அன்று 'வன்னியர்' என்கிற சமூகத்தினரை முன்வைத்து, ஒரு கட்சியை ஆரம்பித்து இன்றுவரை அந்த கட்சியை நகர்த்திக்கொண்டு இருக்கிறார். ஒரு பர்டிகுலர் சமூகத்தினருக்காக ஆரம்பித்த அந்த கட்சியின் தலைவர், மற்ற சமூகத்தினரை அந்த கட்சியில் முன்வர சம்மதிப்பாரா...???