Load Image
Advertisement

மதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3 மாத பெண் குழந்தை கடத்தல்

Tamil News
ADVERTISEMENT


மதுரை :மதுரை ரயில்வே ஸ்டேஷனில் 3 மாத பெண் குழந்தையை கடத்திய வழக்கில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையைச் சேர்ந்தவர் சையது அலி பாத்திமா 25. இவரது காதல் கணவர் அரிஷ்குமார். ஒன்றரை வயது மகன், 3 மாத பெண் குழந்தையுடன் திருநெல்வேலி மேலப்பாளையம் செல்வதற்காக நேற்றுமுன்தினம் மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.

இரவு 9:00 மணிக்கு ஸ்டேஷன் பிரதான வாசல் முன்புள்ள விநாயகர் கோயில் அருகில் துாங்கிக்கொண்டிருந்த போது பெண் குழந்தையை காணவில்லை. அதிர்ச்சியடைந்த சையது அலி பாத்திமா ரயில்வே போலீசிற்கு தகவல் தெரிவித்தார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், ஒருவர் குழந்தையுடன் ஆட்டோவில் ஏறிச்சென்றது தெரிந்தது.

உடனடியாக போலீசார் பின்தொடர்ந்து சென்றபோது காளவாசலில் அந்த நபர் குழந்தையுடன் நின்றிருந்தார். அவரை பிடித்து திலகர்திடல் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மதுரை மாவட்டம் மேலுார் வெள்ளலுாரைச் சேர்ந்த போஸ் 35, எனத்தெரிந்தது. அவரையும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் கலைவாணியையும் 33, போலீசார் கைது செய்தனர்.

கடத்தியது ஏன்



போலீசார் கூறியதாவது: போஸ், கலைவாணியும் சிறு வயதில் இருந்தே பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள். போஸ் பணம் கேட்டால் கலைவாணி கொடுத்து உதவுவார். சம்பவத்தன்று குழந்தையை கடத்தியதும் கலைவாணியுடன் போஸ் பேசியுள்ளார். அவர் துாண்டுதலின்பேரில்தான் குழந்தை கடத்தப்பட்டதா என போஸிடம் கேட்டபோது, 'என் மனைவியும், 3 மகள்களும் கோவையில் வசிக்கின்றனர். மகள்கள் குறித்த ஏக்கம் என்னை வாட்டியதால் குழந்தையை வளர்க்கலாம் என எடுத்துச்சென்றேன்' என தெரிவித்தார்.

ரயிலுக்கு குண்டு மிரட்டல்



அடுத்த சில நிமிடங்களிலேயே மேலுாரில் பழ வியாபாரம் செய்வதாகவும், பழங்கள் வாங்க மதுரை வந்தபோது குழந்தையை எடுத்துச்சென்றதாகவும் முன்னுக்கு பின் முரணமாக கூறினார்.

இவர் கடந்த ஜன.,9ல் பழநியில் இருந்து மதுரைக்கு ரயிலில் வந்தபோது தனக்கு 'சீட்' தர பயணிகள் முன்வராததால் ஆத்திரமுற்று ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக '100'க்கு தெரிவித்து கைதானவர். 10 நாட்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கோவையில் மனைவி, மகள்களை பார்க்க சென்றபோது ரயிலில் இருந்து விழுந்ததில் தலையில் அடிபட்டது.

இதன் தாக்கத்தால் அவ்வப்போது மனநலம் பாதித்தவர் போல் செயல்படுவார். மதுரை சிறையில் இதற்காக சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்.

கலைவாணியிடம் விசாரித்தபோது குழந்தை கடத்தலுக்கும், தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி வருகிறார். குழந்தையை கடத்தியதும் இவரிடம் போஸ் பேசி பணம் கேட்டுள்ளார். இதன் அடிப்படையிலேயே கலைவாணி கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை விற்க முயற்சி நடந்ததா என விசாரணை நடந்து வருகிறது. இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் இரு மோசடி வழக்குகள் உள்ளன.

இவ்வாறு கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement