ADVERTISEMENT
சிவகங்கையை சேர்ந்த பி.காம்., பட்டதாரியான மாயமகாலிங்கம் இரண்டாயிரம் வீதி நாடகங்களில் பெற்ற அனுபவமே சினிமா வாய்ப்புகளை பெற்றுத்தந்தது என தனது சினிமா வாய்ப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது:
எனது சொந்த கிராமம் சிவகங்கை மாவட்டம் அரணையூர். சினிமா இயக்குநராக இருந்த நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் எனது வீட்டிற்கு அருகே இருந்தவர். நாங்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் எங்களுக்குள் குழு ஏற்படுத்தி பாடல்களை எதுகை மோனையுடன் எழுதுவது, அதற்கான டியூன்களை அமைப்பது அதனை கண்மாய் கரையோரங்களில் பாடி அரங்கேற்றம் செய்வது என இயங்கினோம். கல்லுாரி படிப்புக்குப்பின் எங்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனது.
அறிவொளி இயக்கத்தின் மூலமாக 2006 ல் நமது கிராமம் என்ற தலைப்பில் கிராமசபைகளில் மக்கள் பேசுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கிராமம் தோறும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மழை நீர் சேகரிப்பு, முழுசுகாதாரம் போன்ற தலைப்புகளில் வீதி நாடகங்களை நடத்தினேன். அதில் தான் பாட்டுக்களை அமைப்பதும், அதற்கு மெட்டமைப்பதும், நடிப்பதும் சாத்தியமானது.
2016 ல் தி.மு.க., சார்பில் பிரசார வீதி நாடகங்கள் நடத்த எனது குழு தேர்வானது. இதனை பார்வையிட வந்த கே.ஏ.குணசேகரன் புதுச்சேரி பல்கலையில் நாட்டுப்புற கலைகள் துறையின் தலைவராக இருந்தவர். இவர் தான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
சிவப்பதிகாரம் படத்தில் 'சிவப்பு கல் சீமாட்டி' என்ற பாடல் நான் பாடிய முதல் பாடல். இந்த பாடலை எழுதி மெட்டமைத்ததும் நான் தான். அதனை இசையமைப்பாளர் வித்யாசாகர் அப்படியே ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் இசையமைப்பாளர் டி.இமான் நான் எழுதிய 'சித்திரை மாத வெயிலா' என்ற பாடலைபாட வைத்தார். கொம்பன் படத்தில் வரும் கருப்பு நிறத்தழகி உதட்டு சிவப்பழகி என்ற பாடல் நான் எழுதி மெட்டமைத்த பாடல். பாடிய போது எனது உடல் நலக்குறைவு காரணமாக அதில் திருப்திபடாததால் வேல்முருகன் பாடினார். அந்த பாடல் சிறப்பான பெயரை பெற்று தந்தது.
சூரரை போற்று படத்தில் நான் எழுதிய பாட்டினை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடினார். 150 பாடல்கள் எழுதி மெட்டமைத்து ரெடியாக வைத்துள்ளேன். ஆரம்ப காலத்தில் இருந்தே பாடல்கள் எழுதி மெட்டமைத்து, வீதி நாடகங்களில் பாடி நடித்து பழகியது இப்போது உதவுகிறது. எனது பாடல்களில் நகர்புறத்திற்கு ஏற்றார் போல் வார்த்தைகள் இல்லை என்பார்கள். பாடல்கள் என்றவுடன் நமக்கு கிராமப்புறங்கள் தான் நினைவுக்கு வருகிறது.
பாடல்களில் நான் கிராமப்புறங்களில் பயன்படுத்தும் வார்த்தைகள் வந்து விழுகின்றன. நகர்புற வாழ்க்கைக்கு நான் தயாராகவில்லை என நினைக்கிறேன்.
இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!