உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.44,480

தமிழகத்தில் பிப்., 2ல், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம், 5,505 ரூபாய்க்கும்; சவரன், 44 ஆயிரத்து, 40 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதுவே, தங்கம் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது. பின், தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாகவும் இருந்தது.
அமெரிக்காவில் உள்ள நான்கு வங்கிகள் சமீபத்தில் திவாலானதால், உலக முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட மற்ற முதலீடுகளை தவிர்த்து, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர்.
இதனால், ஒரு வாரமாக தங்கம் விலை மிகவும் அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம், 5,450 ரூபாய்க்கும்; சவரன், 43 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகின. 1 கிராம் வெள்ளி, 73.10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு, 110 ரூபாய் உயர்ந்து, 5,560 ரூபாய்க்கும்; சவரனுக்கு, 880 ரூபாய் அதிகரித்து, இதுவரை இல்லாத அளவாக, 44 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனையாகின. வெள்ளி கிராமுக்கு, 1.30 ரூபாய் உயர்ந்து, 74.40 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு, 290 ரூபாயும்; சவரனுக்கு, 2,320 ரூபாயும் அதிகரித்துள்ளது. தங்கம் விலை உயர்ந்திருப்பது, திருமண வீட்டாரிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில், தங்கத்தில் மீது முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே, 30 சதவீதம் லாபம் கிடைத்தது; மற்ற முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட்டது. பல நாடுகளில் பொருளாதாரம் பாதிப்பால், தற்போது முந்தைய காலங்களில் இருந்ததை விட, அதிக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள வங்கிகள் திவாலானதால், அந்நாட்டு மக்கள் வைப்பு நிதியில் முதலீடு செய்வதை தவிர்த்து, தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாலும், உள்நாட்டில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி விலை இன்னும் உயரும்.இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (6)
ஒன்றிய அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்று.
இந்தியாவில் எளிதாக பணம் சம்பாதிக்க கொலை ,கொள்ளை ,திருட்டு ,நகை பறிப்பு சம்பவங்கள் பல மடங்கு அதிகரிக்கும் ...
Jewel Thefts will increase .....
இந்தியாவில் கறுப்புப்பணம் மற்றும் லஞ்சம் ஊழலில் கொள்ளை அடித்த பணம் பாதுகாப்பாக பல மக்களால் தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. கணக்கில் காட்டாத பணம் தங்க விற்பனையில் புகுந்து விளையாடுகிறது. சரியான தங்க நகை விற்பனையில் சரியான உண்மையான கணக்கு வழக்கு இருக்குமா?? சந்தேகமே