ADVERTISEMENT
மூணாறு, : தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை இரண்டு ஆண் காட்டு யானைகள் கலங்கடித்து வருகின்றன.
இடுக்கி மாவட்டத்தில் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஆகிய ஊராட்சிகளில் சுற்றித் திரியும் அரிசி கொம்பன் எனும் ஆண் காட்டு யானை பலரது உயிரை பறித்ததுடன், ஏராளமாக பொருள் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த யானை கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேரளா, தமிழக எல்லையான போடிமெட்டு முதல் ஆனயிறங்கல் வரை ரோட்டில் வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வழியில் பூப்பாறை அருகே தலக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு அத்தியாவசிய பொருட்களுடன் மூணாறை நோக்கிச் சென்ற லாரியை வழி மறித்த அரிசி கொம்பன் அரிசி, சர்க்கரை ஆகியவற்றை தின்றது. அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
படையப்பா
அதேபோல் மூணாறு, உடுமலைபேட்டை மாநில நெடுஞ்சாலையில் பெரியவாரை எஸ்டேட் முதல் வாகுவாரை எஸ்டேட் வரை ரோட்டில் வலம் வரும் படையப்பா எனும் வயது முதிர்ந்த ஆண் காட்டு யானை அரிசி கொம்பனுக்கு நேர் எதிரானது. அந்த யானை தீவனத்திற்காக வாகனங்களை வழி மறிப்பது வழக்கம். சாதுவான யானை சமீபகாலமாக வாகனங்களை, கடைகளை சேதப்படுத்தி வருகிறது. அதன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தாக்குதல் சுபாவம் தலை தூக்கியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
மூணாறு அருகே நயமக்காடு எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு படையப்பா வாகனங்களை வழிமறித்து தீவனத்தை துதிக்கையால் துழாவியது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை கலக்கும் காட்டு யானைகளால் அச்சம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!