கடமலைக்குண்டு, : தேனி, மதுரை - மாவட்டங்களை இணைக்கும் மயிலாடும்பாறை -- மல்லபுரம் ரோட்டை சீரமைத்து பஸ் போக்குவரத்து ஏற்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடும்பாறை ஒன்றியம், தாழையூத்தில் இருந்து மதுரை மாவட்டம் மல்லபுரத்தை இணைக்க மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக ரோடு வசதி உள்ளது. மயிலாடும்பாறையில் இருந்து பேரையூர், எழுமலை, ராஜபாளையம் பகுதிகளுக்கு ஆண்டிபட்டி, உசிலம்பட்டி வழியாக செல்வதை விட மலைப்பகுதியில் உள்ள ரோட்டை பயன்படுத்தினால் பயண தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் பலரும் இந்த ரோட்டை பயன்படுத்த தொடங்கினார்.
இந்த ரோட்டின் முக்கியத்துவம் கருதி 15 ஆண்டுக்கு முன் தாழையூத்து - மல்லபுரம் ரோட்டில் மினி பஸ் வசதியும் துவக்கப்பட்டது. மலைப்பகுதியில் ரோடு அமைக்கப்பட்ட பின் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பல இடங்களில் ரோடு சேதம் அடைந்து மண் சரிவால் ரோட்டின் அகலம் சுருங்கியது. மழையால் ரோடு சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறியது.
தற்போது ரோடு முற்றிலும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. பல இடங்களில் தடுப்பு சுவர் இல்லாத ஆபத்தான பாதையில் இருசக்கர வாகனங்கள் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் சென்று வருகின்றன. சிறு கவனக்குறைவு ஏற்பட்டாலும் பெரிய அளவில் விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் பலரும் இந்த ரோட்டை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.
ரோட்டை சீரமைத்து தேனி மதுரை - மாவட்டங்களை இணைக்கும் இந்த ரோடு வழியாக பஸ் போக்குவரத்து துவங்கினால் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட மலைப்பகுதி கிராமங்களில் விளையும் விளை பொருட்களை வெளியூர்களில் எளிதில் சந்தைப்படுத்த முடியும்.
இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
50 கி.மீ.,துாரம் குறையும்
பூப்பாண்டி மயிலாடும்பாறை: மயிலாடும்பாறையில் இருந்து தாழையூத்து வழியாக மதுரை மாவட்டம் எழுமலை, கல்லுப்பட்டி கிராமங்களுக்கு உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக சென்றால் 70 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். மல்லப்புரம் ரோட்டை பயன்படுத்தினால் 20 கி.மீ., தூரத்தில் சென்றுவிடலாம். பயண நேரம், எரிபொருள் தேவையை கருத்தில் கொண்டு சிறு வாகனங்கள் அபாயகரமான இந்த ரோட்டின் வழியாக தற்போது சென்று வருகின்றனர். இரு மாவட்ட நிர்வாகமும் இணைந்து இந்த ரோட்டை சீரமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
போக்குவரத்து துவங்கினால் வாழ்வாதாரம் மேம்படும்
சூர்யபிரகாஷ், மயிலாடும்பாறை: மயிலாடும்பாறையில் இருந்து மூலக்கடை, சோலைத்தேவன்பட்டி, முத்தாலம்பாறை, தாழையுத்து வரை ரோடு தரமாக உள்ளது. தாழையூத்திலிருந்து மல்லபுரம் வரை 12 கி.மீ., தூரம் ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மல்லப்புரத்தில் இருந்து மதுரை, எழுமலை, கல்லுப்பட்டி, பேரையூர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு எளிதில் செல்ல முடியும்.
இந்த ரோடு வழியாக பஸ் போக்குவரத்து தொடங்கினால் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலை மட்டுமே நம்பியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். தற்போது இப்பகுதி மக்கள் தேனியை மட்டுமே வியாபாரத்திற்கு பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர். ரோட்டின் தரம், இரு மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் குறித்த சர்வே பணிகள் மேற்கொண்டு இணைப்பு ரோட்டை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
தீர்வு
மயிலாடும்பாறை -மல்லப்புரம் ரோடு சீரமைத்து போக்குவரத்து அனுமதித்தால் தேனி மாவட்ட மக்கள் எளிதாக மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்று வரவும், காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை வெளிமாவட்டங்களுக்கு குறைந்த செலவில் கொண்டு செல்வதால் பல ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே, இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!