ADVERTISEMENT
பேரையூர், : பேரையூர் அருகே பாண்டியர் கால வட்டெழுத்து கற்செக்கு கண்டறியப்பட்டது.
வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல்பாரதி, பேராசிரியர் அழகர்சாமி, காந்திராஜன், அருண் ஆகியோர் கள ஆய்வில் பேரையூர் தாலுகா பெரியகட்டளை கிராமம் மேட்டுக்காடு பகுதியில் உள்ள பெருமாள் கோயில் அருகில் 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து செக்கு கல்வெட்டு கண்டறியப்பட்டது.
அவர்கள் கூறியதாவது: உரலின் வட்டமான மேல் விளிம்பில் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. தொல்லியல் அறிஞர்கள் சாந்தலிங்கம், ராஜகோபால் ஆகியோரின் துணையோடு படிக்கப்பட்டது. ஸ்ரீ குடிகம் நல்லுாரைச் சேர்ந்தவர்களால் கற்செக்கு அமைக்கப்பட்டுள்ளதும், அதில் பட்ட சாலியன் என்ற பெயர் இடம் பெற்றுள்ளதையும் அறிய முடிகிறது. அப்பெயர் கற்தச்சரின் பெயராகவோ ஊர் அவையைச் சார்ந்தவரின் பெயராகவோ இருக்கலாம். இந்த வட்டெழுத்து கல்வெட்டு மூலம் 9,10ம் நுாற்றாண்டுகளில் இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட இப்பகுதி குடிகம் நல்லுார் என அழைக்கப்பட்டதாக கருதலாம்.
எனவே பெரிய கட்டளை என்ற ஊர் பாண்டியர் காலத்தில் ஸ்ரீ குடிகம் நல்லுார் என்று அழைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கல் செக்குகள் உரல் வடிவில் இருக்கும். ஆனால் இங்கு தொட்டி போன்ற வடிவில் கிடைத்திருப்பதும், அதில் எண்ணெய் வெளியேற துவாரம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது, என்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!