Load Image
Advertisement

புதுச்சேரியில் சிசி டிவி கேமரா கண்காணிப்பு ஜீரோ; குற்றவாளிகளுக்கு ஜாலியோ ஜாலி

CC TV Camera Surveillance Zero in Puducherry    புதுச்சேரியில் சிசி டிவி கேமரா கண்காணிப்பு ஜீரோ;  குற்றவாளிகளுக்கு ஜாலியோ ஜாலி
ADVERTISEMENT


புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில எல்லை முதல் நகர வீதிகள் வரை சிசிடிவி கேமரா கண்காணிப்பு இல்லாததால் மாநிலத்தின் பாதுகாப்பு கேள்வி குறியாகி உள்ளது.

புதுச்சேரி ஒரு சுற்றுலா தளமாகவும், சித்தர்கள் வாழ்ந்த ஆன்மீக பூமியாக இருந்தாலும், வேலைவாய்ப்புகள் இல்லாததால் பல இளைஞர்கள் கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, போலி மதுபானம், நிலம் ஆக்கிரமிப்பு, செயின் பறிப்பு, மாமூல் வசூல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

இது தவிர கார், பைக் திருட்டுகள் தினசரி நிகழ்வாக உள்ளது. குற்ற செயலில் ஈடுபடும் நபரை போலீசார் தேடி கண்டுபிடித்து கைது செய்தாலும், சரியான ஆதாரம், சாட்சிகள் இன்றி எளிதில் தப்பித்து விடுதலையாகி விடுகின்றனர்.

இதனால் குற்றச்செயல் புரியும் ரவுடிகளை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கவும், குற்றம் செய்துவிட்டு தப்பித்து செல்வோரை கண்டுபிடிக்க போலீசின் மூன்றாம் கண் என கூறும் சிசிடிவி பெரிதும் உதவுகிறது.

சின்னஞ்சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் நிதி உதவியுடன் ரூ. 2 கோடி மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி துவங்கியது. ஆனால் அத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. ஓரிரு இடங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை கோரிமேடு போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கடமைக்கு கண்காணித்து வருகின்றனர்.

போலீசாரிடம் போதிய அளவில் சிசிடிவி கேமரா பொருத்த முடியாததால், வணிக நிறுவனங்கள் தங்கள் சொந்த செலவில் சிசிடிவி கேமரா பொருத்த அறிவுறுத்தினர்.வணிக நிறுவனங்கள் சிசிடிவி கேமிரா பொருத்தினாலும், அதில் காட்சிகளை சேமித்து வைக்கும் டி.வி.ஆர்.பாக்ஸ் இருப்பது இல்லை.

தமிழகத்தின் சென்னை, கோயம்புத்துார் உள்ளிட்ட பெரு நகரங்களில் நுண்ணறிவு சிசிடிவி கேமராக்களை போலீசார் பொருத்தி உள்ளனர்.

செயின்பறிப்பு, கார் பைக் திருட்டு மற்றும் பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்ட நபர் தப்பிச் செல்லும் வாகனத்தின் எண்ணை கொண்டு, கடந்து செல்லும் ஒவ்வொரு தெருவிலும் உள்ள சிசிடிவி கேமரா மூலம் படம் பிடித்து தருகிறது.

சில இடங்களில் பேஸ் டிடக் ஷன் (முகம் அடையாளம் காணும்) கேமராவும் பொருத்தி உள்ளனர். இதன் மூலம் குற்றச் செயல் புரிந்த நபர், கூட்ட நெரிசலில் நடமாடினால் கூட கேமரா எளிதாக கண்டறிந்து போலீசாருக்கு தகவல் அனுப்புகிறது.

கேரளாவில் அதற்கும் ஒரு படி மேலே சென்று சாலையில் குறிப்பிட்டுள்ள வேகத்தை தாண்டி செல்லும் வாகனங்களை சிசிடிவி கேமரா மூலம் படம் பிடித்து, வாகனத்தின் எண் மூலம் உரிமையாளரின் வீட்டிற்கே வழக்குபதிவு மற்றும் அபராத தொகைக்கான சலான் அனுப்பப்படுகிறது.

இதுபோல் ஏராளமான நவீன வசதிகள் வந்துவிட்டது.

ஆனால், பல வெளிமாநிலத்தினர் வந்து செல்லும் புதுச்சேரியில் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது.

சுற்றுலா பயணிகள் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் புதுச்சேரிக்கு வந்து செல்லும் நிலை தான் உள்ளது.

மாநில எல்லைகளில் ஒரு சோதனைச் சாவடி கூட கிடையாது.

புதுச்சேரியில் கார், பைக், திருட்டில் ஈடுபடும் வெளிமாநிலத்தவர் எளிதாக தப்பிச் சென்றுவிடுகின்றனர்.

இதனால், எந்த வழியாக தப்பிச் சென்றனர் என்பதை கண்டுபிடிப்பதில், போலீசாருக்கு பெரும் சவால் உள்ளது.

மாநில எல்லையில் நுழையும் வாகனங்களை அடையாளம் காண அதிநவீன கேமராவும், நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலைகளில் 1 கி.மீ.,க்கு ஒரு இடத்திலோ அல்லது ஒவ்வொரு பஸ் நிறுத்தங்களிலும், சிசிடிவி கேமரா அமைத்து கட்டுப்பாட்டு அறை உருவாக்க வேண்டும்.

நகர வீதிகளில் முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள் என அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு இணைக்கும்போது குற்ற செயல்புரிந்தவர் தப்பி செல்லும் வழிகளை எளிதாக கண்டறிந்துவிட முடியும். மேலும், ரவுடிகள் குற்ற செயல் புரிய அஞ்சும் நிலை ஏற்படும்.

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 170 கோடியில் நகரம் முழுதும் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போல் அமைக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் முழுமையாக அமல்படுத்துவதுடன், கிராமப்புகுதிகளையும் சிசிடிவி கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement