பைக் மீது கார் மோதல் அக்கா, தம்பி பரிதாப பலி
பள்ளிக்கரணை, தாம்பரம் அடுத்த பம்மல், எல்.ஐ.சி., காலனியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகள் கலைச்செல்வி, 26; மகன் சந்தோஷ்குமார், 21. இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்தனர்.
சந்தோஷ்புரத்தில், கணவருடன் வசித்த கலைச்செல்வியை பார்க்க, சந்தோஷ்குமார் நேற்று காலை சென்றார்.
அங்கிருந்து, 'யமாஹா எப்.இசட்.,' பைக்கில், கலைச்செல்வியுடன் சைதாப்பேட்டையில் வசிக்கும் ஆயதப்படை உதவி ஆய்வாளரான பெரியப்பா குமாரவேலுவை பார்க்க சந்தோஷ்குமார் சென்று கொண்டிருந்தார்.
மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில், பின்னால் வந்த 'மகேந்திரா மராஸோ' கார், பைக் மீது மோதியது.
பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதியதில், பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி, 30 அடி உயர பாலத்தில் இருந்து விழுந்தார்.
அங்கிருந்தோர், கலைச்செல்வியை மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.
பாலத்தில் படுகாயத்துடன் மயங்கி கிடந்த சந்தோஷ்குமார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், இரு சடலங்களையும் மீட்டனர்.
விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரான மறைமலை நகர், திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த ஆலம், 26, என்பவரை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!