போதை பயணிக்கு விமானத்தில் தடா புதுடில்லி பெண்கள் கமிஷன் பரிந்துரை
புதுடில்லி, அளவுக்கு அதிகமான போதையில் உள்ள நபரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது, விமானத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது உட்பட, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களை புதுடில்லி பெண்கள் கமிஷன் அளித்துள்ளது.
விமான பயணத்தின் போது, அளவுக்கு அதிகமான மது போதையில் உள்ள பயணியர், சக பயணியரிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு நவ., 26ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து புதுடில்லி வந்த விமானத்தில், 70 வயது பெண் பயணி மீது, மது போதையில் இருந்த நபர் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
'நோட்டீஸ்'
இதேபோல, கடந்த ஆண்டு டிச., 6ல், பாரீஸ் - புதுடில்லி விமானத்தில், பெண் பயணி மீது போதை நபர் சிறுநீர் கழித்த விவகாரம் குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது.
இந்த இரு விவகாரங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் இதுபோன்ற சம்பவங்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து டி.ஜி.சி.ஏ., எனப்படும், விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் ஏற்கனவே வகுத்துள்ள வழிகாட்டுதல்களை தாக்கல் செய்யும்படி டி.ஜி.சி.ஏ.,வுக்கு புதுடில்லி பெண்கள் கமிஷன் 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை தொடர்ந்து, அனைத்து விமான நிறுவனங்களுக்கும் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை புதுடில்லி பெண்கள் கமிஷனிடம், டி.ஜி.சி.ஏ., சமர்ப்பித்தது.
இதை ஆய்வு செய்த பெண்கள் கமிஷன் அளித்துள்ள பரிந்துரை:
பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விமான நிறுவனங்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் திருப்திகரமாக இல்லை.
பாலியல் சீண்டல்
விமான நிலையங்கள், விமானத்துக்கு உள்ளே பெண் பயணியர் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்களை கையாள்வது, புகார் அளிப்பது, தீர்வு காண்பது குறித்து முறையான வழிகாட்டுதல்கள் அளிக்கப்படவில்லை.
மது போதையில் உள்ள பயணியரை கையாள்வது குறித்தும் முறையான வழிகாட்டுதல்கள் இல்லை.
அளவுக்கு அதிகமான போதையில் உள்ள பயணியரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது. விமானத்தில் மதுபானம் அளவுடன் அளிக்கப்பட வேண்டும்.
விமானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் விவகாரங்களை அதிக அக்கறையுடன் கையாள விமான பணியாளர்களை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!