ADVERTISEMENT
சென்னை, புற்றுநோய்க்கான,'தெரானோஸ்டிக்ஸ்' சிகிச்சை குறித்த இரண்டு நாள் கருத்தரங்கம் 'மியாட்' சர்வதேச மருத்துவமனையில் நேற்று துவங்கியது.
மணப்பாக்கத்தில் உள்ள மியாட் சர்வதேச மருத்துவமனையுடன், 'இந்திய சொசைட்டி ஆப் நியூக்கிளியர் மெடிசன்' இணைந்து இக்கருத்தரங்கை நடத்துகின்றன.
கருத்தரங்கை துவக்கி வைத்து, மியாட் சர்வதேச மருத்துவமனையின் மேலாண் இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது:
புற்றுநோய் ஏற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும்போது, முடி உதிர்தல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு தீர்வாக, நியூக்கிளியர் மருந்து வகையைச் சேர்ந்த ஐசோ டோப் கொடுத்தால், பக்க விளைவுகள் எதுவும் இல்லை. இந்த மருந்தை, வாய்வழியாக உட்கொள்ளலாம்; ஊசி மூலமாகவும் போட்டுக் கொள்ளலாம். முற்றிய புற்று நோய்க்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளது.
ஒவ்வொரு வகை புற்று நோய்க்கும், தனி 'ஐசோடோப்' உள்ளது. அது மிகவும் துல்லியமானது. எங்கு புற்றுநோய் உள்ளதோ அதை மட்டும் கண்டறிந்து குணப்படுத்த உதவுகிறது.
'தெரானோஸ்டிக்ஸ்' என்பது, புற்றுநோய் வகையை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது. இந்த கருத்தரங்கில் தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, இந்திய கூட்டுறவு நியூக்கிளியர் மெடிசனை சேர்ந்த டாக்டர்கள் திருமூர்த்தி, குமரேசன் ஆகியோரை பிரித்வி மோகன்தாஸ் கவுரவித்தார்.
துவக்க விழா மற்றும் கருத்தரங்கில் மியாட் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் சுமதி, சதீஷ்நாத், இந்திய கூட்டுறவு நியூக்கிளியர் மெடிசன் தென்மண்டல பிரிவை சேர்ந்த டாக்டர் அருண் சசிகுமார் உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்ட அணு மருத்துவர்கள், கதிரியக்க வல்லுனர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!