சென்னை: சென்னையில் அரசு வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கவுள்ளதாக வெளியான தகவல் குறித்து விளக்கமளித்துள்ள போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர், 'உலக வங்கியின் கருத்துருவை பின்பற்றி இது தொடர்பாக உள்ள சாதக, பாதகங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கவே டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னையில் ஒப்பந்த அடிப்படையில், தனியார் பஸ்களின் சேவைக்கு அனுமதி வழங்க, மாநகர போக்குவரத்து கழகமான எம்.டி.சி முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு அதிமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக போக்குவரத்துத்தறை அமைச்சர் சிவசங்கர் அளித்துள்ள விளக்கம்: 2021ம் ஆண்டு பிப்ரவரியில் அரசாணை வெளியிட்டவர்களே அதிமுக., ஆட்சியாளர் தான். அப்படியிருக்கையில், இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள அதிமுக.,வின் செயல் கேலிக்கூத்தாக உள்ளது.
சென்னையில் ஜி.சி.சி முறையில் 500 பஸ்களை இயக்கலாம் என உலக வங்கி வழங்கியுள்ள கருத்துருவை பின்பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கில் தான் இப்போது ஆலோசனைகளை அளிப்பதற்கான டெண்டர் மட்டுமே விடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அரசு வழித்தடத்தில் தனியார் பஸ்களை இயக்குவதில் உள்ள சாதக, பாதகங்களை ஆலோசகர்கள் அறிக்கை அளிப்பர். அதன்பிறகே இதுகுறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் மயமா?
சென்னை, கன்னியாகுமரி போன்ற சில மாவட்டங்களில் முழு அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. சில மாவட்டங்களில் தனியார் பஸ்களும் இயக்கப்படுகிறது. இப்போது உலக வங்கி அளித்த வழிகாட்டுதல் என்பது, அரசு வழிதடங்களில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கலாம் என்பதுதான். எனவே, இதனால் தனியார் மயமாகப்போகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசு பேருந்தை அவர்கள் இயக்கவில்லை, தனியாருடைய பேருந்தையே இயக்க உள்ளனர்.
தேவையற்ற வதந்தி
ஜி.சி.சி நடைமுறை என்பது ஆய்வு செய்யப்பட்டு கொடுக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுதான். அதன்பிறகே அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிற வழித்தடத்தில் இயங்கும் பஸ்கள் நிறுத்தப்படாது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, கூடுதலான தனியார் பஸ்களை இயக்குவது என்பதே உலக வங்கியின் கருத்து. இதில் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பது தேவையற்ற வதந்தி.
ஒப்பந்த அடிப்படையில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாலும், மகளிருக்கான இலவச பஸ் சேவை எதுவும் பாதிக்கப்படாது; மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் பாதிக்கப்படாது. தனியாருடனான ஒப்பந்த பஸ் இயக்கம், டில்லியிலும், கேரளாவிலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.
வாசகர் கருத்து (32)
கட்சிக்காரங்களுக்கு பிழைக்க வழிசெய்து கொடுத்தால்தானே மேலிடத்து சிப்பந்திகள் பதவிசுகம் நிலைக்கும்..
சராசரியாக ஒரு அரசுப் பேருந்துக்கு 11 ஊழியர்கள் உள்ளனர். ஆனால் தனியார் பேருந்துக்கு நான்கே🤔 ஊழியர்கள். பின்னர் லாபம் பார்க்க வாய்ப்பேது?
ஆலோசனை வழங்க ஒப்பந்தம். அப்போ அரசு ias அதிகாரிகள் எதுக்கு. தனியார் மயம் இல்லை எனில் ஆலோசனை எதுக்கு.
இப்போ ஓடும் பல தனியார் பேருந்துகள்,ஆம்னி பேருந்துகள் அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் பினாமி தானே...
தனியார் மயம் என்றாலே ஏதோ கெட்டசெயல் போன்று அமைச்சர் முட்டாள்தனமாக பேசுகிறார். அரசு பிசினஸ் பண்ணக்கூடாது. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் மட்டுமே அரசின் வேலை. தமிழகமெங்கும் உள்ள அரசு போக்குவரத்தை பற்பல தனியார் நிறுவனகளுக்கு கொடுத்தால், இதனால் ஏற்படும் நஷ்டத்தை குறைக்கலாம்.