ADVERTISEMENT
திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்கள், சமீபத்தில் சட்டசபை தேர்தலை சந்தித்தன. இதில், திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள, ௬௦ இடங்களில், பா.ஜ., ௩௨ இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன் கூட்டணி கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது.
திரிபுரா மாநிலம், ௨௫ ஆண்டுகளுக்கும் மேலாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக இருந்தது. இந்த மாநிலத்தில், ௨௦௧௮ல் நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சியும், பிரமிக்கத்தக்க வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைந்தன. முதல்வராக மாணிக் சகா இருந்தார்.
இந்த சட்டசபை தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில், காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அது, பா.ஜ.,வுக்கு பெரும் சவாலாக அமைந்தது. அத்துடன், திப்ரா மோதா என்ற கட்சியும் தனித்து களமிறங்கியது. அந்தக் கட்சி, ௧௩ இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்., - மார்க்சிஸ்ட் கூட்டணி, ௧௪ இடங்களை மட்டுமே பிடித்ததால், ஆட்சி அமைக்க முடியாமல் போய் விட்டது.
அதேநேரத்தில், திப்ரா மோதா கட்சி தனித்து களமிறங்கியது, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்து, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது என்பதை மறுப்பதற்கு இல்லை.
நாகாலாந்து மாநிலத்தில், முதல்வர் நைபியுரியோ தலைமையிலான என்.டி.பி.பி., ஆட்சி நடந்து வந்தது. இங்கு, ௬௦ இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நடந்த தேர்தலில், என்.டி.பி.பி., கட்சியும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்து, ௪௦ மற்றும், ௨௦ இடங்களில் போட்டியிட்டன.
இங்கும் என்.டி.பி.பி., மற்றும் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, என்.டி.பி.பி., ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதன் வாயிலாக, ௭௨ வயது நைபியுரியோ, ஐந்தாவது முறையாக முதல்வர் பதவியேற்கிறார்.
இப்படி, இரு மாநிலங்களில், பா.ஜ., அமோக வெற்றி பெற்றாலும், மேகாலயா மாநிலத்தில், பா.ஜ., கட்சியால் சோபிக்க முடியவில்லை. ௬௦ தொகுதிகளை கொண்ட, இம்மாநிலத்தில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று உள்ளது. அதற்கான முக்கிய காரணம், ஆளுங் கட்சியான தேசிய மக்கள் கட்சியும், பா.ஜ.,வும் வைத்திருந்த கூட்டணி, தேர்தலுக்கு முன் முறிந்து விட்டது.
அத்துடன், தேசிய மக்கள் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான கான்ராடு சங்மா வுக்கு எதிராக, பா.ஜ., செய்த பிரசாரமும் வீணாகி விட்டது. மிகவும் ஊழல் நிறைந்த அரசை, சங்மா நடத்தி வருவதாக, பா.ஜ., புகார்களை அள்ளி விட்டாலும், அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை.
அதே நேரத்தில், இம்மாநிலத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.,வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, பா.ஜ.,வுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகள், தேசிய அளவில் பா.ஜ.,வுக்கான சரியான போட்டியாக கருதப்படும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.
கடந்த ஆண்டு, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ், தற்போது, மீண்டும் தோல்வி முகம் கண்டு உள்ளது.
கடந்த, ௨௦௧௮ல் மேகாலயாவில் நடந்த சட்ட சபை தேர்தலில், தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரசை முந்தி, ஐக்கிய ஜனநாயக கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இருப்பினும், ஐந்து மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல்களில், காங்கிரஸ் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சி ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது.
மேகாலயா மாநிலத்தில், பா.ஜ., இரு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், பெரும்பான்மைக்கு குறைவான இடங்களை, என்.பி.பி., கட்சி பெற்றிருப்பதால், அதனுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மொத்தத்தில், வடமாநிலங்கள் பலவற்றில் பா.ஜ., ஆதிக்கம் செலுத்தி வருவது போல, வடகிழக்கு மாநிலங்களிலும் பா.ஜ., பலமான கட்சியாக தொடர்வது, சமீபத்திய தேர்தல் வெற்றி வாயிலாக நிரூபணமாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!