Load Image
Advertisement

வட மாநில தொழிலாளர் விவகாரம்: வதந்தி பரப்புவோருக்கு அரசு கடும் எச்சரிக்கை!

Rumor mongers are anti-India: Stalins condemnation   வட மாநில தொழிலாளர் விவகாரம்: வதந்தி பரப்புவோருக்கு அரசு கடும் எச்சரிக்கை!
ADVERTISEMENT
சென்னை :'தமிழகத்தில் வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, வதந்தியை பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வட மாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பதை, நம்மைவிட வட மாநிலங்களில் இருந்து, தமிழகம் வந்து வாழும் மக்கள், அழுத்தமாக சொல்வர். தமிழகம் மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே, எப்போதும் இருந்துள்ளது; இனியும் அப்படித்தான் இருக்கும்.
சமீப காலமாக வேலை வாய்ப்புகளைத் தேடி, அனைத்து மாநிலத் தொழிலாளர்களும், தமிழகம் வருவது அதிகரித்து வருகிறது. சேவைத் துறை, கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என, பல்வேறு துறைகளில், வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், தமிழகம் திகழ்வது தான் காரணம்.
நம்பிக்கையோடு வரும் தொழிலாளர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகளை, தமிழக அரசு செய்து தருகிறது. தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பையும், உறுதி செய்து வருகிறது.இந்த அமைதி சூழ்நிலையை காணப் பொறுக்காத சிலர், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த, தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கின்றனர்; அவர்கள் எண்ணம் ஈடேறாது.

அச்சம் வேண்டாம்



வேறு மாநிலங்களில் நடந்த, சில சம்பவங்களின் வீடியோ மற்றும் படங்களை, தமிழகத்தில் நடந்ததாக, வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும், பீதியையும் பரப்புவோர் மீது, சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புவோர், இந்திய நாட்டுக்கு எதிரானவர்கள்; நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்னையை வைத்து, இப்படி கீழ்த்தரமாக, சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்துக்கு உரியது.
வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். யாராவது உங்களை அச்சுறுத்தினால், காவல் துறையின் உதவி எண்களில் தகவல் அளிக்கவும். அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக, தமிழக அரசும், தமிழக மக்களும் இருப்பர். தவறான செய்திகள் அடிப்படையில், நீங்கள் எவரும், எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம்.
பீஹாரைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர், வேறு ஏதோ மாநிலத்தில் நடந்த, தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான மோதலை, தமிழகத்தில் நடந்ததைப் போல பரப்பியதே, இதன் துவக்கமாக அமைந்துள்ளது.எனவே, ஊடகங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர், தங்களுக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை உணர்ந்து, செய்திகளை உறுதிப்படுத்தாமல் வெளியிட வேண்டாம். வளமான, அமைதியான தமிழகத்தை உருவாக்க, அனைவரும் பாடுபடுவோம்.
இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Latest Tamil News

7 ஆண்டு சிறை



''தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது, தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்தி பரப்பிய நான்கு பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வதந்தி பரப்பிய நபர்கள் குறித்த பட்டியல் சேகரிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்,'' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்தார்.
டி.ஜி.பி., சைலேந்திரபாபு அளித்த பேட்டி:வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, உண்மைக்கு புறம்பான செய்தி பகிரப்பட்டு வருகிறது. அப்படி பொய் செய்தி பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில், 'தைனிக் பாஸ்கர்' பத்திரிகையின் ஆசிரியர் மீதும், திருப்பூர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் 'தன்வீர் போஸ்ட்' என்ற பத்திரிகை ஆசிரியர் முகமது தன்வீர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, துாத்துக்குடி மாவட்டம், மத்திய காவல் நிலையத்தில், பிரசாந்த் உமாராவ் மீதும், கிருஷ்ணகிரி மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், சுபம் சுக்லா என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் தலைமறைவாகி இருப்பதால், அவர்களை கைது செய்ய, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பின், அவர்கள் எந்த நோக்கத்திற்காக வதந்தி பரப்பினர் என்பது, விசாரணையில் தெரிய வரும்.
தமிழகத்தில் வாழும் புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள், எவ்வித அச்சமும் இன்றி, முழு பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகின்றனர். அமைதியை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பொய் செய்திகளை பரப்புவோர் பற்றிய விபரங்கள், காவல் துறையால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று வதந்திகளை பரப்பு வோருக்கு, ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வேலை செய்ய தயங்கும் தமிழர்கள்



'நம் மக்கள் செய்ய தயங்கும் வேலைகளை, வட மாநிலத்தவர்கள் விரும்பி செய்கின்றனர்; அவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை ஹோட்டல்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார்.அவரது பேட்டி:தமிழகத்தில் ஹோட்டல்களில் உணவு வகைகள் சமைப்பது, பரிமாறுவது, பாத்திரங்களை கழுவுவது, கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற பணிகளில், வட மாநிலங்களை சேர்ந்த, ஐந்து லட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர். குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த நம் மக்கள் செய்ய தயங்கும் பல வேலைகளை, வட மாநிலத்தவர்கள் விரும்பி செய்கின்றனர்.


அவர்கள், எந்த வேலையையும் கவுரவ குறைச்சலாக கருதுவதில்லை. சிலர் சமூக வலைதளங்களில் தமிழகத்தில், வட மாநிலத்தவர்களை தாக்குவது போன்ற பழைய வீடியோக்களை பதிவிட்டு, வதந்திகளை பரப்புகின்றனர். இதை உண்மை என்று நம்பி, வட மாநில தொழிலாளர்களின் பெற்றோர், அவர்களை தமிழகத்தில் இருந்து, சொந்த ஊர்களுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.அவர்களும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். தமிழக அரசு, வட மாநிலத்தவர்களின் பாதுகாப்பு தொடர்பாக தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடும் செய்தி குறிப்புகள், அம்மாநிலத்தவரை சென்றடையவில்லை.
தமிழகத்தில் வட மாநிலங்களை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் உள்ளனர். அவர்கள், வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் வதந்தி என்பது குறித்து, அவர்களின் தாய் மொழியில் பேசும் வீடியோக்களை, அம்மாநிலங்களில் வெளியாகும், 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பு செய்ய வேண்டும். அப்போதுதான், வட மாநில தொழிலாளர்களின் பெற்றோருக்கு உண்மை நிலவரம் தெரியும். அவர்கள், இல்லையெனில், அனைத்து தொழில்களும் முடங்கும் அபாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


நிதிஷுடன் ஸ்டாலின் பேச்சு!



பீஹார் முதல்வர் நிதிஷ்குமாருடன், நேற்று தொலைபேசியில், முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, 'அனைத்து தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள். எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது' என, ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

'அரசின் பொறுப்பு'



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: தமிழகத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து, சமூக வலைதளங்களில் பொய் செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிக்கிறது. தமிழ் மக்களாகிய நாம், 'உலகம் ஒன்று' என்ற கருத்தை நம்புகிறோம். வட மாநில நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், கேவலமான வெறுப்பையும் ஆதரிக்கவில்லை.உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தி தொழில், சேவை துறைகளில் இடம்பெயர்ந்த சகோதர, சகோதரிகளின் பங்களிப்பை, தமிழக மக்கள் ஏற்று வரவேற்கின்றனர். வட மாநிலத்தவர்களை பற்றி, தி.மு.க., - எம்.பி.,க்களின் கீழ்த்தரமான கருத்துகள், தி.மு.க., அமைச்சர் 'பானிபூரி வாலா' என்று அழைத்தது, கூட்டணி கட்சியினர் அவர்களை வெளியேற்ற கோருவது ஆகியவை, இன்று நாம் பார்ப்பதை துாண்டியுள்ளது.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி களின் கருத்துகளை மக்களும், அரசும், காவல் துறையும் ஆதரிக்கவில்லை. தி.மு.க., எப்போதும் கடைப்பிடிக்கும் பிளவு, அவர்களை மீண்டும் தாக்க வருகிறது. தற்போது, இந்த நிலையை சரிசெய்வது அரசின் பொறுப்பு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் தான் என் சொந்த ஊர். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். குடும்பத்துடன் இங்கு தான் தங்கியுள்ளேன். இங்கு பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். வேலை இல்லை என்ற நிலை இல்லை. தமிழகத்தில் இருப்பதால், எந்த அச்சமும் இல்லை. தற்போது ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊர் செல்கிறோம். கோவைக்கு, 10 நாட்களில் திரும்பி வந்து விடுவோம். தமிழகத்தில் எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.அனுாஜ், ஒடிசா



பீஹார் மாநிலத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்தோம். இங்கு சூலுாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். இங்கு எங்களுக்கு தொடர்ந்து வேலை கிடைத்து வருகிறது. வேலையில் எவ்வித பிரச்னையும் இல்லை. தமிழகத்தில் பாதுகாப்பாகத் தான் உள்ளோம்.
இதுவரை எங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அதேபோல, அனைத்து விதங்களிலும் நிறுவனத்தினர் எங்களை நல்லபடியாகத் தான் பார்த்துக் கொண்டனர். இன்னும், 10 நாட்களில் மீண்டும் கோவை திரும்புவோம்.லுக்மன், பீஹார்கோவை மாவட்டம், அன்னுார் மைல் கல்லில் உள்ள தனியார் மில்லில் ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். கடந்த சில மாதங்களாகத்தான் முழு ஷிப்ட் கிடைக்கிறது. ஓவர்டைம் வேலையும் கிடைக்கிறது. எங்கள் ஊரில் இருப்பதைவிட இங்கு நல்ல உணவு உண்டு. விடுதியில் வசதியாக உள்ளோம். இங்கு எந்த
பிரச்னையும் இல்லை. எந்த அச்சமும் இல்லை. வீண் வதந்தியை நம்பி, எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள், ஊருக்குத் திரும்பி செல்கின்றனர்.கயகா தண்டி, ஒடிசா



வாசகர் கருத்து (32)

  • rajan -

    பீடா வாயன் பாணி பூரி வாயன் பான்பராக் வாயன் வட இந்தியர்களுக்கு அறிவு கிடையாது ஆங்கிலம் தெரியாது என்றெல்லாம் இழிவாகப் பேசியது யார்? H. ராஜாவை பிகாரி என்று இடித்துரைத்தது யார்? இப்போது அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்காத குறைதான். ஒரு விடியோ உண்மையோ பொய்யோ எவவளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. இனி, பிகாரியை பார்த்தால், அவனுக்கு சலாம் அடிக்க வேண்டும் என்று சட்டம் கூட போடும் தமிழக அரசு. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் காவல் துறையும் தயக்கம் காட்டும் நடவடிக்கை எடுக்க. அவர்கள் hard workers sincere அவர்கள் இல்லா விட்டால் இங்கே கட்டுமான துறை படுத்து விடும் என்பது உண்மை தான். ஆனால் கும்பல் கும்பலாக சாலையை அடைத்துக் கொண்டுவருகிறார்கள். வழி விட மாட்டான். கேட்டால் திமிராகப் பேசுவான். இனிமேல் அவர்களுக்கு நாம் அடிமை மாதிரி தான். தமிழக அரசு ஆடிப் போய் விட்டது. பொய் விடியோ போட்ட BJP காரனை பிடிக்க உத்திர பிரதேசத்துக்கு சிறப்பு படையை அனுப்புகிறது. அது போல மோடியை பற்றி அவதூறு பேசும் இங்குள்ள கும்பலை பிடிக்க டெல்லியிலிருந்து சிறப்பு படையை மத்திய அரசு அனுப்பினால்....?இப்போது தமிழக அரசுக்கு பிரச்சினை U.P. காரன் தான். ஏனெனில அவன் BJP க்கு ஓட்டு போட்டவன். எனவே அவனை நுங்கு எடுக்க வேண்டும் அவ்வளவுதான். UP காரன் என்பதால் அவனை பிடிக்க மின்னல் வேகம். இதுவே பிகாரி யோ வங்கதேசத்தவனே செய்திருந்தால் .....?ஸ்டாலினுக்கு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்து விட்டான் UP BJP காரன். தமிழகத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக கெட்ட பெயரை BJP ஏற்படுத்தி வருகிறது என்ற பெயரில் மோடிக்கு எதிரான மனநிலையை வட இந்தியர்களிடம் ஏற்படுத்தி மோடிக்கு ஓட்டு போடாமல் செய்து 2024 ல் மோடியை வீழ்த்த சந்தர்ப்பத்தை தமிழ் நாட்டில் உள்ள 20 லட்சம் வட இந்தியர்களுக்கு குடியுரிமை கொடுத்து வோட்டர் அடையாள அட்டை கொடுத்து திமுக கூட்டணிக்கு ஒட்டு போட வைக்கலாம்.

  • குரு -

    அனைத்து you tube channel மற்றும் memes creator ஒருங்கிணைந்து கடந்த 2 மாதமாக வட மாநில தொழிலாளர்கள் பற்றி மிகவும் கேவலமான கீழ்தரமான கருத்துகளை பதிவிட்டு மகிழ்தனர்.இந்த மூலம் அவர்களது மீது மெல்ல மெல்ல வெறுப்புணர்வு கட்டாவிழ்துவிட்டனர்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் நம் தமிழ்நாட்டில் அனைத்து மக்குளும் வேலை செய்யலாம் தானே.மேலும் அவர்கள் அடித்தட்டு மக்கள். கடுமையாக உழைத்து சொந்த பந்தங்களை காக்கின்றனர். யாரையும் ஏமாற்றவில்லை. விடலை காதல் இல்லை.சினிமா மாயை கிடையாது.குடிப்பழக்கம் அறவே இல்லை.அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்த இங்கே ஒரு கூட்டம் முயற்சி பண்ணுகிறது. திராவிட மாடல் அனைவருக்குமான மாடல் என்று வாய்குவாய் சொல்லும் முதல்வர் இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும்.ஆட்சிக்கு வரும் முன் அனைத்து மக்களையும் உசுபெற்றி உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஆட்சி செய்ய ஆரம்பித்தவுடன் நல்ல தடுமாற்றம் தெரிகிறது.இதுவரை சம்பாதித்த பணம் கொண்டு 100 வருடங்கள் வாழலாம்.ஆனால் அடுத்த முறை ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பின் இந்த கீழ்தரமான செயல்களை செய்யாமல் இருபது நலம். தினம் பிரிவினை பேசி மக்களை குழப்பி துக்ளாக் ஆட்சி வேண்டாம்.ஒரு MP எப்போதும் கிரிஸ்துவர் எங்கே , முஸ்லிம் எங்கே என்று குதிபாரே அவரின் கருத்து என்ன.சீமான், வைகோ, திருமா போன்றோர் பிரிவினை தீயை பற்ற வைத்தனர்.அது அணையாமல் எரிய தொடங்கி உள்ளது. முதல்வருக்கு அறிவுரை கூற தகுதியான ஆட்கள் இல்லாததால் பீகார் பிராமணனை அழைத்து ஆட்சியால் அமர்ந்தனர்.இப்போது அதே பீகார் பிராமணனை அழைத்து ஆட்சியை எவ்வாறு ஐந்து ஆண்டுகள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற வேண்டிய நேரமிது

  • நடுத்தெரு நாராயணன் திருச்சி -

    அனைத்து பிரச்சினைகளில் இரட்டை வேடம் போடும் திமுக

  • Anbuselvan - Bahrain,பஹ்ரைன்

    தமிழகத்தின் எதிரிகள் மற்றும் இந்தியாவின் எதிரிகள் என கூறி இருந்தால் நன்றாக இருக்கும். சில கூட்டங்கள் இங்கே தனிநாடு வேண்டும் என்பது போல பேசுகிறார்கள் அதை கண்டிக்க யாரும் முன் வருவதில்லை.

  • T.sthivinayagam - agartala,இந்தியா

    பீகாரில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்த பாஜக கூட்டணி அரசின் நிர்வாக திறமையின்மையே பீகார் மக்களின் இடம் பெயரும் அவலநிலைக்கு காரணம். தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement