செங்கல்பட்டு அடுத்த, சென்னேரி இருளர் குடியிருப்பைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு, 'பத்மஸ்ரீ' விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த விழாவில் பங்கேற்று, கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
இருளருக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது, மனித குலத்திற்காக பாடுபட்டதன் பிரதிபலிப்பாக கொடுக்கப்படுகிறது.
முக்கியத்துவம்
பொதுவாக, பாம்பு பிடிப்போருக்கு, அதற்கான முக்கியத்துவத்தையும், மரியாதையையும் கொடுப்பதில்லை.
இருளர் பழங்குடியின மக்கள், தொன்றுதொட்டு பாம்பு பிடிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய இம்மக்களை பற்றி, ஒருவரும் பேசுவதில்லை; இது, வருந்தத்தக்க விஷயம்.
இந்தியாவின் பல இடங்களில், பாம்பு கடியால் பாதிக்கப்பட்டோருக்கு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், இவர்களால் தான் அந்த மருந்து தயாரிக்கப்படுகிறது என்பது, பெரும்பாலானோருக்கு தெரியாது.
இதை ஒரு தொழிலாக பாவித்து, அங்கீகரிக்க வேண்டும். இருளருக்கு நாம் நன்றியை மட்டும் தெரிவித்தால் போதாது; அவர்களுக்கான மரியாதையை பெற்றுத்தர வேண்டும்.
கல்வி அவசியம்
இருளர்களுக்கு, மருத்துவர்களுக்கு தரும் மரியாதையை வழங்க வேண்டும். சில தொழில்நுட்பங்களை, பாம்பு பிடி தொழிலில் கொண்டு வர வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும், பல திட்டங்களை இருளர் மக்களுக்காக செய்துள்ளன. இருளர்களில் ஒரு சிலர் முன்னேறி இருந்தாலும், பலர் வறுமையிலேயே வாடி வருகின்றனர்.
ஒரு இருளர் காலனி என்பது, மற்ற இடங்களை போல தார்ச்சாலை, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பெற வேண்டும்.
இங்குள்ள, 300 இருளர்களில் ஒருவர் கூட மத்திய, மாநில அரசு பணியில் இல்லை என தெரிகிறது. இருளர்களின் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் பிரதிநிதிகளை, என்னிடம் பேச சொல்லுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்து தருகிறேன். மாசி சடையன், வடிவேல் கோபால் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். என்னை மிகுந்த அன்போடு வரவேற்றனர்.
இவ்வாறு கவர்னர் பேசினார்.
தொடர்ந்து, சென்னேரி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
இதை ஏன் அண்ணாமலை செய்யக்கூடாது?