நாட்டில் எங்கும் காணப்படும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்ற கொடுமைகளை உருவாக்குவது - கொடூரர்கள். ஆனால், அன்றாடம் பார்க்கும், படிக்கும் தற்கொலைகள்... அவை தன்னைத்தானே உருவாக்கி, 'கொல்லும்' கொலைகள்.
தேர்வில் தோல்வி, கடன் பிரச்னை, குடும்ப சண்டை, ஆசை அல்லது பேராசையில், சிக்கலில் சிக்குண்டு வெளியே வர முடியாத அவதி, அலுவலக அவமானம், இப்படி இன்னும் பல, தற்கொலைக்கு காரணமாயிருப்பினும், எல்லாவற்றையும் விஞ்சி முதலிடம் பிடிக்கிற சமாச்சாரம், பாழாய்ப் போன காதல்!
ஒரு வகையில் இந்த கட்டுரையை அதன் அகழ்வாராய்ச்சி என்றும் கூட சொல்லலாம்.
காதலுக்கு எத்தனையோ வேர்கள், விழுதுகள். அதற்கு மூல காரணம் ஈர்ப்பு, வசீகரம். இந்த ஈர்ப்பு, ஈடுபாடாகிறது. பின்பற்றுதல், ஓட்டுதல்.
ஈர்ப்பு யாருக்கு, யார் மேல், எப்போது, எப்படி, எந்த தருணத்தில் என்பதற்கு எந்த கண்டுபிடிப்புமில்லை.
ஒருவரை தன்பால் ஈர்க்க, அவர்களின் கவனத்தை தன்பால் திருப்ப, ஆரம்பத்தில் உருட்டோ உருட்டு.
பெண்களின் மனது, கல்என்றாலும் பகட்டு, படாடோபம், ஜிகினாவுக்கு அவர்கள் மயங்காமல் இல்லை. ஆனால் அவை ஆரம்ப ஜோரோடு சரி... அப்புறம், சாயம் வெளுக்கும் போது வெறுப்பு.
கலகலப்பை பெண்கள் நிச்சயம் ரசிக்கின்றனர்; ஆனால் எல்லாரிடமும் இல்லை; தனக்கு வேண்டியவர்களிடம் மட்டும். கலைகளுக்கும், திறமைகளுக்கும் அவர்கள் அடிமை. சாதனைகளும், வெற்றிகளும் அவர்களை எளிதில் கவர்கின்றன.
பல சந்தர்ப்பங்களில் படாடோபியை விட, சாதுவின் மேல் அவர்களுக்கு கரிசனம். அவன் ஏன் மவுனம்; அவனுக்கு என்ன பிரச்னை...
காதல் என்பது பொறி. அது எப்போது எந்த, 'மைக்ரோ செகண்டில்' கதவை தட்டும் என்பது புதிர். அதை ஆரம்பித்து வைப்பது கண்.
காதலுக்கு கண் சிறந்த ஆயுதம். அதுவே மூலதனம். அந்த சக்தி தான் எதிராளியை தடுமாற வைக்கிறது, வீழ்த்துகிறது.
கல்லுாரி வாழ்வில் இந்த பார்வைக்காக, பசங்கள் தெருவில் அலைச்சல்,உளைச்சல். கோவில், கடை வீதி, ரயில், பஸ்... ஆனால் அவை பெரும்பாலும், 'கடலை' எனும் அகராதியில் அடிபட்டு போய் விடுவதே வாடிக்கை.
ஒருவரை பிடிப்பது சித்தம் என்றால், மனதிற்கு பிடித்த பின் அதை நிலைநிறுத்திக் கொள்வது பெரிய யுத்தம். அப்புறம், பிடித்தவர் செய்வதெல்லாம் பைத்தியமாய் பிடிக்கும். இதற்கு வேண்டி, எத்தனை எத்தனை காரணங்கள்...
அவர்களை கவர வேண்டி, இல்லாததை இருப்பதாக வித்தை, வினோத சேஷ்டைகள். விதவித டிரஸ், அலங்காரம். நகை, நட்டு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து தரிசனம்.
அதுவே, அடிக்கடி பார்க்கணும் என்று உந்தும்; வெறியாக வியாபிக்கும். எப்போது பார்க்கலாம்; என்ன பேசலாம்?
முதலில் தயக்கம், வியர்ப்பு, ரத்தத்தில் ஜிவ். அப்புறம் பார்த்ததும் படபடப்பு, பேசும்போது நாக்கு உள்வாங்கும். உதறல், உளறல், வார்த்தையில் பிசிறல், நெஞ்சுக்குள் கும்ம்மம்...'
பலுான் பறக்கும், படுத்தும், காய்ச்சல் காண வைக்கும், கிறங்க வைக்கும், கிறுக்காக்கும், கவனம் பிசகும். அதன் விளைவாய், உளறல் அப்புறம் புலம்பல்.
அசட்டுத்தனம் வழியும். 'ஆள்' போனதும் ச்சே, இப்படியெல்லாம் பேசியிருக்கலாமே... விட்டு விட்டோமே; இனி ஒரு வாய்ப்பு கிடைக்குமா... வாய்க்குமா, வாய்த்தாகணும். அணுகுவதெப்படி... கடிதம், வாட்ஸ் ஆப், வீடியோ கால்?
மனம் ஏங்கும், வீங்கும். அவளுக்கு ஏதாவது வாங்கித் தரணும். என்ன பூ, ஐஸ்கிரீம், புடவை ஏற்பாளா... 'பீச் ரெஸ்டாரென்ட்' சினிமாவுக்கு அழைப்போமா, வருவாளா?
இதற்கிடையே, பசங்கள்துாண்டுவர். 'வெறும் பேச்சும், சிரிப்பும் மட்டும்போதுமா; அடுத்த, 'ஸ்டெப்' எடுத்து வை!'
'அடுத்த ஸ்டெப்னா?'
'ஸ்பரிசம்... தொடு!'
ஆசை எழும்; ஆனால் வியர்க்கும். சரி, தொட்டு விடலாம் என்ற ஆர்ப்பரிப்பு. ஆளைப் பார்த்ததும் அவுட். அம்பேல், தளர்வு.
ச்சே, தொடுவது தவறு என்று மனம் சமாதானப்படும். இங்கே, தேடுதல் தான் விசேஷம்; அது தான் நிஜம். அதில் கிடைக்கும் ஜில்லும், ஜிவ்வும் சுகமோ சுகம்.
மனதளவில் தொடுதலும், ஸ்பரிசமும் இருப்பின், அது, காதல் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும்.
இந்த ஆசையும், உணர்வும் அவளுக்கும் இருக்கும். ஆனால், அழுத்தம். அடக்கியே வாசிப்பர். அது தான் பெண்மை; அவர்களின் மகிமை.
அதன் பின் கனவுகள், கற்பனைகளில் நினைவுகள் கொல்லும். நினைப்பு, பிழைப்பைக் கெடுக்கும்.
சில சமயங்களில், அது ஆக்கத்திற்கு, குறிப்பாக படிக்கும் தருணத்தில் படிப்புக்கு, மிகப் பெரிய எதிரி. கவனம் பிசகும்; விட்டம் பார்க்க வைக்கும்; பாடம் கசக்கும். 'லெக்சர்' காதில் விழாது; அவள், அவளே சரணம்.
ஆகையால், படித்து, வேலை தேடிய பின் காதலிப்பவர்கள், 'டிபாசிட்' இழப்பதில்லை. அதற்குள் யதார்த்தம் புரிந்து விடும். பின், முடிவெடுத்தால் பிரகாசிக்கலாம்.
காதல், சிலருக்கு சறுக்கல் என்றால், இன்னும் சிலருக்கோ ஏற்றம். அவளுக்காக படிப்பு... அவளை காட்டிலும் உயரணும், சாதிக்கணும், அவளுக்காக சம்பாதிக்கணும், வெற்றி பெற்று காட்டணும் என்ற முயற்சியும், எழுச்சியும் அடைவதும் உண்டு; வைராக்கியம் கொள்ள வைக்கும்.
இந்த மூர்க்கம் கூட, மேலே ஏற்றி விடும் ஏணி.
கதைகளிலும், கற்பனையை விட, நிஜத்திற்கு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தெருவில் இறங்கினால் காதலுக்கு பஞ்சமில்லை. கதைகளுக்கும், கடிதத்திலும் மெனக்கெட்டு, நேரிலும் வாசகியர் தங்கள் அனுபவங்களை கொட்டித் தீர்ப்பர்.
'இனியவளே, வானத்தை யார் வெல்லக்கூடும். ஒளிமயமான புதிர்காலம். யாரந்த நிலவு, நிலவே கலையாதே, அரபிக் காற்று...' இப்படி, 'தினமலர்' வாரமலரில் என் தொடர்களை, அதற்கு உதாரணமாக சொல்லலாம்.
கேரளாவில் பணிபுரியும் போது எத்தனையோ அனுபவங்கள்... நண்பர்களுடன் சேர்ந்து தங்கி இருந்த காம்பவுண்டிற்குள் ஒரு, '14' வயதை நண்பன் மயக்கிவிட, 'அவனுக்கு என்னை கட்டி வையுங்கள்; இல்லாவிட்டால் தற்கொலை' என அவள் மிரட்டல்.
'பதினெட்டுக்கு முன் திருமணம், குற்றம்' என்பதை புரிந்து கொள்ளாத பிடிவாதம். வீட்டினரே போலீசில் புகார்.
அவளிடம் புயல் குடி கொண்டு, மன வளர்ச்சியின்மை, இது தான் காதல் என்ற தவறான வயது கோளாறு; அது இல்லாவிட்டால் வாழ்வே இல்லை என்ற சூன்யம்.
அப்போது அவர்களை உணரவும், பிரித்தும் வைக்க, நாங்கள் நிறையவே பாடுபட வேண்டியிருந்தது; வேஷம் கட்ட வேண்டி வந்தது.
அன்று அவளுக்கு, எங்கள் மேல் வெறுப்பு. இப்போது, இரண்டு பேரும் வேறு வேறு திருமணம், குழந்தை, குட்டி என, வெவ்வேறு வீட்டில் சுகம் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
காதலுக்கு பல வழிகளிலும் எதிர்ப்பும், இடைஞ்சலும் எழுவதுண்டு. யார் எதிர்த்தாலும் ஒன்று சேர்ந்து, ஓடி வெற்றி பெறணும் என்று சினிமாக்கள் ஊதும், ஓதும்.
காதலின் வெற்றி எது?
திருமணமா, காதல் அதோடு முடிந்து விடுகிறதா... ஓடி, ஒன்று சேர்த்து விட்டால் போதுமா... நிச்சயமாயில்லை. அதன் பின் வாழ்ந்து காட்டுவதில் தான் வெற்றியே இருக்கிறது.
காதல் தாலியோடு முடிவதில்லை. 'யார் எதிர்த்தாலும் நீ மட்டும் போதும்' என்பதெல்லாம் பிதற்றல், வெறும் புகை.
வெற்றி பெற அன்பு தான் வேணும். புரிதல், உணர்தல் ஆத்மார்த்த நேசிப்பு, ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்தல் அவசியம்.
தள்ளியிருக்கும் போதிருக்கும் ஈர்ப்பும், வசீகரமும், அருகில் வந்ததும், 'ச்சே, இவ்ளோ தானா... இதற்காகவா இத்தனை அலைந்தோம்' என்று வடிந்து விடும்.
பணம், பகட்டு, உருட்டு, ஜாதி, மதம், அரசியல், அந்தஸ்து என்று எதிர்ப்புகள் வரலாம். அவற்றை எதிர்த்து போராடலாம்; போராடணும். ஆனால், காதல் பெயரை சொல்லி வாழ்க்கையை முறித்துக் கொள்வது கோழைத்தனம்.
பெற்றோர், உறவு, நட்பெல்லாம் வாழ்க்கைக்கு எப்போதும் தேவை. அவர்களின் உதவியும், ஒத்தாசையும் ஒதுக்க முடியாத ஒன்று. அவர்களை பகைத்துக் கொள்வது எளிது.
இது, புத்திமதி இல்லை, ஆலோசனை.
காதலை தடுப்பதும், புரிய வைப்பதும், அந்தந்த நேரத்தில் அவரவர்களுக்கு கசப்பாக இருக்கும்; விரோதியாக பார்க்க தோன்றும். அது, இயல்பு; எல்லாம் ஒரு மாயம்.
ஆனால், புகை மறையும் போது, வானம் வெளிச்சப்படும்; மனம் தெளியும். இங்கே யாருக்காகவும், யாரும் படைக்கப்படவில்லை; யாரை நம்பியும் யாரும் இல்லை.
ஒன்றில்லை என்றால் இன்னொன்று. அதுவும் சரியில்லை என்றால் அடுத்து பெரிய, 'க்யூ'வே பின்னால் காத்திருக்கிறது. 'ஒத்து வந்தால் ஒகே. இல்லாவிட்டால், 'குட் பை' டூ காதல். இந்த கொள்கையுடன் உள்ள பலரையும் சந்தித்திருக்கிறேன். இவர்கள் உலகம் புரிந்து, வெற்றியும் பெற்றவர்கள்.
காதல் என்கிற கறுப்பு துணியை, கண்ணில் கட்டிக் கொண்டு, 'ஒன்றாய் வாழணும்; இல்லாவிட்டால் ஒன்றாய் சாகணும்' என்பதெல்லாம் யோசித்து பார்க்கும் போது, படு அபத்தம். காதல் கைகூடா விட்டால் உடனே தாடி, கவிதை, விரக்தி, 'தண்ணி' தப்புங்க.
இந்த உலகம் விசாலமானது; விரிந்து பரந்தது. இங்கே நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் எத்தனையோ உண்டு. நமக்காக எத்தனையோ நெஞ்சங்கள்.
காதல் என்பது அலை தான். இங்கு அவற்றுக்கு பஞ்சமில்லை, ஓய்வதுமில்லை. ஒன்று போனால், அடுத்த கணத்தில் இன்னொன்று. போயிற்றே என்று வருத்தம் எழுவது சகஜம். காத்திருப்பும், காலமும் அவற்றை போக்கும்; மறக்க வைக்கும்; மறக்கணும். இதோ அடுத்த அலை, அதற்கடுத்தும் அலை.
'குட் லக்!'
பின்குறிப்பு: இன்னாபா... பேனாவால் இப்படி ஒரு குத்தா... துரோகி, கஸ்மாலம், கருங்காலி, காதல் பற்றி உனுக்கு இன்னா தெரியும்... பொறம்போக்கு என்றெல்லாம் சபிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை...
அடியேனுக்கும் அந்த அனுபவம் உண்டு, நிறையவே. இவ்விடத்திலும் காதல் திருமணம் தான்.
ஐந்து ஆண்டு, 'த்ரில்' அனுபவித்து, காத்திருந்து, உணர்வை கொடுத்து, வாங்கி, பகிர்ந்து, நெஞ்சை பிளந்து, பதுங்கி, ஏங்கி, சோர்ந்து, பரவசப்பட்டு, சில பல காரணங்களால் எதிர்ப்பு இருந்தாலும், கடைசியில் இரண்டு பக்கமும் சம்மதத்துடன் முடிச்சப் போட்டு, இன்னும் காதலித்துக் கொண்டிருக்கிற காதல் துரோகி நான்!
- என்.சி.மோகன்தாஸ்
எழுத்தாளர்
தொடர்புக்கு: 91 82204 45085
இ - மெயில்: ncmohandoss@yahoo.com
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!