ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், இன்று(பிப்.,27) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.மாலை 6 மணிநிலவரப்படி 74.79 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா., மரணம் அடைந்ததால், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த மாதம் 31ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது; இம்மாதம், 7ம் தேதி நிறைவடைந்தது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, தி.மு.க., தேர்தல் பணிகளை துவக்கியது. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., இடையிலான போட்டியாக தேர்தல் களம் மாறியது.

தி.மு.க., சார்பில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள், ஒரு மாதமாக தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர். அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட்டன.
அந்த ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பகுதி மக்களை, அமைச்சர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பணம் மற்றும் பரிசு மழையில் நனைய வைத்தனர். வீடுகளுக்கு தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், ஆட்டுக்கறி, கோழிக்கறி என, அனைத்தையும் 'சப்ளை' செய்தனர். இந்த தேர்தலில் புதிய, 'பார்முலா'வாக, பணிமனை என்ற பெயரில், மக்களை ஒரே இடத்தில் காலை முதல் இரவு வரை அமர வைத்து, மூன்று வேளை உணவு, 500 ரூபாய் ரொக்கம் வழங்கினர்.
அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி; காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்; தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து, பிரேமலதா, அவரது மகன் விஜய பிரபாகரன், தம்பி சுதீஷ் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
ஒரு மாதமாக நடந்த பிரசாரம், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு நிறைவடைந்தது. இன்று காலை 7:00 முதல், மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. மொத்தம், 238 ஓட்டுச்சாவடிகளில், 1.11 லட்சம் ஆண்கள்; 1.16 லட்சம் பெண்கள்; 25 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்கள் ஓட்டளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
'ஓட்டுச்சாவடியில் இருந்து, 200 மீட்டர் தொலைவில், வேட்பாளர்கள் அலுவலகம் அமைத்துக் கொள்ளலாம். அதில், இருவர் மட்டும் இருக்க வேண்டும். தேவை இல்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுஉள்ளது.
தேர்தல் அமைதியாக நடக்க, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பலத்த பண மழை பொழிந்திருப்பதால், மாலை நிலவரப்படி 74. 79 சதவீத ஓட்டுப்பதிவு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வாசகர் கருத்து (43)
விலை குடுத்து வாங்கியாச்சு....
தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஈரோட்டில். தருமம் மறுபடியும் வெல்லும் 2024 ல்
இடைதேர்தல்ல யாருக்கு மாப்ள ஓட்டு போடுவ..? இளங்கோவனுக்கு தான் மாமா . கொள்கைகாவயா மாப்ள.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மாற்றப்படுமா...???
வாக்காளர்களுக்கு பணமும் பொருளும் அள்ளி தந்து வாக்குகளை பெற்றதால், ஈரோடு தேர்தலில் செல்லாத வாக்கு எண்ணிக்கையை அறிவிக்கும் போது இரண்டு பெரிய கட்சிகளுக்கு போடப்பட்ட ஓட்டுக்கள் கூட செல்லாதது என அறிவித்து, மற்ற 75 வேட்பாளர்கள் பெற்ற அதிக ஓட்டின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கபட வேண்டும். இது சாத்தியமில்லை என்பது எனக்கும் தெரிந்ததால், வெளியாக போகும் முடிவுகளை நிராகரிக்கும் பல குடிமகன்களின் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்பதிலும் திருப்தி- நிம்மதி.