ராய்ப்பூர்: ''பாரத ஒற்றுமை யாத்திரையுடன், கட்சியில் என் 'இன்னிங்ஸ்' முடிவடைந்தது, பெரும் திருப்தியை அளிக்கிறது,'' என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, தன் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரஸ் மாநாட்டில் பேசிய அவர், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வெல்ல, காங்கிரஸ் தலைமையில் பலமான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பெரும் திருப்தி
கடந்தாண்டு அக்டோபரில் நடந்த தேர்தலில், காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு பின் நடக்கும் இந்த முதல் மாநாட்டில், கட்சித் தலைவராக இருந்த சோனியாவின் சாதனைகளை விளக்கும், 'வீடியோ' ஒளிபரப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து சோனியா பேசியதாவது: கட்சியினர் அனைவருக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். என் மீது மிகுந்த அன்பு, மரியாதை வைத்துள்ளதற்கு நன்றி. பாரத ஒற்றுமை யாத்திரையுடன், கட்சியில் என் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்துள்ளது பெரும் திருப்தியை அளிக்கிறது. இது, எனக்கு வயதாகி விட்டது என்பதை உணர்த்துவதுடன், கார்கே தலைமையில் இளம் தலைமுறையினருக்கு வழி விடுவதற்கான நேரம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. மிக நீண்ட அனுபவம் உள்ள கார்கே, இளம் தலைமுறையினர் ஆதரவுடன் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 1998ல் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. கடந்த 25 ஆண்டுகளில் பல சாதனைகளையும் சந்தித்துள்ளோம்; மோசமான தோல்விகளையும் சந்தித்துள்ளோம்.
ஒற்றுமை யாத்திரை
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், 2004மற்றும் 2009 தேர்தல்களில் வென்று ஆட்சி அமைத்தது, தனிப்பட்ட முறையில் எனக்கு திருப்தியை ஏற்படுத்திய நிகழ்வுகள். இதையெல்லாம் விட பாரத ஒற்றுமை யாத்திரையுடன், என் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது பெரும் திருப்தியை அளித்துள்ளது. ராகுல் மேற்கொண்ட இந்த பாரத ஒற்றுமை யாத்திரை, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி மக்களுடன் உள்ளது; அவர்களுக்காக போராடக் கூடியது என்பதை இந்த யாத்திரை உணர்த்தியுள்ளது.
வெறுப்பு
தற்போது நாடு மிகவும் மோசமான காலகட்டத்தில் உள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, பணக்காரர்களுக்கான அரசாக உள்ளது. மக்களிடையே வெறுப்பு, பேதத்தை ஏற்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர், பெண்கள், தலித், பழங்குடியினர் மீது பெரும் தாக்குதலை இந்த அரசு நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியது, நாட்டின் வளர்ச்சிக்கான கடமையாகும்.
கட்சி உறுதி
காங்கிரஸ் என்பது வெறும் அரசியல் கட்சியல்ல; அனைத்து ஜாதி, மதம், பிரிவுகளையும் சேர்ந்த மக்களின் குரலாகும். அந்த மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதை கட்சி உறுதி செய்ய வேண்டும். வரும் 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் நாம் களமிறங்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், இதற்காக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தன் இன்னிங்ஸ் முடிந்து விட்டது என்று சோனியா கூறியுள்ளது, அரசியலில் இருந்து அவர் விலகப் போகிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகியது குறித்தே அவர் குறிப்பிட்டுள்ளதாகவும், தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபடுவார் என்றும் மூத்த தலைவர்கள் குறிப்பிட்டனர்.
காங்கிரஸ் மாநாட்டில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:நம் நாடு பல சவால்களை சந்தித்து வருகிறது. இங்கு ஜனநாயக மரபுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வருகிறது. ஒரு பக்கம் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது. அரசியல் சாசன அமைப்புகள் சீர்குலைக்கப்படுகின்றன. இது போன்ற சூழ்நிலையில், ௨௦௨௪ லோக்சபா தேர்தலில், பா.ஜ., அரசை தோற்கடிக்க வேண்டும்.
கடந்த 2004 - 2014ல், ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து மிகச் சிறப்பான அரசை காங்கிரஸ் கொடுத்தது. தற்போது அதுபோன்று ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் தயாராக உள்ளது. நாட்டின் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
காங்கிரஸ் மாநாட்டில், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மதச் சார்பற்ற சக்திகளின் ஒற்றுமையே காங்கிரசின் எதிர்கால அடையாளமாக இருக்கும். ஒருமித்த கருத்துடைய மதச் சார்பற்ற சக்திகளை அடையாளம் கண்டு, அவற்றை அணி திரட்டுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
காங்கிரசின் கொள்கைகள், சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகும் மாநில கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க வேண்டும். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி அமைந்தால், அது, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு சாதகமாகி விடும். தெளிவான முன்மாதிரியை உருவாக்கி மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்க நடவடிக்கை அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காங்கிரஸ் சட்ட விதிகளில் சில முக்கிய திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, காங்., செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, 25ல் இருந்து, 35 ஆக அதிகரிக்கப்படும்.எஸ்.சி., - எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பெண்கள், சிறுபான்மையினர், இளைஞர்களுக்கு செயற்குழுவில், 50 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்படும். முன்னாள் பிரதமர்கள், கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கு செயற்குழுவில் இடம் அளிக்கப்படும் என்பது போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து (24)
கான்க்ரஸ் தலைமயில் எவன் ஒத்து வருவான். கனகாணும் காலம். போலானாள் போகட்டும் போடா. என்ன தலைகீழ் நின்றாலும் பருப்பு வேகாது . உங்கள் குடும்பம் முழுவதும் ஒதுங்க வேண்டும் . ப சி மற்றும் பல ஊழல் பேர்வழிகள் ஒதுங்க வேண்டும். பிறகாவது மக்களுக்கு நம்பிக்கையயை யேற்படுமா பார்க்க வேண்டும். பாட யாத்திரைய்ய டெக்கனிக்கெல்லாம் மக்களிடம் எடுபடாது
நன்றி. இனியாவது குடும்ப பிடியில் இருந்து காங்கிரஸ் விடுபட்ட ஒரு சிறந்த பக்தி உள்ள இளைஞர்களின் கைக்கு போகட்டும்.
அப்பாடா....
உங்கள் இன்னிங்ஸ் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்றைக்கு பாஜக மத்தியில் ஆட்சியை பிடித்ததோ அன்றே உங்கள் இன்னிங்ஸ் முடிந்துவிட்டது. ஆனால் நீங்கள்தான் இன்றுவரை 'ஆட்ட கலத்தை விட்டு நகராமல் அங்கேயே பிடிவாதமாக உட்கார்ந்துகொண்டு இருக்கிறீர்கள்.'
அப்படியே இந்த மாதிரி தமிழ்நாட்டிலும் ஒரு குடும்ப கார்பொரேட் இருக்கு உங்களின் அறிவுரையை அதன் குடும்பத்திற்கும் சொல்வீர்களா?