புதுடில்லி 'அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச்செயலராக, முன்னாள் முதல்வர் பழனிசாமியை தேர்வு செய்ய, கடந்தாண்டு ஜூலை ௧௧ல் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும். பழனிசாமி இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும்' என்ற, அதிரடி தீர்ப்பை நேற்று வழங்கியது உச்ச நீதிமன்றம். இதன் வாயிலாக, சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
பின், இரு தலைவர்கள் இடையே சமரசம் ஏற்பட்டு, ஒன்றாக இணைந்தனர். இதன்படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் பொறுப்பேற்றனர். கடந்தாண்டு கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டது.
மேல் முறையீடு
இதையடுத்து, கடந்தாண்டு ஜூன் ௨௩ம் தேதி, அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், கட்சியில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்க, மற்றொரு பொதுக் குழுவை கூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜூலை ௧௧ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக பழனிசாமியை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி விசாரித்தார். கடந்தாண்டு ஆக., ௧௭ல் அளித்த தீர்ப்பில், 'பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது செல்லாது' என, குறிப்பிடப்பட்டது.
இதை எதிர்த்து, பழனி சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்தது. கடந்தாண்டு செப்., ௨ல் பிறப்பித்த உத்தரவில், 'ஜூலை ௧௧ல் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டம் செல்லும்' என, தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஷ்வரி அடங்கிய அமர்வு, கடந்த மாதம் ஜன., ௧௧ல் தீர்ப்பை ஒத்தி வைத்தது.
இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அ.தி.மு.க., பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, கடந்தாண்டு ஜூலை ௬ல் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், பொதுக்குழுவை கூட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அந்த உத்தரவின்படி நடத்தப்பட்டதால், ஜூலை ௧௧ல் நடந்த பொதுக் குழு கூட்டம் செல்லும். எனவே, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்கிறோம்.
உரிய உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியான, அ.தி.மு.க.,விற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தால், அதற்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்தது.
இதற்காக அமர்வு கூறியுள்ள காரணங்கள் மற்றும் வழக்கின் தன்மை ஏற்புடையதாக உள்ளது.கட்சியின் உயர்மட்ட அமைப்பாக பொதுக்குழு உள்ளது. இந்நிலையில் அந்தக் கூட்டம் நடத்தப்படுவது, அதில் எடுத்த முடிவுகளில் உத்தரவிடுவது, கட்சி விவகாரத்தில் தலையிடுவதாக அமைந்து விடும்.
கடந்தாண்டு ஜூலை ௧௧ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்களை எதிர்க்கும் வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு, அந்த வழக்கில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.இவ்வாறு உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தொண்டர்கள் கொண்டாட்டம் 'அ.தி.மு.க., பழனிசாமி தரப்பில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, அ.தி.மு.க., தொண்டர்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நேற்று வெளியானதும், சென்னையில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்கள், உற்சாக குரல் எழுப்பினர்; பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர். கூடியிருந்தவர்களுக்கும், சாலையில் சென்றவர்களுக்கும், வாகனங்களில் சென்றவர்களுக்கும் இனிப்புகள் வழங்கினர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பழனிசாமி, 'கட் அவுட்'டுக்கு, பால் அபிஷேகம் செய்தனர். சில தொண்டர்கள் உற்சாக மிகுதியில், எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா சிலைக்கு முத்தம் கொடுத்து மகிழ்ந்தனர். இதேபோல, தமிழகம் முழுதும், பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்ட அ.தி.மு.க., தொண்டர்கள், மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரம் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், சோகத்தில் மூழ்கினர். பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் இருந்ததால், சென்னையில் அவர் வீடு இருந்த பக்கம், தொண்டர்கள் யாரும் வரவில்லை
.
பொதுச்செயலராவது எப்போது ?
அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாவது: ஏற்கனவே உயர் நீதிமன்ற அமர்வு, 'பொதுக்குழு கூட்டப்பட்டதும், அதில் நிறைவேற்றிய தீர்மானமும் செல்லும்' என்ற தீர்ப்பை வழங்கியது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ௧.௫ கோடி அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, இந்த தீர்ப்பு மிகப்பெரிய மகிழ்ச்சி தரும். பன்னீர் செல்வத்திற்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இனி, அ.தி.மு.க., எழுச்சியோடு கட்சிப் பணியாற்றும். கட்சியின் பொதுச் செயலராவது குறித்து, மூத்த நிர்வாகிகளுடன் பேசி, பின்னர் முடிவு செய்யப்படும். தனிக்கட்சி துவங்கிய தினகரனுக்கு, எங்கள் கட்சி பற்றி பேச தகுதியில்லை. அவரது செல்வாக்கு, கடந்த தேர்தல்களில் நிரூபணமாகியுள்ளது.'கட்சிக்காக உழைத்தவர்கள் யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம்; ஒரு சிலரை தவிர' என, ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம். அந்த ஒரு சிலர் இறங்கி வந்தாலும், ஏற்பது இல்லை என்றாகி விட்டது. அவர்கள் தான் உச்சநீதிமன்றம் வரை எங்களை கொண்டு சென்றனர். அதனால் தான், பத்திரிகை, ஊடகங்களில் எங்களை திருப்பி திருப்பி வறுத்து எடுத்தீர்கள். ஏற்கனவே நாங்கள், நான்கு ஆண்டு ஆட்சி நடத்தினோம். ஆட்சி ஆறு மாதம் இருக்குமா என்று கேட்டனர். அதே போல, இக்கட்சி இரண்டாக, நான்காக ஆகிவிட்டது என, தினமும் விவாதம் நடத்தினர். இப்போது ஒன்றாக வந்துள்ளது. எதிர்காலத்தில் அ.தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும்.பொதுக்குழு செல்லும் என்பதால், ரவீந்திரநாத் எம்.பி., உட்பட பலர் நீக்கப்பட்டதும் செல்லும். அவை நடைமுறைப்படுத்தப்படும். பன்னீர் செல்வம் உடன் சென்ற எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,யின் நிலை குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். தினகரன், பன்னீர்செல்வத்துடன் இருந்தவர்கள், தீர்ப்புக்கு பின் இனி எங்களுடன் வருவர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (18)
ஓ.பி.எஸ் அத்வானி மாதிரி ஒதுங்கிக்கொள்வது நல்லது .
எல்லம்மன் திமுக குடுமப அரசியலை கவனியுங்கள் .அதிமுக தொண்டர்கள் கட்சி .அதிமுகவில் யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம் .
மகிழ்ச்சி. எப்படியோ அதிமுக, திமுக இரண்டும் ஒழிந்தால் சரிதான்.
அடிமை தி மு க ஜாதி கட்சியாக சுருங்குவதை உண்மை தொண்டனால் ஜீரணிக்கவே முடியாது. அந்த அஜீரணம் வரும் தேர்தல்களில் கடுமையாக எதிரொலிக்கும்.
எடப்பாடி வெற்றி. (சசி, தினகரன், பன்னீர் முயற்சி தோல்வி. திராவிடர்களுக்கு பின்னடைவு.) காமராஜ் காலத்தில் அவர் ஜாதியினர் அரசியல் பலன் பெற்று, பின் பலர் தொழில், வியாபாரம் செய்ய துவங்கி விட்டனர். MGR காலத்தில் SDS மூலம் சமூகம் அரசியலில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்தது. அதிகம் முடியவில்லை. ஜெயா காலத்தில் சசி மற்றும் அவர் சமூக ஆதிக்கம் உச்ச கட்டம். அதன் பின் (எடப்பாடி) அண்ணா திமுக பலம் காண வன்னியர், கவுண்டர், மறவர், சிறுபான்மை தயவை நாடி வருகிறது. இந்த சமூகத்தினர் அனைத்து அரசியல் கட்சியில் உள்ளனர். திராவிட இயக்கம் மதம், சாதியை நம்புகிறது. ஆதிக்கம் செலுத்தாத சாதிமக்கள் ஒருங்கிணைந்து ஆதிக்க சாதியினருக்கு (எந்த கட்சியில் இருந்தாலும்) வாக்களிக்க மாற்றி யோசிக்க வேண்டும். திராவிட இயக்கம் தோன்றிய பின் நில புலன்கள் ஏராளம் ஆதிக்க சாதியினர் வசம் சென்று வருகிறது.? குல தொழில் மக்கள் குடி கெட்டு வருகிறது. மாற்று பிஜேபி தான். அல்லது புதிய கட்சி.