ADVERTISEMENT
புதுச்சேரி, : செல்வமகள் திட்டத்தில் பெற்றோர் பங்களிப்பு தொகையுடன் அரசும் பணம் செலுத்தும் என முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். .
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. துறை இயக்குனர் முத்துமீனா வரவேற்றார். முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
அரசு பராமரிப்பில் உள்ள 47 குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதல்கட்டமாக தலா ரூ. 250 செலுத்தி முதல்வர் ரங்கசாமி அஞ்சலக புத்தகத்தை வழங்கி பேசியதாவது:
பெண் குழந்தை பிறந்தாலே முகம் சுளிக்கும் காலம் இருந்தது. இந்த மனநிலையை மாற்றவே, 'மகளை காப்போம், மகளுக்கு கற்பிப்போம்' என்ற திட்டம் துவங்கப்பட்டது.
பெண்கள் இன்று எல்லா இடங்களிலும் உயர்ந்து நிற்கின்றனர்.பெரிய பதவிகளில் உள்ளனர். பதக்கங்களை வாங்குகின்றனர்.நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றனர். பெண் குழந்தைகளை காக்க வேண்டும் என்ற உணர்வு அனைவருக்கும் வர வேண்டும். பெண் குழந்தைகள் மீது அன்பு காட்டி, அவர்களை நன்றாக பெற்றோர் வளர்க்க வேண்டும்.
பெண்களுக்கு கல்வி மிகவும் அவசியமானது. பெண்களுக்கு கல்வி கொடுப்பதிலும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும் புதுச்சேரி அரசு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
செல்வ மகள் திட்டத்தில் கணக்கு துவங்கினால், அதிக வட்டியுடன் திருமணத்தின்போது பணம் திரும்ப கிடைக்கும். இத்திட்டத்தில் பெற்றோர்கள் பணம் செலுத்த வேண்டும். செல்வ மகள் திட்டத்தில் பெற்றோர் பங்களிப்பு தொகையுடன் அரசும் கூடுதலாக பணம் செலுத்தும் என்றார்.
தொடர்ந்து, விழாவில் சாதனை புரிந்த மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. துறையின் இணை இயக்குனர் அமுதா நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!