மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; பல ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இதைத் தவிர, 6,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
அவற்றிலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கிஇருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், துருக்கி மற்றும் சிரியாவுக்கு தேவையான உடனடி உதவிகளை செய்யும்படி, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மருத்துவக் குழுவினர் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களும் நம் விமானப் படை விமானம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நேற்று நான்காவது விமானம், துருக்கியின் அதானாவை சென்றடைந்தது. இது குறித்து, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:
சர்வதேச அரசியலில், நாம் தினமும் பல ஏற்ற, இறக்கங்களை பார்த்து வருகிறோம். ஆனாலும், அனைத்து நாடுகளுடனும் நட்புடன் இருக்கவே இந்தியா விரும்புகிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் உள்ளிட்டவற்றில் நம் நாட்டுக்கும், துருக்கிக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன.
இருப்பினும், வசுதைவ குடும்பகம் எனப்படும் இந்த உலகமே ஒரே குடும்பம் என்ற கோட்பாட்டின்படி மத்திய அரசு இயங்கி வருகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவது நம்முடைய தார்மீகக் கடமை. இதையடுத்து, ஆப்பரேஷன் தோஸ்த் என்ற பெயரில், நட்பின் அடிப்படையில், இந்த நாடுகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படுகின்றன.
குறிப்பாக மீட்புப் படையினர், ராணுவத்தின் மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டு வருகின்றனர். அங்கு தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான கருவிகளும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக இந்தியாவுக்கான துருக்கி துாதர் பிராட் சுனேல் கூறுகையில், ''துருக்கி மற்றும் ஹிந்தியில், நட்புக்கு தோஸ்த் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன். இந்தியாவுக்கு நன்றி,'' என குறிப்பிட்டார்.
இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'துருக்கியில் 3,000 இந்தியர்கள் வசிக்கின்றனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசித்த 10 இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்; ஒருவர் மட்டும் மாயமாகி உள்ளார். இவரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. காணாமல் போனவரின் குடும்பத்தினருடன், மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகக் கடுமையான நிலநடுக்கத்தால் மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் பல்லாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் சிலர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர். சிரியாவில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தொப்புள் கொடி துண்டிக்கப்படாத நிலையில் அந்தக் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. அதே நேரத்தில் அந்தக் குழந்தையின் தாய் உயிரிழந்தார். இதுபோன்று சிரியாவில் ஒரு கட்டடத்தின் அடியில், ௧௭ மணி நேரம் சிக்கியிருந்த 7 வயது சிறுமி மற்றும் அவருடைய தம்பி உயிருடன் மீட்கப்பட்டனர்.இது தொடர்பாக ஐ.நா., பிரதிநிதி முகமது சாபா, சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தச் சிறுமி, இடிபாடுகள் இடையே சிக்கியுள்ளார். சுவருக்கு அடியில் சிக்கியுள்ள அந்தச் சிறுமி, தன் தம்பிக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவனுடைய தலையை பிடித்துள்ளார்.இந்தப் படம் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!