நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு மூடுவிழா: அரசு மானியத்தை பிடிக்கும் மத்திய கூட்டுறவு வங்கி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 22 பட்டு கூட்டுறவு கைத்தறி சங்கங்கள் உள்ளன. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த சங்கங்களில், 14 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள், 20 ஆண்டுகளுக்கு முன்பாக, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில், தங்கள் சங்கத்தின் உற்பத்தியை பொறுத்து, தொழிலை மேம்படுத்த கடன் வாங்கியிருந்தன.

நாளடைவில், தொழில் நலிந்ததால் கைத்தறி சங்கங்களும் நலிந்து போக துவங்கின. இதன் காரணமாக, மத்திய கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டியும், அசலும் சரிவர கட்ட முடியாமல் கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் திணறின.
கைத்தறி சங்கங்கள் வாங்கிய கடனுக்கு, 10 சதவீதத்துக்கும் மேல் வட்டி விதிக்கப்படுவதால், அசலும், வட்டியும் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய், நிலுவை தொகையாக உள்ளது. அதன்படி, அசல் மட்டுமே 14 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டும்.
நலிந்து போன கைத்தறி சங்கங்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு வட்டி மானியமாக, 6 சதவீதம் என, மாதம் 37 லட்ச ரூபாய் அரசு பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இந்த வட்டி மானியத்தொகையை கொண்டு, நலிந்த சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடனுக்காக, வட்டி மானியத்தில், 50 சதவீதம் பிடித்துக்கொண்டு, மீதமுள்ள 50 சதவீதம் தான், கைத்தறி சங்கங்களுக்கு, மத்திய கூட்டுறவு வங்கி வழங்கி வருகிறது.
இந்நிலையில், வட்டி மானியத்தை, 100 சதவீதம் பிடித்துக்கொள்ள போவதாக, கைத்தறி துறைக்கு, மத்திய கூட்டுறவு வங்கி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதனால், நலிந்த கைத்தறி சங்கங்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளன.
வட்டி மானியத்தொகை என்பது, ஒவ்வொரு கைத்தறி சங்கத்திற்கும் 1 லட்ச ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரை கிடைக்கிறது.
இதன்மூலம், நலிந்த கைத்தறி சங்கங்கள் செயல்படுவதற்கு உதவியாக இருக்கும் நிலையில், முழு தொகையையும் பிடித்துகொண்டால், சங்கங்கள் செயல்படுவதில் சிக்கல் எழும் என சங்க நிர்வாகிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சங்கர் கூறியதாவது:
விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள கைத்தறி தொழிலை நம்பி காஞ்சிபுரத்தில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளனர். நலிந்து போயுள்ள, கைத்தறி சங்கங்களுக்கு அரசு வழங்கும் வட்டி மானியத்தை, கடனுக்காக 100 சதவீதம் பிடித்துக்கொள்வதாக, மத்திய கூட்டுறவு வங்கி கூறுவது ஏற்புடையதல்ல.
ஏற்கனவே, 50 சதவீத வட்டி மானியம் பிடித்துக்கொண்டு, மீதமுள்ள 50 சதவீதம் தான், சங்கங்களுக்கு கிடைக்கிறது. மொத்த வட்டி மானியத்தையும் பிடித்துக்கொண்டால், சங்கங்கள் செயல்படாமல் முழுதுமாக முடங்கிவிடும்.
சங்கங்களை நம்பியிருக்கும் நெசவாளர்கள் குடும்பமும் பிழைக்க முடியாமல் போகும். நலிந்த சங்கங்கள் தர வேண்டிய தொகையான, 14 கோடி ரூபாயை, வாராக்கடனாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
அதேபோல், நலிந்த கைத்தறி சங்கங்கள், தங்களின் பட்டு சேலைகளை, 'கோ- ஆப்டெக்ஸ்' நிறுவனத்திற்கு விற்கின்றன. பட்டு சேலைகளை விற்ற தொகையிலும், 50 சதவீதம் மத்திய கூட்டுறவு வங்கி பிடித்துக்கொள்கிறது.
இவ்வாறு, அனைத்து வகையிலும், 50 சதவீதம், 100 சதவீதம் என பிடித்துக்கொண்டால், எப்படி தொழில் செய்ய முடியும்.
இதனால், சங்கங்கள் அனைத்தையும் இழுத்து மூடும் நிலை உள்ளது. ஏற்கனவே சில சங்கங்கள் செயல்பட முடியாமல் உள்ளன. நலிந்த சங்கங்கள் தர வேண்டிய கடனை, மத்திய கூட்டுறவு வங்கி வாராக்கடனாக அறிவிக்க மறுக்கிறது. வங்கியின் பொதுக்குழுவில் இந்த விவகாரத்தை கொண்டு வர மறுக்கிறார்கள்.
நலிந்த சங்கங்கள் மீள, கடன் தொகையை வாராக்கடனாக அறிவித்து, தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நலிந்த கைத்தறி கூட்டுறவு சங்கங்கள்
மாமல்லன்
வரதராஜஸ்வாமி
பல்லவர்
வள்ளலார்
மகாகவி பாரதியார்
சி.வி.எம்.அண்ணாமலை
வி.பி.சிந்தன்
புரட்சித்தலைவி.ஜெ.ஜெயலலிதா
தீரர் சத்தியமூர்த்தி
அன்னை கஸ்துாரிபாய்
ஜெயேந்திரர்
காஞ்சிபுரம் ஈ.வெ.ரா.-பெரியார்
கிருஷ்ணா மார்க்கெட்டிங்
காஞ்சிபுரம் ப்ராஜெக்ட்
வெறும் ரூ.14 கோடி
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயும், விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயும், நகைக்கடனுக்கும் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயும் அரசு தள்ளுபடி செய்துள்ளது. நெசவாளர்கள் வாழ்க்கையை காக்க, வெறும் 14 கோடி ரூபாயை தள்ளுபடி செய்ய தமிழக அரசு யோசிக்கிறது.
வாசகர் கருத்து (3)
mattum endha salugaiyum kodukka
நெசவு தொழில் தெரிந்த (குல தொழில்) மக்கள் மட்டும் உறுப்பினர் மற்றும் அலுவலர்கள். அரசியல் தலைவர்கள் பெயரை நீக்கி, பழைய இடம்/தெரு பெயர் வைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் கைத்தறி சங்கங்கள் இணைக்க வேண்டும். பள்ளி சீருடை, அரசு நிகழ்ச்சி, அரசு அலுவலர்கள் குடும்பம் ஆண்டுக்கு இருமுறை கூட்டுறவு சங்கங்கள் மூலம் துணி வாங்க வேண்டும். பனியன், மருத்துவ துணிகள், தரை விரிப்புகள்.. ஒரு விற்பனை நிலையத்தின் கீழ். இது தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். ஏற்றுமதி வர்த்தகம் ஊக்குவிக்கும் முயற்சி செய்யுங்கள். திமுக வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் உதவிய நெசவளர்கள் ஒற்றுமை இல்லாமல் நிலை சீர்குலைந்து வருகிறது.
அம்பானி ,அதானி ,டாடா இவங்களைப் போன்ற ஏழைகளுக்கு எல்லாம் கோடிக்கணக்கில் பணம் திரும்ப வரலேன்னாலும் கடன் கொடுப்பாங்க ,நலிந்த மக்களுக்கு கழுத்தில் கத்தி வைத்து கடனைக் கட்டக் சொல்லுவானுங்க