இதற்கு ஹிந்து மத பெரியவர்களும், ஹிந்து இயக்கங்களை சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் துார்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ஷோபனா ரவி, சமீபத்தில் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்ற போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை தன், 'முகநுால்' பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இருவரும், சன்னதிக்குள் வரும் பக்தர்களிடம், 'காணிக்கையை உண்டியலில் போடுங்கள்; அர்ச்சனை தட்டில் போட வேண்டாம்' என கூறி கொண்டிருந்தனர். என்னிடமும் அப்படி சொல்லப்பட்டது. ஏன் என்பது போல அவர்களை ஏறிட்டு பார்த்தேன். அவர்கள் இருவரும் முகம் திருப்பி கொண்டனர்.
வரிசை மெதுவாக நகர்ந்தது. எனக்கு தெரிந்த அம்பாள் கீர்த்தனைகளை முணுமுணுத்துக் கொண்டே வரிசையில் முன்னேறினேன். வரிசையில் எனக்கு முன்பாக சென்றவர், அர்ச்சனை தட்டில் நுாறு ரூபாய் போட்டார். அர்ச்சகரோ, 'காணிக்கையை உண்டியலில் போடுங்கள்' என, சொன்னார்.
முன்னால் சென்றவர், காரணம் எதுவும் கேட்கவில்லை. அர்ச்சகர் சொன்னபடியே, காணிக்கையை உண்டியலில் செலுத்தினார். ஆனால், நான் அப்படி செய்யவில்லை. வழக்கம் போல, காணிக்கையை அர்ச்சனை தட்டில் தான் போட்டேன். இவ்வாறு ஷோபனா ரவி குறிப்பிட்டிருந்தார்.

ஏதோ உத்தரவு
இது குறித்து ஷோபனா ரவி நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் என்ன நடந்ததோ, அதை தான் முகநுாலில் பதிவாக போட்டிருந்தேன். அம்பாள் சன்னதிக்குள் நுழையும் போதே, ஒவ்வொருவரிடமும் குறிப்பிட்ட இருவர், 'காணிக்கையை அர்ச்சகர் தட்டில் போட வேண்டாம்; உண்டியலில் செலுத்துங்கள்' என்று கூறித்தான் அனுப்புகின்றனர்.
வழக்கமான நடைமுறைப்படியே, பலரும் அர்ச்சகர்கள் வைத்திருக்கும் கற்பூர தட்டில் காணிக்கை செலுத்துகின்றனர். எனக்கு முன்பாக சென்றவர், நுாறு ரூபாயை தட்டில் போட்டார். உடனே பதற்றமான அர்ச்சகர், 'இதை உண்டியலில் செலுத்துங்கள்' என்றார். அதையடுத்து, அவரும் தட்டில் போட்ட பணத்தை எடுத்து, உண்டியலில் செலுத்தினார். ஆனாலும், நான் கற்பூர தட்டில் தான் காணிக்கை செலுத்தினேன்.
அங்கு நடந்தது, சூழல் எல்லாவற்றையும் வைத்து நான் அறிந்து கொண்டது, ஏதோ ஒரு உத்தரவின் அடிப்படையில் தான், அங்கு எல்லாமே நடக்கிறது. கோவில் நிர்வாகம் அல்லது துறை மேலிடத்தில் இருந்து ஏதேனும் உத்தரவு வந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஈச்சனாரி கோவில்
சில வாரங்களுக்கு முன், இதே போல் கோவை ஈச்சனாரி கணபதி கோவிலிலும் நடந்து வருவதாக தகவல் வெளியானது. அங்கு அர்ச்சகர்களுக்கு நேரடியாக தட்டில் காணிக்கை போடுவது கூடாது. அர்ச்சகர்களுக்கு செலுத்தும் காணிக்கைக்கு என, தனியாக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அந்த உண்டியலில் தான், பக்தர்கள் காணிக்கையை செலுத்த வேண்டும்.
இந்த காணிக்கையை, சில நாட்களுக்கு பின் எடுத்து எண்ணுவர். அதில் சேர்ந்திருக்கும் பணத்தில் இருந்து 10 சதவீதத்தை, கோவில் நிர்வாகத்திடம் கொடுத்து விட வேண்டும். மீதமுள்ள பணத்தை, எத்தனை அர்ச்சகர்கள் இருக்கின்றனரோ, அவர்கள் சரி சமமாக பிரித்து எடுத்து கொள்ள வேண்டும் என்ற புதிய முறையை பின்பற்றுகின்றனர் என தகவல் வெளியானது.
மரபு மீறல்
இது குறித்து, ஹிந்து தமிழர் கட்சியின் நிறுவன தலைவர் ராம ரவிகுமார் கூறியதாவது: தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சராக சேகர்பாபு வந்த பின், கோவில் நடைமுறையில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். கோவில் பணத்தை எடுத்து, பல்வேறு மக்கள் நலப் பணிகளுக்கு செலவழிப்பது, கோவில் நகைகளை உருக்கி, அரசு கஜானாவுக்கு கொண்டு செல்வது என பல விஷயங்களை, மரபுகளை மீறி துணிச்சலாக செய்து வருகிறார்.
கொரோனா காலத்தில், கோவில் உண்டியல் காணிக்கை பணத்தை எடுத்து, மருத்துவமனைகளுக்கு வரும் கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு சாப்பாடு வழங்கியதில் துவங்கி, கோவிலுக்கு சம்பந்தமில்லாத பல்வேறு பணிகளை செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தான், 'மக்கள் நலப் பணி என்ற பெயரில், கோவில் உண்டியல் பணத்தை எடுத்து செலவு செய்ய கூடாது' என, பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், 'ஹிந்து கோவிலில் பணியில் இருக்கும் அர்ச்சகர்களுக்கு, பக்தர்கள் நேரடியாக அர்ச்சனை தட்டில் காணிக்கை செலுத்தக் கூடாது. 'காணிக்கை முழுவதையும், ஒவ்வொரு கோவிலிலும் அறநிலைய துறை வாயிலாக வைக்கப்பட்டுள்ள உண்டியலில் தான் செலுத்த வேண்டும்' என, வாய்வழி உத்தரவு போட்டுள்ளனர். அது, பல கோவில்களில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அந்த வகையில் தான், ராமேஸ்வரம் கோவிலிலும் நடப்பதாக அறிகிறேன். இதனால் தான், ஹிந்து கோவில்களை விட்டு, அறநிலைய துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஹிந்து அறநிலைய துறை உயர் அதிகாரி கூறியதாவது:ஹிந்து அறநிலைய துறைக்கு சொந்தமான எந்த கோவில்களிலும் இப்படி நடைமுறை கிடையாது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரையும், காணிக்கையை இப்படி தான் செலுத்த வேண்டும் என்று எந்த வகையிலும் வற்புறுத்துவது கிடையாது.ராமேஸ்வரம் கோவிலுக்குள், யார் அப்படி பக்தர்களுக்கு அறிவுறுத்தல் செய்கின்றனர் என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். அப்படி ஏதும் நடக்குமானால், உடனடியாக அது நிறுத்தப்படும். விசாரித்து நடவடிக்கையும் எடுக்கப்படும்.வேறு எந்த கோவிலிலும் இப்படி நடக்கிறதா என்பது குறித்து துறை சார்பில் விசாரிக்கப்படும். அப்படி ஏதும் நடக்குமானால், அது தடுக்கப்படும்.மற்றபடி, அர்ச்சகர்களுக்கு தட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்தக் கூடாது எனவும், அதை கோவில்களில் செயல்படுத்த வேண்டும் எனவும், துறையிலிருந்து யாருக்கும் எந்த உத்தரவும் கூறவில்லை.இதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு மேலிடத்தில் இருந்து அறிவுறுத்தல் அனுப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்-.
- நமது நிருபர்-
வாசகர் கருத்து (99)
எல்லா அர்ச்சகர்களும் பூசாரிகளும் GPAY வைத்துக்கொள்ள வேண்டும். காணிக்கை தர விருப்பம் உடையவர்கள் GPAY செய்யலாம். யாரும் தடுக்க முடியாது
ஹிந்து என்று சொல்லிக்கொண்டால் தமிழகத்தில் வசிக்கக் கூடாது .... விடியல் தொடர்ந்தா இப்படியொரு சட்டம் வரலாம் ....
கோவில் ஒரு ஆன்மீக ஸ்தலம் .அங்கும் திமுக ஆட்சி செய்யவேண்டுமா .யோசியுங்கள் .மக்கள் திருந்தமாட்டார்கள் தி மு க ஒரு போலி .அது ஆட்சிக்கு வந்திருக்க கூடாது .
காணிக்கை உண்டியலில் தான் செலுத்தணும் என்று சொன்னால் யாரும் செலுத்த தேவை இல்லை... புறக்கணிப்போம் காணிக்கை செலுத்துதலை.
அர்ச்சகர் தட்டில் யாரும் காசு போடாவிட்டால் தான் அணைத்து பக்தர்களுக்கும் ஒரே மரியாதை கிடைக்கும் . காசு போடு பவருக்கு ஒரு மரியாதையும் போடாதவருக்கு ஒரு மரியாதையும் நடை பெறாது