Load Image
Advertisement

காதலியை சந்திக்க வந்த இளைஞரின் வாயில் சிறுநீர் ஊற்றிய கிராமத்தினர்

Tamil News
ADVERTISEMENT
ராஜஸ்தானில், ஜலுார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தன் காதலியை இரவில் சந்திக்க, பக்கத்து கிராமத்து இளைஞர் சென்றுள்ளார். ஆனால், அவர் அக்கிராமத்து மக்களிடம் பிடிபட்டார். இதையடுத்து, அவர்கள் இளைஞரை மரத்தில் கட்டி வைத்து, சரமாரியாகத் தாக்கினர்.

பின், ஒரு கும்பல் இளைஞரின் வாயில் சிறுநீரை ஊற்றி எச்சரித்து அனுப்பியது. இது குறித்த 'வீடியோ' வேகமாகப் பரவியது. இந்த வீடியோ பதிவின் வாயிலாக, போலீசார் பாதிக்கப்பட்ட இளைஞரை அடையாளம் கண்டு, அவரிடம் இருந்து புகார் பெற்றனர்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்தனர். 'அக்கிராமத்து பெண் அளித்த புகாரின்படி, இளைஞர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது' என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமியிடம் அத்துமீறல் வழக்கில் முஸ்லிம் மத போதகருக்கு சிறை



புதுடில்லியின் புராரி பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் மத போதகருக்கு எதிராக, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது. தன்னிடம் படிக்க வந்த, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவர் மீது, ௨௦௧௬ செப்.,ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த புதுடில்லி உயர் நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: முஸ்லிம்கள் புனிதமாக கருதும் குரான் குறித்து படிக்க வந்த சிறுமியிடம், மதபோதகர் அத்துமீறி நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத போதகர் என்பவர் சமூகத்தில் உயர்வாக கருதப்படுபவர். இதுபோன்ற கீழ்தரமான செய்கையில் ஈடுபட்டவருக்கு எந்தச் சலுகையும் வழங்க முடியாது. கீழ் நீதிமன்றம் அளித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பிரபல நடிகை மீது தாக்குதல்; கணவர் அதிரடியாக கைது



பாலிவுட்டில் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த். ஹிந்தி சேனலில் ஒளிபரப்பான, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி வாயிலாக மேலும் பிரபலம் அடைந்தார். இவர், அடில் துராணி என்பவரை, 2022ல் திருமணம் செய்தார். இருவரும், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தனர். இந்நிலையில், மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று அதிகாலை வந்த ராக்கி சாவந்த், கணவர் மீது பரபரப்பான புகார் அளித்தார்.
Latest Tamil News
கணவர், தன்னை தாக்கியதாகவும், தன்னிடமிருந்து, 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்றதாகவும் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அடில் துராணியை கைது செய்தனர்.

ராக்கி சாவந்த், செய்தியாளர்களிடம் கதறி அழுதபடியே கூறுகையில், ''அடில் துராணிக்கும், எனக்கும் அடிக்கடி தகராறு நடந்தது. அவர் மீது ஏற்கனவே இரண்டு முறை புகார் கொடுத்துள்ளேன். இனியும் அவருடன் சேர்ந்து வாழ முடியாது,'' என்றார்.

பஜ்ரங்தள பிரமுகர் சுட்டுக்கொலை



ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு உதய்பூர் நகரில் ஹிந்து அமைப்பான பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த ராஜு டெலி, 38, என்பவர் கடை வைத்திருந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு தன் கடைக்கு வெளியே வந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று விட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் மிதந்த ராஜுவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராஜு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காருக்கு அடியில் சிக்கி 10 கி.மீ., இழுத்துச் செல்லப்பட்ட உடல்



புதுடில்லியைச் சேர்ந்த வீரேந்திர சிங் என்பவர், நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு ஆக்ராவிலிருந்து நொய்டாவுக்கு காரில் சென்றார். மதுரா சுங்கச்சாவடி அருகே கார் வந்தபோது, அங்கிருந்தவர்கள் காரை நிறுத்தினர். காருக்கு அடியில் ஒரு உடல் சிக்கியுள்ளதாக தெரிவித்தனர்.காருக்கு அடியில் பார்த்தபோது, முற்றிலும் சிதைந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்கு, ஆண் சடலம் இருப்பது தெரியவந்தது.இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், வீரேந்திர சிங்கை கைது செய்தனர்.

இரண்டு குழந்தைகள் கொலை



சென்னை, சோழவரம் அடுத்த ஜகன்னாதபுரம் சத்திரம்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், வடமாநிலத்தைச் சேர்ந்த குட்லு, 30, என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர், அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று இரவு இவரது வீட்டில், 30 வயது வடமாநில பெண், 2 வயது ஆண், 1 வயது பெண் குழந்தை ஆகிய மூவரும் ரத்த காயங்களுடன் இருப்பதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இரண்டு குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டும், கல்லால் தாக்கப்பட்டும் இறந்து கிடந்ததைக் கண்டனர்.

தலையில் வெட்டு காயங்களுடன் மயங்கி கிடந்த வடமாநிலப் பெண்ணை மீட்டு, செங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயம் அடைந்த பெண் சோழவரம் அடுத்த இருளிப்பட்டு பகுதியில் வசித்து வருகிறார். சோழவரம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான குட்லுவை தேடி வருகின்றனர்.

ரூ.4,000 லஞ்சம் பெற்ற அலுவலர்கள் இருவர் கைது



கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் சந்திரசேகர், 48; இவர், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக உள்ளார். பாலக்கோட்டை அடுத்த தண்டுகாரனஹள்ளியை சேர்ந்த தனபால், 40, இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். அதே அலுவலகத்தில், சாலைப்பணியாளராக பணியாற்றுபவர் அரூரை சேர்ந்த குப்புசாமி, 42; மகள் திருமணத்துக்காக, தன் வருங்கால வைப்புநிதியிலிருந்து கடன் பெற முயன்றார்.

அவரிடம், கண்காணிப்பாளர் சந்திரசேகர், இளநிலை உதவியாளர் தனபால் ஆகியோர், 4,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். லஞ்சம் வழங்க விரும்பாத குப்புசாமி, தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அப்போது போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய, 4,000 ரூபாயை நேற்று, பாலக்கோடு அலுவலகத்தில் இருந்த, இளநிலை உதவியாளர் தனபாலிடம் குப்புசாமி கொடுத்தார்.

அவர் பணத்தை வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் தனபாலை பிடித்தனர். விசாரணையில், சந்திரசேகர் கூறியதால், குப்புசாமியிடம், லஞ்சம் வாங்கியதாக அவர் கூறினார்; சந்திரசேகரும் அதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து நேற்று மாலை, 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார், சந்திரசேகர் மற்றும் தனபாலை கைது செய்தனர்.

இரட்டைக் கொலை



தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஜொல்லம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல், 70; இவரது மைத்துனர் மணி, 65. பூர்விக நிலம் தொடர்பாக இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது. நேற்று காலை, 7:30 மணிக்கு வீட்டில் இருந்து, 17 வயது பேத்தியை கல்லுாரிக்கு, 'மொபட்'டில் மணி அழைத்துச் சென்றார். அப்போது, வழியில் அரிவாளுடன் வந்த தங்கவேல், திடீரென மணியை சரமாரியாக வெட்டிக் கொன்றார். தொடர்ந்து, மணியின் வீட்டில் உள்ளவர்களையும் கொலை செய்ய சென்றார்.

இதுகுறித்து அறித்த மணியின் மகன் சேட்டு, 45, டிராக்டரில் வேகமாக வீட்டிற்கு வந்தார். அவரையும் தங்கவேல் வெட்டினார். சேட்டு காலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சேட்டு, தான் ஓட்டி வந்த டிராக்டரை, தங்கவேல் மீது மோதச்செய்து அவரைக் கொன்றார். காலில் வெட்டு காயமடைந்த சேட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இரட்டை கொலை குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏட்டுக்கு 'பளார்' விட்ட வாலிபர் கைது



திருப்பூர் மாவட்டம், அவிநாசி, காந்திபுரத்தைச் சேர்ந்த கிட்டுசாமி மகன் தனபால், 34; அவிநாசி புது பஸ் ஸ்டாண்ட் அருகே தினசரி மார்க்கெட்டில் தேங்காய், பழக்கடை வைத்துள்ளார். நேற்று காலை தன், 'டூ - வீலரில்' புதிய பஸ் ஸ்டாண்ட் சென்றார். ஒரு வழிப்பாதையில், 'யு - டர்ன்' எடுக்க முயன்றார். இதைப்பார்த்த போக்குவரத்து போலீஸ்காரர் மோகன்குமார், 'யு - டர்ன் எடுக்க அனுமதி இல்லை' என, கூறினார். ஆனால், போலீஸ்காரரிடம் தனபால் வாக்குவாதம் செய்ததால் வாகன நெரிசல் ஏற்பட்டது.
Latest Tamil News
இதையறிந்து, புதிய பஸ் ஸ்டாண்டுக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு போக்குவரத்து போலீஸ் ஏட்டு அன்வர்தீன், தனபாலை அப்புறப்படுத்த முயன்றார்.அப்போது, அவரது கன்னத்தில் தனபால் அறைந்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த கைகலப்பில், போலீசார் வைத்திருந்த, 'வாக்கி டாக்கி' கீழே விழுந்து சேதமடைந்தது.

அதன்பின், போலீசார் தனபாலை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த தனபால் மீது போலீசார் மோகன்குமார், அன்வர்தீன் இருவரும் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, தனபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏழு வயது மகனுக்கு சூடு வைத்த தாய் கைது



கேரளா குமுளி அருகே அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் 32 வயதுடைய தாய். இவரது 7 வயது மகன் அருகிலுள்ள வீட்டில் டூ வீலர் டயரை விளையாடுவதற்காக எடுத்து வந்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த தாய் தீயில் வைத்த கம்பியை மகனின் கை மற்றும் கால்களில் சூடு வைத்தார். வலி தாங்காமல் துடித்த சிறுவனின் கண்களில் மிளகாய் பொடி தேய்த்து சித்திரவதை செய்துள்ளார்.

அங்கு சென்ற வார்டு கவுன்சிலர் ஜாய்மோள் புகார் செய்ததன்பேரில், தாயை போலீசார் கைது செய்தனர். சிறுவன் குமுளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement